திருநெல்வெண்ணை நெய்வணை சொர்ணகடேஸ்வரர்
திருநெல்வெண்ணை நெய்வணை சொர்ணகடேஸ்வரர்
மூலவர் : சொர்ணகடேஸ்வரர்
உற்சவர் : சந்திரசேகர்
அம்பாள் : நீலமலர்கண்ணி பிருஹன்நாயகி
ஸ்தல விருக்ஷம் : புன்னை
தீர்த்தம் : கிணற்று தீ
பாடல் : ஞானசம்பந்தர்
ஊர் : நெய்வணை
ஆகமம் : சிவாகமம், சுயம்பு, 42வது தேவார பாடல் பெற்ற சிவாலயம், நடுநாட்டு ஸ்தலம்10
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக ருத்ராக்ஷ பந்தலின் கீழ் இருக்கிறார். இந்த பந்தலில் பிரம்மாண்டமாக 7500 மணிகள் இருக்கிறது. சனகர் சனந்தர் சனாதனர் சனத்குமாரர் ஆகிய நால்வரும் சுவாமியை பூஜித்து வணங்கி உள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் மஹா சிவராத்திரியன்று அதிகாலையில் சுவாமியின் மேல் சூரிய ஒளி விழுகிறது. அந்நேரத்தில் மட்டும் சிவன் நீலம் பச்சை சிவப்பு வெள்ளை என நிறங்கள் மாறி மாறி தெரிகிறார். இது சிவனின் அரிய தரிசனம் ஆகும்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இங்கு சூலத்தின் மத்தியில் சிவன் நின்ற கோலத்தில் உற்சவராக இருக்கின்றார். சிவமும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தை இந்த வடிவம் உணர்த்துகிறது.
அதிகார நந்தி 2 கால்களையும் இணைத்து கைகூப்பி வணங்குவது போன்ற அமைப்பில் இருக்கிறது. இந்த நந்தி பக்தர்களுக்காக சிவனிடம் வேண்டிக் கொள்வதாக ஐதீகம்.
சிவனே வந்து நெல்லை அணையாக கட்டிய தலம் என்பதால் இவ்வூர் நெல்அணை மருவி இப்பொழுது நெய்வணை.
அம்பாள் நீலமலர்கண்ணி சுவாமிக்கு இடது புறத்தில் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் இருக்கிறாள்.
இச்சந்நிதிக்கு எதிரே தீர்த்த கிணறு உள்ளது.
கோயில் முன் மண்டபத்தில் மஹாவிஷ்ணு தன் இடது மடியில், கைகளை கூப்பி வணங்கிய கோலத்தில் இருக்கும் மஹாலக்ஷ்மியை அமர்த்தியபடி லட்சுமி நாராயணனாக இருக்கிறார். இவர்கள் இருவரும் கண்களை மூடி தியானத்தில் இருப்பது போல் காட்சி அளிக்கின்றனர்.
நடராஜருக்கு தனி சந்நிதி. பிரகாரத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து அருள் பாலிக்கிறார். நவகிரகங்கள் காசி விஸ்வநாதர் விசாலாட்சி உள்ளனர். இங்குள்ள பைரவருக்கு ஒவ்வொரு அமாவாசையும் சிறப்பு பூஜை.
நடன கோலத்தில் ஞானசம்பந்தர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருத்தல யாத்திரை வந்த ஞான சம்பந்தர் இத்தலமருகே வரும் பொழுது இருட்டிவிட்டதாம். எனவே அவர் கண் தெரியாமல் தடுமாறி ஓரிடத்தில் நின்றார். அப்போது சிவன் அம்பாளை அனுப்பி, சம்பந்தனுக்கு வழிகாட்டி இங்கு வரச்சொல் என்று சொல்லி அனுப்பினார்.
அம்பாளும் சம்பந்தருக்கு எதிரே சென்று தன்னுடன் வரும்படி கூறினாள். ( அம்பாள் சம்பந்தரின் எதிர் நின்று அழைத்த தலம், அருகில் ‘எதலவாடி’ என்ற பெயரில் இருக்கிறது.)
இந்த மகிழ்ச்சியில் நடனமாடி கொண்டே பதிகங்கள் பாடினாராம். எனவே இங்குள்ள ஞான சம்பந்தர் நடனம் ஆடிய கோலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறார்.
இவர் ஒரு திருவாசியின் மத்தியில் தன் இரு கால்களையும் வளைத்து, ஒன்றாக இணைத்துகொண்டு, வலது கையில் ஒரு விரலை மட்டும் காட்டியபடி, இடக்கையை நளினமாக வளைத்து, வித்தியாசமான அமைப்பில் இருக்கிறார். இவருடன் அப்பர் சுந்தரர் வணங்கிய கோலத்தில் இருக்கின்றனர்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முன்னொரு காலத்தில் இப்பகுதி வயல்கள் நிறைந்து, விவசாயத்தில் சிறந்த இடமாக இருந்தது. இதனால் மக்கள் அனைவரும் மிகவும் செழிப்பாக குறைவில்லாத வாழ்க்கை வாழ்ந்தனர். வசதியான வாழ்க்கையால் மக்கள் இறை வழிபாட்டை முழுமையாக மறந்தனர்.
அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணிய சிவன், ஒரு திருவிளையாடல் நிகழ்த்தினார். அவர் வருணனிடம் சொல்லி இவ்விடத்தில் மட்டும் இடைவிடாது தொடர் மழையை பெய்யும்படி கூறினார். அதன்படி வருணனும் இங்கு மழை பொழிவித்தான். முதலில் மழையைக் கண்டு மகிழ்ந்த மக்கள் தொடர்ந்து நிற்காமல் பெய்யவே கலக்கம் கொண்டனர். இவ்வாறு தொடர்ந்து மழை பெய்ததால் ஊரிலிருந்து அனைத்து குளம் ஏரி உடைந்து ஊருக்குள் வெள்ளம் பாய்ந்தது. அதுவரை இறைவழிபாட்டை மறந்திருந்த மக்கள், தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் நிலையில், தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர்.
மனம் இறங்கிய சிவன், ஒரு வாலிபர் வடிவில் வந்து, ஒவ்வொருவரும் வீட்டில் வைத்திருந்த நெல் மூட்டைகளை தரும்படி கூறினார். அவர்களும் எடுத்துக் கொள்ளும்படி சொல்லவே, அவர் நெல் மூட்டைகளை தூக்கி வந்து ஏரியில் அணையாகக் கட்டி வெள்ளத்தை தடுத்தார். பின் அவர் வருண பகவானிடம் மழையை நிறுத்தும்படி சொல்லவே, அவரும் மழையை நிறுத்தினார். மழையினால் தங்கள் உடைமைகள் பொருள் அனைத்தையும் இழந்து நின்ற மக்கள், உயிர்பிழைத்த மகிழ்ச்சியில், வாலிபரிடம், நீ தான் எங்கள் தெய்வம் என்று மகிழ்ச்சி பொங்க கூறினர். அவர்களிடம், “உங்களது அனைத்து நிலைகளுக்கும் இறைவன் ஒருவனே காரணம்!” எனவே எந்த சூழ்நிலையிலும் அவனை மட்டும் மறந்து விடாதீர்கள்! என்று சொல்லி அனைவருக்கும் சொர்ணம் (தங்கம்) நிரம்பிய குடங்களை கொடுத்து விட்டு, “இழந்ததை இதன் மூலம் மீட்டுக் கொள்ளுங்கள்” என்று சொல்லி மறைந்து விட்டார்.
மக்கள் புரியாமல் தவிக்கவே அந்த வாலிபர் அவர்களுக்கு தன் சுயரூபம் காட்டி சுயம்புவாக எழுந்தருளினார். பின்னர் மக்கள் இவ்விடத்தில் சிவ பெருமானுக்கு கோயில் எழுப்பினர். சொர்ணம் தந்தவர் என்பதால் சொர்ண கடேஸ்வரர். இவருக்கு நெல் வெண்ணை நாதர் என்ற பெயரும் உண்டு.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இங்குள்ள ஸ்தல விநாயகர் வரசித்தி விநாயகர்.
வாயிலின் வெளிச்சுவரில் தலப்பதிகம் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது..
கல்வெட்டில் இறைவன் பெயர் “பொற்குடம் கொடுத்தருளிய நாயனார்” எனக் குறிப்பு. இங்குள்ள சிவனுக்கு வெண்ணையப்பர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
சோழர் திருப்பணி & சோழர் கல்வெட்டுகள்.
வெண்ணை காப்பு சாத்தி வழிபட்டால் பாவங்கள் தீரும்.
சிவனுக்கு சாத்தப்படும் வெண்ணை காப்பு மறுநாள் வரை உருகாமல் இருக்கிறது. மறுநாள் வெண்ணெய் பக்தர்களுக்கு வழங்க, அவர்கள் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு பயன்படுத்துகின்றனர்.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பாப விமோசனம், ஞானம் மற்றும் கல்வி, செல்வ வளம் ஐஸ்வர்யம் பெருக, குடும்ப நலம் மற்றும் துயரங்கள் தீர பிரார்த்தனை.
இங்கு வெண்ணை காப்பு சாத்தி வழிபடுவது முக்கிய விசேஷமாகும்.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மாசிமகம்
மஹா சிவராத்திரி திருக்கார்த்திகை
ஆருத்ரா தரிசனம்
பிரதோஷம் பௌர்ணமி சிறப்பு
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர், சம்பந்தர், அப்பர், சேக்கிழார் முதலானோர்..
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ளது.
14KM உளுந்தூர்பேட்டை
30KM திருக்கோவிலூர்
உளுந்தூர்பேட்டை திருக்கோவிலூர் நெடுஞ்சாலையில் எறையூர் அடைந்து கிளைப்பாதையில் 5KM ( டவுன் பஸ் / ஆட்டோ ) என்றால் கோவில் அடையலாம்.
7.30AM – 12NOON, 5PM – 8PM
78260 90451 & 63473 73032
விக்னேஷ் குருக்கள்.
கிராமத்து கோவில், குருக்களை அழைத்துவிட்டு செல்வது சிறப்பு
கோயில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நல்வெணெய் விழுதுபெய் தாடுதிர் நாடொறும்
நெல்வெணெய் மேவிய நீரே
நெல்வெணெய் மேவிய நீருமை நாடொறும்
சொல்வணம் இடுவது சொல்லே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply