நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கல்யாண சுந்தரேஸ்வரர்
ஒரே நாளில் 5 முறை 5 நிறம் மாறும் லிங்கம் தெரியுமா..
ஒரே ஆவுடையாரில் இரண்டு லிங்கங்கள் இருப்பது தெரியுமா
7 துளைகள் இருக்கும் லிங்கம் தெரியுமா..
வைணவக் கோவில்கள் போல் சடாரி வைக்கும் சிவன் கோவில் தெரியுமா..
பூமியில் முதல் முதலாக தோன்றிய மரம், ஆதிமரம் தெரியுமா..
வெண்சாமரம் வீசியும் வியர்வைகள் அரும்பும் பெருமானை தெரியுமா..
உலகில் உள்ள 7 கடல்களின் நீரும் சேர்ந்த தீர்த்தம் தெரியுமா…
சிவபெருமானே நான்கு ராஜ வீதிகளிலும் நடந்து வந்த பெருமை பெற்ற ஊர் ( திருவாரூர் போல ) தெரியுமா ..
இது மிகவும் சிறப்பு வாய்ந்த, பல சிறப்புகள் வாய்ந்த ஆலயம்.. வாருங்கள் நல்லூர் சொல்வோம், நாதனை காண்போம், நல்வாழ்வு பெறுவோம்…
மூலவர் : கல்யாணசுந்தரேஸ்வரர்
உற்சவர் : பஞ்சவர்ணேஸ்வரர்
அம்பாள் : கல்யாணசுந்தரி
ஸ்தல விருக்ஷம் : வில்வம்
தீர்த்தம் : சப்த சாகரம்
பாடல் : அப்பர் சம்பந்தர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 20
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பஞ்சவர்ணேஸ்வரர் ஐந்து வண்ணங்களில் காட்சி தருகிறார்.. பிரபஞ்சத்தின் மாற்றத்திற்கு காரணமாக இத்தல ஈசன் விளங்குவதால் இத்தல லிங்கத்தின் நிறம் ஆறு நாழிகைக்கு ஒரு முறை மாறுகிறது. தாமிரம், இளஞ்சிவப்பு, தங்கம், மரகத பச்சை மற்றும் பெயர் அடையாளம் காண முடியாத வண்ணம்.. எப்படி என்று யாரும் அறிந்திடாத அதிசயம்.. எதனால் செய்யப்பட்ட லிங்கம் கல்லா மண்ணா உலோகமா எது என்றும் தெரியவில்லை..
பிரளய நேரத்தில் சப்தரிஷிகள் ஒடுங்கிய ஏழு துளைகள் இன்றும் லிங்கத்தில் காணலாம்.
குருக்கள் அழகாக விளக்கினார் .கர்ப்பகிரஹத்தின் வெளியே லிங்கத்தின் அருகே அமர்த்தி காண்பித்தார். மெய்சிலிர்க்க தரிசனம்..
கைலாச மலையில் திருமணம் காண முடியாது தென் திசை வந்த அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டிய இடம்.
கர்ப்பகிரஹத்தில் லிங்கத்தின் பின்னே திருமணக்கோலம் காணலாம்.
திருமணகோலத்தை தரிசித்த பின்னர் அகஸ்தியர் பூஜித்த சுந்தர லிங்கத்தையும் இங்கே காணலாம்.. ஒரே ஆவுடையாரில் இரண்டு லிங்கங்கள் இருப்பது உலகிலேயே இங்கு மட்டும்தான்
வாயு பகவான் ஆதிசேஷன் சண்டையில் கயிலை மலையிலிருந்து வாயுவால் தூக்கி வீசப்பட்ட இரு சிகரங்களில் ஒன்று. ( மற்றொன்று ஆவூர் ).
இந்திரனிடமிருந்து பெற்று வரப்பட்ட மரகத லிங்கத்தை ( விடங்கம் ) திருவாரூருக்கு கொண்டு செல்வதற்கு முன்பு, இத்தலத்தில் முசுகுந்தன் மூன்று நாட்கள் பூஜை செய்ததாக வரலாறு..
பிருங்கி முனிவர் வண்டு உருவத்தில் இறைவனை மட்டும் வலம் வந்ததலம் இத்திருத்தலம்
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நாராயணன் இத்தலத்து ஈசனிடம் இரணியனை அழிக்க எவ்வுருவம் எடுத்துச் செல்ல என வினவ, நரசிங்கனாக செல் என ஆசி வழங்கினார். அதற்கு ஆதாரமாக கருவறை விமானத்தின் பின்புறம் நரசிம்மனாக காட்சியளிக்கும் சிற்பம் அற்புதம்..
திருநாவுக்கரசருக்கு பாத தரிசனம் காட்டிய இடம். அதனால் இங்கு மட்டும் வைணவ கோவில்கள் போல் சடாரி மரபு..
இக்கோயில் சோமாஸ்கந்தர் திருவாரூர் தியாகராஜருக்கு ஈடானவர். FEB/MAR மாசி மகம் நாளில் ஊர்வலம் வரும்போது, மாடக்கோவிலின் படிகள் வழியாக இவர் இறங்கும் பொழுது அடியார்கள் வெண்சாமரமும் விசிறியும் வீசுவார்கள். ஆனாலும் கூட பெருமானின் முகத்தில் வியர்வை துளிகள் அரும்புவதை காணலாம்.
அமர்நீதி நாயனார் முக்தி ஸ்தலம். இவரை சோதிக்கவே இறைவன் பிரம்மச்சாரி ரூபத்தில் ( 4 ராஜ வீதிகளிலும் நடந்து வந்து )
தராசு தட்டில் மனைவி குழந்தையுடன் ஏறியவுடன் சமமாக, தராசு தட்டுடனையே முக்தி அளித்து கைலாயம் அழைத்துச் சென்றார்.
சுவாமி கீழேயிருந்து மலை வரை சுயம்புலிங்கமாக காட்சி தருவதால், கால் பட கூடாது என்று முதல் பிரகாரம் வலம் வருவதில்லை. கைலாய மாகவே காணுகின்றனர்.
இக்கோயிலில் உள்ள வில்வ மரமே பூமியில் முதன்மையாக தோன்றியது, So ஆதி மரம். இம்மரத்தின் வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்ய தனி அதிர்ஷ்டம் வேண்டும்.
மகம் நட்சத்திர கோவில் : மாசி மகத்திற்காக கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடுவது என்ன பலன் தருமோ அதேபோல இக்குளத்தில் நீராடினாலும் கிடைக்கும் என்கிறது புராணம்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பாண்டவர்களின் தாய் குந்தி தேவி, பஞ்ச பூதங்களுடன் குழந்தை பெற்றதால் தோஷம் ஏற்பட்டது. அவள் தீர்வுக்காக நாரதரை வேண்டினாள். உலகில் உள்ள ஏழு கடல்களில் நீராடினால் தோஷம் நீங்கும் என்கிறார். நான் பெண், என்னால் எப்படி, வேறு ஏதாவது வழி கூற வேண்டும் என்று வேண்டிய அவளிடம், கும்பகோணம் அருகில் உள்ள நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபடு, அதற்குள் வழி சொல்கிறேன். குந்தி இங்கு வழிபாடு செய்து வருவதற்குள், நல்லூர் தலத்தில் உள்ள குளத்தில் ஏழு கடல்களின் நீரையும் (சப்த சாகரம்) சேர்த்து விடுகிறார். மகம் நட்சத்திரத்தை சேர்ந்த குந்தி குளத்தில் குளித்து தோஷம் நீங்கியது. ( சிவ பெருமான் வருணன் மூலமாகவும் சேர்த்ததாக ஐதீகம் ). ஆதலால் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் விருப்பம் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
படிகள் ஏறும் பொழுதே கைலாச கணபதியை காணலாம்
கர்ப்பகிரஹத்தில் பிரம்மா விஷ்ணு சிவன் மூன்று பேரும் சுதா ரூபத்தில் இருக்கிறார்கள்.
