திருவெண்ணைநல்லூர் தடுத்து ஆட்கொண்டநாதர் கிருபாபுரீஸ்வரர்
மூலவர் : கிருபாபுரீஸ்வரர் அருட்கொண்டநாதர், ஆட்கொண்டநாதர், வேணுபுரீஸ்வரர்
அம்பாள் : மங்களாம்பிகை வேற்கண்ணியம்மன்
ஸ்தல விருக்ஷம் : மூங்கில் புன்னை
தீ ர்த்தம் : தண்டு( சிவனார் கேணி ), பெண்ணை நதி, நீலி, காம,வேத சிவகங்கா, அருட்துறை, வைகுண்ட தீர்த்தங்கள்
புராணப் பெயர் : திருவருள் துறை,
பாடல் : சுந்தரர், சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம் 46 & நடுநாட்டு ஸ்தலம் 14
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிழவராக வந்து சுந்தரரோடு வழக்கு செய்த ஈசன், லிங்கமாக ஐக்கியமாகுமுன் கருவறைக்கு முன்பாக தான் கழற்றி வைத்த பாதுகைகள் இன்னமும் இத்தலத்தில் உள்ளது.
பொது தகவல்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இத்திருக்கோவில் திருவருட்துறை என்ற பெயருடையது. கருவறையில் அம்பிகை 4 திருக்கரங்களுடன் நின்ற திருமேனியாக அருள் புரிகிறாள். சுந்தரருக்கும் கிழவனாக வந்த ஈசனுக்கும் பெரியோர்களால் பஞ்சாயத்து நடந்த மண்டபம் இன்றும் உள்ளது.
ஸ்தல விநாயகர் = பொள்ளா பிள்ளையார்
பொள்ளாப் பிள்ளையார்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இத்தலத்தில் அருள் பாலிக்கும் பொள்ளாப் பிள்ளையார் – உளியால் செதுக்கப்படாத விநாயகர். சுயம்புவாக தானே தோன்றியவர். இவர் மெய்கண்ட தேவருக்கு 5 வயதில் ஞான உபதேசம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை ஊமையாய் இருப்பவர்கள் வழிப்பட்டால் பேச்சு வரும். அம்பிகை சந்நிதியில் 4 வகை எண்ணெய், நெய் இலுப்பு தேங்காய் ஆமணக்கு நல்லெண்ணெய் ஆகியவற்றை கலக்கி ஏற்றினால் திருமணவரம் குழந்தைவரம் தொழில்விருத்தி கை கூடும்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருமண நாளன்று, திருநாவலூரில் திருமண கோலத்தில் இருந்த சுந்தரரை, வயதான வேடம் கொண்டு ஈசன் தடுத்தாட்கொண்டார். நீ எனக்கு அடிமை என்று கூறி அதற்கான ஆதாரத்தையும் அங்கு கூடி இருந்தவர்களிடம் காட்ட, அதில் உள்ள கையெழுத்து உண்மையானது தான் என்பதை அறிந்த பெரியோர்கள் சுந்தரரை கிழவருக்கு அடிமையாக போகச் சொன்னார்கள். “மனம் தவிர்த்த புத்தூர்” என்ற பேராயிடுத்து அந்த ஊருக்கு. ஆதி சைவ குலத்தில் பிறந்தவர். அவர்கள் குலத்தோரின் கையெழுத்து தான்.
அப்புறம் இந்த ஊர்ல தான் வழக்காடு. இந்தக் கோவில்ல தான் முன்னாடி மண்டபம். முதலில் காட்டிய ஓலையை சுந்தரர் கிழிச்சு போட்டுட்டார். பார்த்தா கிழவர் இன்னொன்று எடுக்கிறார்.
கோபம் கொண்ட சுந்தரர், கிழவரை பித்தன் கிறுக்கன் என்றெல்லாம் திட்டினார். அதையெல்லாம் பொருட்படுத்தாத கிழவர், சுந்தரரை அழைத்துக் கொண்டு இந்த கர்ப்பகிரத்துக்குள் சென்று மறைந்தார். வந்தது இறைவன் தான் என்பதை அறிந்த சுந்தரர், ஈசனை வணங்கி நிற்க, என்னை பற்றி பாடு என ஈசன் கேட்க, எப்படி பாடுவது என சுந்தரர் கேட்க, என்னை பித்தா என்று திட்டினாயே அதையே பாடு என்று அடி எடுத்து கொடுத்தார்.
