திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரர் சேஷபுரீஸ்வரர்

🌻மூலவர் : சேஷபுரீஸ்வரர் பாம்புரேஸ்வரர்

அம்பாள் : பிரமராம்பிகை/ வண்டுசேர்குழலி

ஸ்தல விருக்ஷம் : வன்னி

தீர்த்தம் : ஆதிசேஷ தீ,

பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர்

புராணப் பெயர் : திருப்பாம்புரம் சேஷபுரி,

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 59.

🌻 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷மூர்த்தி ஸ்தலம் தீர்த்தம் 3ம் சிறப்பு.

🌷இது தெற்கு காளஹஸ்தி என்று பிரபலம்.

🌷சிவனின் சாபத்தால் பலத்தை இழந்த ஆதிசேஷன் இத்தலத்தில் வழிபட்டு மீண்டும் பெற்றதால் இங்கு வந்து வழிபடுவோருக்கு தாங்கள் இழந்ததை மீண்டும் பெரும் பாக்கியம் கிடைக்கும்.

🌷ஞாயிறு செவ்வாய் வெள்ளி ஆகிய நாட்களில் கோயிலில் பாம்பு நடமாட்டம் இருக்கும் என்றும் கூறுவர். இவைகள் அந்த நேரத்தில் இறைவனை வழிபடுவதாக ஐதீகம்.

🌷இந்தக் கோயில் திருநாகேஸ்வரம் நாகூர் கீழப்பெரும்பள்ளம் காளஹஸ்தி மற்றும் கும்பகோணம் நாகநாதர்

கோவில் ஆகிய தலங்களின் பெருமையை ஒருங்கே அமையப்பெற்ற தலம். எனவே இத்தலம் சர்வ தோஷ பரிகார ஸ்தலம் என புராணங்கள் கூறுகின்றன. ஆதிசேஷனுக்கு இங்கு உற்சவர் விக்ரஹம் உள்ளது.

🌷நாகங்களின் வழிபாட்டுத் தலமாக இருப்பதால், இந்த ஊரில் இதுவரை பாம்பு கடித்து யாரும் இறந்ததில்லை என்பதும் மற்றொரு கூடுதல் சிறப்பாகும்.

🌻 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷பிற கோவில்களில் இருப்பதைப் போல் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல், ஒரே சரீரமாகி, ஈசனை நெஞ்சில் இருத்தி, அருள் பெற்ற தலம். எனவே இத்தலத்து ஈசனையும் அன்னையையும் நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

🌷மஹாசிவராத்திரியின் பொழுது இரவு 4பகுதிகளாக (காலம்) பிரிக்கப்பட்டுள்ளது. ஆதிசேஷன் தலைமையிலான பாம்புகள் அன்று இரவு 4 வெவ்வேறு கோயில்களுக்கு சென்று 4 காலங்களிலும் சிவனை வழிபட்டனர். அந்த 4 கோவில்கள் 👉

நாகேஸ்வரர் கும்பகோணம், நாகநாதர் நாகேஸ்வரம்,

பாம்புரம் சேஷபுரீஸ்வரர், நாகூரில் ஸ்ரீ நாகநாதர்.

🌷 ஆதிசேஷன் திருப்பாம்புரத்தில் இறைவனை வழிபட்ட போது பூக்கள் கிடைக்காததால் ஆதிசேஷன் ஆல விழுதில் (ஆலமரக் கிளைகளில்) அகத்தி மலர்களை கட்டி பூஜையை முடித்தார். ஆகவே தான் இந்த கிராமத்தில் அகத்தி செடிகள் பூக்காமல், ஆலமர தண்டுகள் தரையை தொடாமலும் இருப்பதற்கு காரணம்.

🌷பாம்பு வழிபட்ட தலமாதலின் மூலஸ்தானத்தில் எப்போதேனும் ஓரொரு காலங்களில் இன்றும் பாம்பினுடைய நடமாட்டம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஞாயிறு, செவ்வாய், வெள்ளி நாட்களில் மல்லிகை, தாழம்பூ வாசனை கோயிலுக்குள் கமகமவென வீசுமாம். அப்போது பாம்பு கோயிலுக்குள் எங்கேனும் ஓரிடத்தில் உலாவிக் கொண்டிருக்கும் என்பது பொருளாம். 

🌷மஹா சிவராத்திரியில் ஆதிசேஷன் இறைவனை வழிபட சிற்றம்பல விநாயகர் துணையுடன் ஏற்படுத்திய குளம், வடக்கு வீதியில் சிற்றம்பலக் குட்டை என்னும் பெயரில் உள்ளது. 

🌷இக்கோயிலில் ஏராளமான பாம்பு சிலைகள் உள்ளன. ராகுவும் கேதுவும்

இணையும் இடம் முதன்மை.

🌻 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷விநாயகர் கைலாயத்தில் தன் தந்தை சிவபெருமானை வணங்கிய போது, அவர் கழுத்தில் இருந்த வாசுகி பாம்பு, தன்னையும் விநாயகர் வழிபட்டதாக நினைத்து கர்வம் கொண்டது. இதனால் கோபம் கொண்ட சிவன், நாக இனம் முழுவதும் தன் சக்தியை இழக்க சாபமிட்டார்.

🌷பின்னர் அஷ்ட மஹா நாகங்களும், ராகுவும் கேதுவும் தங்கள் இனத்தில் ஒருவர் செய்த தவறுக்காக மற்றவர்களையும் தண்டிக்கலாகாது என்றும் தவறு செய்த பாம்பையும் மன்னிக்கும் படியும் சிவனை வேண்டினர்.