மாடக்கோவில், சற்று உயரமான படிகள் ஏறி தரிசனம். மேலே பரமனை பார்த்துவிட்டு பத்து படிகள் இறங்கி வந்தால் அம்பாள். வரப்பிரசாதி.
அவளை தரிசித்து பத்து படிகள் கீழே இறங்கினால் அன்னை அஷ்டபுஜ மஹாகாளி. எட்டு கைகளுடன் கோவிலில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். இங்கு மஹாகாளி புன்னகை பூக்கும் இனிய நாயகி. மூத்த சுமங்கலி போல் மஞ்சள் பூசிய சாந்த முகம். மழலைச் செல்வம் இல்லாதவர்கள் காளியை வேண்டி, நிறைசூல் கர்ப்பிணியாக வளைகாப்பு நடத்திக் கொள்கிறார்கள். அவள் கைகளிலும் வளைகாப்பு. திருமணம் ஆக கல்யாண சுந்தரேஸ்வரர் அருள் புரிகிறார்.
சோழர்களுக்கு அருள் புரிந்த / வணங்கிய எட்டு காளிகளில் நல்லூர் காளி மிக முக்கியம்.
இது தவிர 8 கரங்களுடன் ஆடும் நடராஜர், காசி விஸ்வநாதர், கணநாதர் ஆகியோரும் உள்ளனர்.
இணைத்திருக்கும் புகைப்படங்கள் அரிதானவை. உதவி கோவில் SUPERINTENDENT திரு கார்த்திகேயன். ஐந்து நேரங்களில் ஐந்து நிறம் மாறும் லிங்கம் ஒரே புகைப்படத்தில். ஆடி மாத கணநாதர் பூஜை., ஞான தட்சிணாமூர்த்தி குருபூஜை, கோவில் துலாபாரம் சிறப்பு, மூலவர் திருமண கோலம் மூலவர் அம்பாள் புகைப்படங்கள் அலங்காரத்துடன், புத்திர பாக்கியம் அருளும் அஷ்டபுஜ மகா சந்தான காளி அலங்காரத்துடன்.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருமணத் தடை நீங்க
சுகப்பிரசவம் மற்றும் குழந்தை வரம்
மகம் நட்சத்திரத்தினர் வழிபாட்டுத் தலம்
பாவங்கள் மற்றும் தோஷங்கள் நீங்க
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பங்குனி உத்திரம் பெருவிழா
மாசி மகம் திருவிழா
அமர்நீதி நாயனார் குருபூஜை
மஹா சிவராத்திரி
திருவாதிரை
ஐப்பசி அன்னாபிஷேகம்
திருக்கார்த்திகை &
பிரதோஷமும் சிறப்பு
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஹாவிஷ்ணு, அகத்தியர், பிருங்கி முனிவர், வாயு, காகபுஜண்டர், குந்தி தேவி, முசுகுந்த சக்கரவர்த்தி, அமர்நீதி நாயனார், சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர், ராமலிங்க அடிகளார், மலைக்கொழுந்து நாவலர், அருணகிரிநாதர், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார்
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் பாபநாசத்திற்கு கிழக்கே சுமார் 2 -3 கி.மீ தொலைவில். மெயின் ரோட்டில் நல்லூர் சுந்தரபெருமாள் கோவில் (Sundara Perumal Koil) நிறுத்தம் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ அல்லது வாடகை வாகனம் மூலம் கோவிலை எளிதில் அடையலாம்
6AM – 12.30PM 4PM – 8PM
99424 39209 ரமேஷ் சிவாச்சாரியார்
96663 01651 பாலகுரு சிவாச்சாரியார்
94885 88450 திரு கார்த்திகேயன் கோவில் SUPERINTENDENT
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி
நட்டம் பயின்றாடும் நல்லூர்ப் பெருமானை
முட்டின் றிருபோதும் முனியா தெழுந்தன்பு
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே. 1
ஞானசம்பந்தர்
இப்படி பல நூறு ஆயிரம் விஷயங்கள்..
நல்லூர் சொல்வோம், நல்வாழ்வு பெற்றிடுவோம்..


Leave a Reply