பெண்ணாகடம் பெண்ணாடம் தூங்காணைமாடம் சுடர் கொழுந்தீஸ்வரர் பிரளய காலேஸ்வரர்
மூலவர் : பிரளயகாலேஸ்வரர் / சுடர்கொழுந்தீஸ்வரர்
அம்பாள் : அழகிய காதலி / ஆமோதனாம்பாள் / கடந்தைநாயகி
ஸ்தல விருக்ஷம் : செண்பகம்
தீர்த்தம் : கயிலை, பார்வதி, இந்திர, முக்குளம், வெள்ளாறு
புராணப்பெயர்: பெண்ணாகடம், திரு தூங்கானை மாடம்
பாடல் : அப்பர் சம்பந்தர், சுயம்பு, 34வது தேவார பாடல் பெற்ற சிவாலயம், நடுநாட்டு ஸ்தலம் 2
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வெள்ளத்திலிருந்து பூமியை காப்பதற்காக அன்று திசை திரும்பிய நந்தி இன்றும் வாசலை நோக்கியே திரும்பி இருக்கிறது.
கலிகம்ப நாயனார், மெய்கண்டார் அவதரித்ததும், மறைஞான சம்பந்தர் வாழ்ந்ததும் இங்குதான். கருவறையைச் சுற்றிலும் 3 பலகணிகள் அமைக்கப்பட்டுள்ளதால் மூலவரை மூலஸ்தானத்திற்கு வெளியே எந்த திசையில் நின்றாலும் வணங்கும் சிறப்பு பெற்றது.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கன்னியர்களாகிய பெண், காமதேனுவாகிய ஆ, யானை ஆகிய கடம் ஆகியோர் இங்கு பூஜை செய்ததால் இத்தலம் பெண்ணாகடம் ஆனது. இப்பொழுது பெண்ணாடம் என அழைக்கப்படுகிறது.
பிரளயகாலேஸ்வரர்
ஒரு முறை உலகம் சிவபெருமானால் அழிக்கப்பட்டது. அப்போது இத்தலம் தவிர அனைத்து இடங்களும் வெள்ளத்தால் மூழ்கியது. இதை அறிந்த தேவர்கள் இங்கு வந்து, உயிர்களை இத்தலத்தில் வைத்து காக்கும் படி வேண்டினர். சிவனும் நந்தியிடம் வெள்ளத்தை தடுக்க ஆணையிட்டார். சிவனைப் பார்த்திருந்த நந்தி, ஊரை நோக்கி திரும்பி, வெள்ளத்தை திசை மாற்றி பூமியை காத்தது. எனவே இங்குள்ள இறைவன் பிரளயகாலேஸ்வரர்.
கலிக்கம்ப நாயனார்
தன் மனைவியுடன் இணைந்து வீட்டிற்கு வரும் சிவனடியார்களுக்கு பாதபூஜை செய்து வந்தார். ஒருமுறை அவரது மனைவி சிவனடியார் ஒருவருக்கு பாத பூஜை செய்ய மறுத்து விட்டார். இதனால் கோபம் கொண்ட கலிக்கம்பர் மனைவியின் கையை வெட்டி விட்டார். கருணை கடலான ஈசன் அந்தப் பெண்ணின் கையை மீண்டும் தந்தார்.
திருநாவுக்கரசர்
இவர் சிவனிடம் தன் உடலில் திரிசூல முத்திரையும் ரிஷப முத்திரையும் பொறிக்க வேண்டினார். இவரது வேண்டுகோளை ஏற்று சிவன் இத்தலத்தில் தன் கைப்பட அவருக்கு முத்திரையை பொறித்தார்.
மலைக்கோயில்
சோழ மன்னன் ஒருவன் இறைவனை தரிசிக்க இத்தலம் வரும் பொழுது ஆற்றில் வெள்ளம் வந்தது. ஆற்றின் கரையில் இருந்தபடி சிவனை வேண்டிய பொழுது, அவனுக்காக தன் இருப்பிடத்தை உயர்த்தி கரையில் இருந்தபடியே தரிசனம் கிடைக்க செய்தார்.
இப்போதும் 30 மீ உயரத்தில் உள்ள கட்டுமலைக்கோவில் என்ற மேட்டுப்பகுதி கோவிலுக்குள் உள்ளது.
30 அடி உயரமுள்ள அழகான த்வஜஸ்தம்பம் அருகில் கிழக்கு நோக்கிய, பிரதோஷ நந்தி சந்நிதி உள்ளது.