அப்போது தான் சுந்தரர், “பித்தா பிறைசூடி பெருமானே” என்ற புகழ்பெற்ற பாடலை பாடினார். அதிலிருந்து ஈசன் எழுந்தருளி இருக்கும் தலம் தோறும் சென்று திருப்பதிகங்கள் பாடி அற்புதங்கள் நிகழ்த்தி ஆண்டவனின் அறநெறியை பரவச் செய்தார்.
சுந்தரர் சரித்திரம் மட்டுமே கைலாயத்தில் துவங்கி கைலாயத்தில் முடியும். இந்திரன் பூர்ண கும்ப மரியாதையுடன் ஐராவதத்தில் வந்து, அவரை ஐராவதத்தில் கைலாயத்திற்கு கூட்டிச் சென்ற பேறு பெற்ற ஒரே ஒருவர்.
கோயிலுக்குள் நுழைந்தவுடன் வலப்புறம் வடக்குப் பக்கத்தில் சுந்தரரும் கிழவனாக வந்த ஈசனுக்கும் பெரியோர்களால் பஞ்சாயத்து நடந்த மண்டபம் இன்றும் உள்ளது. பரமன் நின்று சாய்ந்திருந்த தூணில் இன்றும் வெதுவெதுப்பாக உஷ்ணம் உள்ளது.
மேலும் பரமன் அடிவைத்த இம்மண்ணிலிருந்து சிறிதளவு மண்ணை எடுத்துச் சென்று பூஜையில் வைத்து பூஜிப்பவர்களும் உண்டு.
அர்ஜுனனுக்கு மகப்பேறு அளித்த விஜயலிங்கம் உள்ளது. தேவேந்திரன் பூஜித்த சுந்தரலிங்கம் உள்ளது. மஹாவிஷ்ணு பூஜித்த சங்கரலிங்கம் உள்ளது. இங்குள்ள சண்முக வரதர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்றவர். முருகன் திருப்புகழ் பாடிய அருணகிரி நாதருக்கு மயிலோடு நடனமாடி காட்சி தந்த திருத்தலம்.
மகிஷனை வதம் செய்ததால் ஏற்பட்ட ஆக்ரோஷம் நீங்க இங்கு நதியில் குளித்து மங்களம் பெற்ற ஸ்தலம் என்பதால் மங்களாம்பிகை. அவள் சன்னிதியில் நந்திக்கு பதில் சிம்மம் இருக்கும். சங்கநிதி, பதுமநிதி, ஸ்ரீ சக்கரத்துடன், சிம்மவாஹனத்துடன் அம்பாள் இங்கு அருள்பாலிக்கிறாள்.
பாண்டவரின் அர்ஜுனன் தன் மூத்தோனாகிய தருமனும் பாஞ்சாலியும் தனித்து இருப்பதை பார்த்த பாவத்தை இங்குள்ள இறைவனை வழிபட்டு போக்கி கொண்டான். மேலும் இறைவனை வேண்டி மகப்பேறு அடையவும் வரத்தை பெற்றான்.
கருவுற்ற பசுவை வேள்வி செய்த பாவத்தை விதகோத்திரர் எனும் அந்தணர் இத்தலத்திற்கு வந்து அருட்டுரை தீர்த்தத்தில் நீராடி, பாடி பணிந்து போக்கி கொண்டார். சடையப்ப வள்ளல் இவ் ஊரில் வாழ்ந்திருக்கிறார் என்ற சிறப்பும் முக்கியமானது.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தாருகாவனத்து முனிவர்கள் அகந்தையால் வேள்வி இயற்றி சிவபெருமானை கொல்ல ஏவினர். அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. எல்லாவற்றையும் சிவன் தன்னிடத்தே பெற்றுகொண்டார். முனிவர்கள் தங்கள் அகந்தை அழிந்து இத்தலத்தில் தவம் புரிந்தார்கள். இறைவன் அவர்களது தவறை பொறுத்து அருள் புரிந்தார். எனவே இவ்வாலயம் அருட்டுரை (அருள் துறை) என பெயர் பெற்றது. முனிவர்களின் தவறை மன்னித்து இங்கு இறைவன் கிருபை புரிந்ததால் கிருபாபுரீஸ்வரர் என பெயர் பெற்றார்.
வேதங்கள் இறைவன் ஆணைப்படி இங்கு தவம் புரிய, அவற்றின் நடுவில் இறைவன் தீயுருவாக தோன்றினார். அவை கேட்டுக்கொண்டபடி இங்கு சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார்.
அம்பாள் வெண்ணையால் கோட்டை அமைத்து வழிபட்டதால் வெண்ணெய் நல்லூர் என பெயர் பெற்றது. இறைவன் நஞ்சுண்ட காலத்தில் அந்நஞ்சு அவரை துன்புறுத்தாமல் இருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணையால் கோட்டை கட்டி, அதில் பஞ்சாக்னி வளர்த்து அதன் நடுவில் இருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய் நல்லூர் என பெயர் பெற்றதாக ஸ்தல புராணம் கூறுகிறது.
சைவ சமய சந்தனாச்சாரியாராகிய மெய் கண்ட தேவர் எழுந்தருளிய ஸ்தலம் இது. சைவ சித்தாந்த சாத்திரங்களும் தலையானதாக திகழும் “சிவஞானபோதம்” அருளி செய்தவர். அவர் சமாதி வடக்கு வீதியின் கோடியில் உள்ளது.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வழக்குகள் தீர, அகந்தை மற்றும் தடைகள் நீங்க பிரார்த்தனை.
இங்கு வந்து வணங்கினால் மனதுக்கு நிம்மதியும், வாக்கு வன்மையும் கல்வி கேள்விகளில் சிறந்த விளங்கும் ஆற்றலும் ஈசனின் அருளும் கிடைக்கும்.
தர்ம தேவதையே நந்தி வடிவில் இங்கு இருப்பதால், திருமணம் ஆகாதவர்கள் தாங்களும் மாலை போட்டு நந்திக்கும் மாலை போட்டு சுற்றினால் திருமண வரம் ஈடேறும்.
உடல் ஆரோக்கியம் தொழில் ஆகியவற்றிற்காக ஜப்பான் நாட்டில் இருந்து எல்லாம் இங்கு வந்து யாகம் நடத்துகிறார்கள்.
பூர்வ ஜென்ம பாவம் விலக யாகம் செய்கிறார்கள்.
நவகிரஹங்கள் வழிபட்ட ஜோதிலிங்கம் இத்தலத்தில் உள்ளது. மேலும் ஒரு விசேஷம். இங்குள்ள ஸ்தல விருக்ஷத்தை பூஜித்து பாலாபிஷேகம் செய்து 5 தீபம் ஏற்ற, நவகிரஹ தசா புத்தியால் ஏற்படும் எல்லா கஷ்டங்களும் நீங்க பெறுகிறார்கள்.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பங்குனி உத்திரம் தெப்பத் பெருவிழா, பிரம்மோற்சவம் கொடி தேரோட்டம் 10 நாட்கள் மிகவும் சிறப்பு.
ஆடி சுவாதி சுந்தரருக்கு குருபூஜை விழா மிகவும் சிறப்பு. ஆருத்ரா தரிசனம், மஹாசிவராத்திரி
திருக்கார்த்திகை
ஆவணி மூலம் புட்டு உற்சவம், கந்த சஷ்டி சிறப்பு.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அம்பாள், மஹாவிஷ்ணு துர்க்கை, வேதங்கள், இந்திரன் நவகிரகங்கள், அர்ஜுனன், விதகோத்திரர், தாருகாவனத்து மகரிஷிகள், மெய் கண்டார், கம்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், சேக்கிழார்,
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விழுப்புரம் மாவட்டத்தில் சென்னை-திருச்சி இடையே செல்லும் இருப்புப்பாதையில் திருவெண்ணெய்நல்லூர் சாலைத் தொடர் வண்டி நிலையத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
பண்ருட்டி & உளுந்தூர்பேட்டை
யிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.
6.30AM -12 NOON, 4. 30PM – 8PM
94440 58305 அருள்நந்தி சிவம் குருக்கள்
82488 83548 சங்கர் குருக்கள்
80155 51904 கீர்த்திவாசன் குருக்கள்
9787188802 சூரியசிவம் குருக்கள்
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?”
சுந்தரர்


Leave a Reply