திருவாளபுத்தூர் திருவாள்ஒளிபுற்றூர் மாணிக்கவண்ணர் ரத்தினபுரீஸ்வரர்
மூலவர் : மாணிக்கவண்ணர் ரத்தினபுரீஸ்வரர்
அம்பாள் : வண்டமர் பூங்குழலி, பிரம்ம குந்தளாம்பிகை
ஸ்தல விருக்ஷம் : வாகை
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
பாடல்: சம்பந்தர் சுந்தரர் சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம்
சோழ நாட்டு வடகரை ஸ்தலம் 29
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மகிஷாசுரனை அருகில் உள்ள கடத்தலை மேட்டில் சம்ஹாரம் செய்த துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி வடிவில், அமைதியாக இத்தலம் வந்து, சிவனை வணங்கி ஆசிபெற்றாளாம்.
இவள் கோஷ்டத்தில் எட்டு கைகளுடன் சிம்மவாகனத்துடன் இருக்கிறாள். இவளது இடது கீழ் கையில் கிளி இருப்பதும், ஆயுதங்களுடன் இருந்தாலும் சாந்த துர்க்கையாக அருளுவதும் விசேஷம். இதனாலேயே இங்கு முதலில் துர்க்கை அம்மனை வழிபடுகிறார்கள்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ருதுகேதன் எனும் மன்னன், இப்பகுதியை ஆட்சி செய்தபோது நாட்டில் கடும்பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பசியில் வாடினர். மக்களை காத்தருளும்படி மன்னன் வேண்டவே, சிவன் மாணிக்க மழையை பொழிவித்தாராம். எனவே இவருக்கு “மாணிக்கவண்ணர்’ என்று பெயர் வந்தது. மாணிக்க கல் வைத்து பூஜிக்கப்பட்டவர் என்பதால் இப்பெயரில் அழைக்கப்படுவதாகவும் சொல்வர். அர்ஜுனனின் வாளை ஒளித்து வைத்தவர் என்பதால் இத்தலம், “வாளொளிப்புற்றூர்’ என்று பெயர் பெற்றது.
அம்பாள் வண்டமர்பூங்குழல் நாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் பார்ப்பதற்கு வண்டுகளை கவரும் மலரை போன்ற அழகுடன் இருப்பதால் இப்பெயரில் அழைக்கின்றனர்.
கருவறையின் பின்புறம் லிங்கோற்பவரின் இருபுறமும் மஹாவிஷ்ணு மற்றும் பிரம்மா வழிபடும் தோரணையில் உள்ளது. திரிமூர்த்தி தரிசனம் சிறப்பு, மங்களம். கருவறை அகழி வடிவில் உள்ளது.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முன்னொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் எடுப்பதற்காக திருப்பாற்கடல் சமுத்திரத்தை கடைந்த பொழுது வாசுகி கயிறாகவும் மந்தார மலை மத்தாகவும் பயன்படுத்தினர். நீண்ட நாட்கள் ஆனதால் வாசுகி வலி தாங்க முடியாமல் விஷத்தை கக்கியது. மற்றவர்களை காப்பாற்ற சிவபெருமான் விஷத்தை உட்கொண்டார்.
விஷத்தை சிவபெருமானை உட்கொள்ள செய்ததற்காக வாசுகி குற்ற உணர்ச்சி அடைந்ததால் சிவபெருமானை வழிபடவும் மன்னிப்பு பெறவும் அவர் இந்த இடத்திற்கு வந்ததாக நம்பப்படுகிறது. தன் சக்தியை மீட்டு எடுக்க அவர் இந்த கோவிலின் ‘ஸ்தல விருக்ஷம்’ வாகை மரம் கீழே புற்றில் தங்கினார். சிவபெருமான் இங்குதான் வாசுகியை மன்னித்து தன் ஆபரணமாக மாற அருள் புரிந்தார். வாசுகி இங்கு புத்தில் தங்கி இருந்ததால் இத்தலம் புத்தூர் என பெயர் பெற்றது.
பிற்காலத்தில் அர்ஜுனன் இந்த இடத்திற்கு சென்ற போது, அவன் தாகம் தீர்க்க தண்ணீரைத் தேடிக் கொண்டிருந்தான். சிவபெருமான் ஒரு முதியவர் வடிவில் அவன் முன் தோன்றி, ஒரு தண்டம் கொடுத்து வாகை மரத்தின் அடியில் தண்ணீர் எடுக்கும்படி கூறினார், அவன் தன் வாளை முதியவரிடம் கொடுத்துவிட்டு தண்ணீர் குடிக்க சென்றான். முதியவரோ அருகிலிருந்து புற்றில் வாளை மறைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். அர்ஜுனன் நீர் அருந்திவிட்டு திரும்பியபோது, முதியவரை காணவில்லை. அவன் தேடியபோது, பாத தடம் இருந்ததைக் கண்டு பின்தொடர்ந்தான். அவை அருகிலிருந்த புற்றில் முடிந்தது. அந்த புற்றினுள் வாள் இருந்ததைக் கண்ட அர்ஜுனன் அதனை எடுத்த போது, சுயம்புலிங்கம் இருந்ததைக் கண்டான். சிவன் அவனுக்கு காட்சி தந்து, தானே முதியவராக வந்ததை உணர்த்தினார். பின் இவ்விடத்தில் கோயில் எழுப்பி வழிபட்டான். புற்றின் அருகே வாளை ஒளித்து வைத்ததால் வாள் ஒளி புத்தூர் ஆனது. தற்போது திருவாளபுத்தூர் என மருவியுள்ளது.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நுழைவாயில் வளைவு உள்ளது. ராஜகோபுரம் கொடிமரம் இல்லை. கிழக்கு நோக்கி அஷ்டபுஜ துர்கைக்கு முதல் வணக்கம்.
கோவில் முன் மண்டபம் வௌவால் நெற்றி பொட்டு போன்று அழகாக வடிவமைக்க பட்டுள்ளது. இங்கு ஸ்தல விருக்ஷத்தின் கீழ் அஷ்ட நாக விநாயகர் சன்னதி எறும்பு புற்று போல் உள்ளது.
மூலவர்கள் சன்னதி தவிர அனைத்து உபசன்னதிகளும் கோஷ்டமூர்த்தங்களும் உள்ளன.
குரு ஸ்தானமுடையார், சனீஸ்வரர், மெய்கண்டநாயனார் தனி சன்னதி உள்ளது. இங்கு நவகிரகம் துவார பாலகர்கள் இல்லை.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைப்பதற்கு சிவனையும், திருமணத்தடை நீங்க துர்க்கையையும் வழிபடுகிறார்கள். ஜாதக ரீதியாக பாதிப்புள்ளவர்கள் ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இத்தல விநாயகருக்கும், சிவனுக்கும் அர்ச்சனை செய்கிறார்கள்.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வைகாசி விசாகம்
ஆவணி விநாயகர் சதுர்த்தி
புரட்டாசி நவராத்திரி
மாசி மகா சிவராத்திரி
மார்கழி திருவாதிரை
பங்குனி உத்திரம்
திருக்கார்த்திகை
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருமால், துர்க்கை, வாசுகி, அர்ச்சுனன், வண்டு, ருதுகேதன், சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார், முதலியோர்
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
6KM திருக்குரக்காவல் இருந்து &
10KM வைத்தீஸ்வரன் கோவில்,
15KM மாயவரம்
வைத்தீஸ்வரன் கோவில் திருப்பனந்தாள் சாலையில் இளந்தோப்பு தாண்டி திருவாளப்புத்தூர்.
7AM – 12NOON, 5PM – 8PM
80984 60842 கமலக்கண்ணன் குருக்கள்.
குருக்களை அழைத்துவிட்டு சொல்வது சிறப்பு.
கோவில் தேவாரம் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பொடியுடை மார்பினர் போர்விடை யேறிப்
பூத கணம்புடை சூழக்
கொடியுடை யூர்திரிந் தையங்
கொண்டு பலபல கூறி
வடிவுடை வாள்நெடுங் கண்ணுமை பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
கடிகமழ் மாமல ரிட்டுக்
கறைமிடற் றானடி காண்போம். 1
ஞானசம்பந்தர்


Leave a Reply