மூலவரின் கர்ப்ப கிரஹத்தின் விமானம் ஐராவதம் வழிபட்டதற்கு அடையாளமாக யானை நிற்பது போல் (கஜபிருஷ்ட அமைப்பு )
மூலவர் சுயம்புலிங்கம் சற்று உயரமானது, ஆவுடையார் சதுர வடிவம் ஆனது, ஸ்தல விருக்ஷத்தின் கீழ் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒருமுறை தேவலோகத்தில் சிவபூஜை செய்ய, பூலோகத்து பூக்கள் தேவைப்பட்டது. தேவகன்னியர் இருவரை தேவேந்திரன் பூலோகத்திற்கு அனுப்பி பூக்களை பறித்து வர சொன்னான். பூமிக்கு வந்த கண்ணியர்கள் ஒரு நந்தவனத்தில் பூக்கள் இருப்பதைக் கண்டு அதை பறிக்கச் செல்கிறார்கள். அங்கிருந்த சிவலிங்கத்தை கண்டதும் பக்தியால் ஈர்க்கப்பட்டு பறித்த பூக்களை அவருக்கு பூஜை செய்து அங்கேயே தங்கி விட்டனர்.
கன்னியரை காணாத இந்திரன், அவர்களை அழைத்து வர காமதேனு பசுவை அனுப்பினான். அது பூலோகம் வந்ததும் கன்னியர் செய்யும் பூஜையைக் கண்டு தானும் அவர்களுடன் சேர்ந்து ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்து அங்கேயே தங்கி விட்டது.
இந்திரன் மீண்டும் தன் ஐராவத வெள்ளை யானையை அனுப்பினான். யானை பூமியில் இவர்கள் செய்யும் பூஜையை பார்த்துவிட்டு தானும் தன் பங்கிற்கு, திறந்த வெளியில் இருந்த சிவலிங்கத்தை மறைத்து நின்று வெயில் படாமல் பார்த்து கொண்டது.
பொறுமை இழந்த இந்திரன், பூமிக்கு வந்துவிட்டான். தன்னால் அனுப்பப்பட்டவர்கள் அனைவரும் சிவ பூஜை செய்வது பார்த்து அவனும் பூஜை செய்ய ஆரம்பித்து விட்டான். சிவன் அருள் பெற்று அனைவருடனும் தேவலோகம் சென்றான்.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கை வலி, கை எலும்பு முறிவு மற்றும் கை சம்பந்தப்பட்ட அனைத்து வகையான உடல் உபாதைகளும் தீர
கேட்டை நட்சத்திரப் பரிகார ஸ்தலம்.
வினை தீர்க்கும் விநாயகர் பிரார்த்தனை.
இயற்கைச் சீற்றங்கள் மற்றும் ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பு.
பக்தி மேம்பட மற்றும் முக்தி பெற பிரார்த்தனை
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சித்திரை 12 நாள் பிரம்மோற்சவம் தேர் திருவிழா
ஆடிப்பூர தேர்த்திருவிழா சிறப்பு. சித்திரைச் சதய விழாவில் அப்பர் சுவாமிகள் வைச சமயஞ்சார்ந்து, இறைவனை வேண்டி, சூலமும் இடபக்குறியும் பொறிக்குமாறு வேண்டிப்பெற்ற விழா கொண்டாடப்படுகிறது.
அம்பாளுக்கு ஆடிமாத உற்சவம் சிறப்பாக நடைபெறும்.
ஆவணிமூல விழா, நவராத்திரி,
சஷ்டி விழா, தைப்பூசம், மஹா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் முதலிய விழாக்களும் சிறப்பாக நடத்தப் பெறுகின்றன.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தேவகன்னியர் காமதேனு ஐராவதம் இந்திரன் மெய்க்கண்டார், கலிக்கம்ப நாயனார், மறைஞான சம்பந்தர்,
அப்பர், சம்பந்தர்,
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விருதாச்சலம் திட்டக்குடி சாலையில் 17KM
தொழுதூரிலிருந்து 15 KM
6AM – 11.30AM 4PM – 8PM
99940 88359 & 96003 17946 J.கார்த்திகேயன் குருக்கள்
83003 48715 M.கார்த்திகேய குருக்கள்
மலையப்பன் OFF
9488046050
கோயில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை
யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
அடங்கும் இடங்கருதி நின்றீ ரெல்லாம்
அடிக ளடிநிழற்கீ ழாளாம் வண்ணம்
கிடங்கும் மதிலுஞ் சுலாவி யெங்கும்
கெழுமனைகள் தோறும் மறையின்னொலி
தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே. 1
திருஞானசம்பந்தர்.


Leave a Reply