🌷மஹாசிவராத்திரி அன்று நாகங்களின் தலைவன் ஆதிசேஷன் தலைமையில் அனந்தன் வாசுகி தக்ஷகன் கார்கோடகன் சங்கபாலன் குளிகன் பத்மன் மகாபத்மன் ஆகிய நாகங்கள் திருப்பாம்புரம் வந்து வேண்டி சாப விமோசனம் பெறலாம் என சிவன் அருளினார்.

🌷இது தவிர இன்னொரு வரலாறும் இத்தலத்திற்கு உண்டு. முன்னொரு காலத்தில் வாயு & ஆதிசேஷன், தங்களில் யார் பலசாலி என்பதில் போட்டி. இதனால் வாயு தன் வலிமையால் மலைகளை புரட்டிப் போட, ஆதிசேஷன் தன் வலிமையால் அதனை தடுத்து நிறுத்தியது. இருவரும் சமபலம் கொண்டதால் கோபம் கொண்ட வாயு பகவான் உயிர்களுக்கு வழங்கும் பிராணவாயு தடுத்து நிறுத்தினார். இதனால் உயிர்கள் சோர்ந்தன. தேவர்கள் வேண்டுகோளின் படி ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கியது. பின்னர் திருப்பாம்புரத்தில் இங்கு உள்ள சிவலிங்கத்திற்கு பூஜை செய்து மன்னிப்பு கேட்டது.

🌻 ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷கிழக்கு நோக்கிய கோவில்.

3 நிலை ராஜகோபுரம், 2 நடைபாதை, 28 கல்வெட்டுகள், சோழர்களால் கட்டப்பட்டது.

கருவறை, அந்தராளம் மற்றும் அர்த்தமண்டபத்துடன் கிழக்கு நோக்கி மூலவர் சன்னதி அமைந்துள்ளது. கருவறையை சுற்றி திறந்தவெளி மண்டபமும், தரைமட்டத்திற்கு கீழே அகழி போன்ற அமைப்புடன் கூடிய திருச்சுற்று உள்ளது. மூலவர் சன்னதியின் இடதுபுறம் அன்னை வண்டுசேர்குழலி சன்னதி அமைந்துள்ளது. வடகிழக்கு மூலையில் ராகு மற்றும் கேது பகவான்கள் ஒரே திருமேனியாக (ஒரே சிலையாக) அருள்பாலிக்கின்றனர். இது இத்தலத்தின் மிகச்சிறப்பான அமைப்பாகும். கோயில் தலவிருட்சமான வன்னி மரத்தின் கீழே வன்னீஸ்வரர் சன்னதி மற்றும் ஏராளமான நாக தேவதைகளின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் மற்றும் ஆதிசேஷன் சன்னதிகள் பிரகாரத்தில் உள்ளன.

🌷 மாலை 5 மணிக்கு மேல் பரிகார பூஜை கிடையாது.

🌻 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சர்ப்ப தோஷம் மற்றும் நாக தோஷம் நீங்க

ராகு – கேது தோஷம் நிவர்த்தி

மகப்பேறு பாக்கியம்

பாம்பு பயம் மற்றும் நச்சுத் தீங்கிலிருந்து பாதுகாப்பு

🌷 போதைப் பழக்கம் உள்ளவர்கள் ஞாயிறு 4.30-6 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்தால் 264 வகையான பாவங்களும் நீங்கும்.

🌻 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மாசி மகம் மற்றும் மஹா சிவராத்திரி,

ராகு – கேது பெயர்ச்சி விழா,

திருவாதிரை விழா மற்றும் ஆருத்ரா தரிசனம்,

விநாயகர் சதுர்த்தி,

நவராத்திரி

🌻 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷பிரம்மா இந்திரன் பார்வதி அகத்தியர் அக்னி தக்ஷன் கங்கை சூரியன் சந்திரன் , சுனிதன் கோச்சங்கண்ணன் அஷ்ட நாகங்கள் அப்பர் சம்பந்தர் சுந்தரர் சேக்கிழார் ஆகியோர் வழிபாடு.

🌻 அமைவிடம் நேரம் தொடர்பு

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கும்பகோணம் – காரைக்கால் நெடுஞ்சாலையில் இருந்து உட்புறமாக சுமார் 3 கி.மீ தொலைவில் இந்த கிராமப்புறக் கோவில் அமைந்துள்ளது.

• கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து காரைக்கால் அல்லது பேரளம் செல்லும் பேருந்துகளில் ஏறி, “கற்கத்தி” என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து தெற்கே 3 கி.மீ தொலைவில் உள்ள கோவிலுக்குச் செல்ல ஆட்டோ வசதிகள் உள்ளது.

• மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பேருந்துகளில் ஏறி “கொல்லுமாங்குடி” அல்லது “பேரளம்” நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து மினி பேருந்து அல்லது ஆட்டோ மூலம் கோவிலை அடையலாம்.

7AM – 12.30PM, 4PM – 8PM

94439 43665 G.வேதபிரகாஷ் குருக்கள்

94430 47302 & 96556 51712 G.பிரேம்குமார் குருக்கள்

🌻 கோயில் தேவார பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர்

திரிபுர மெரிசெய்த செல்வர்

வாரணி வனமுலை மங்கையோர் பங்கர்

மான்மறி யேந்திய மைந்தர்

காரணி மணிதிகழ் மிடறுடை யண்ணல்

கண்ணுதல் விண்ணவ ரேத்தும்

பாரணி திகழ்தரு நான்மறை யாளர்

பாம்புர நன்னக ராரே.  1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *