திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர்
மூலவர் : மஹாலக்ஷ்மீஸ்வரர்
அம்பாள் : உலகநாயகி
ஸ்தல விருக்ஷம் : வில்வம்
தீர்த்தம் : நீலப் பொய்கை
புராணப்பெயர் : திரிநின்றஊர்
பாடல் : அப்பர் சுந்தரர் சம்பந்தர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழநாட்டு & காவிரி வடகரை ஸ்தலம் 19
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவலிங்கத்தின் பாணத்தில் தற்போதும் கோடரி வெட்டிய தழும்பு இருக்கிறது.
நவகிரகத்தில் உள்ள சூரியனும் சந்திரனும் ஒருவரை ஒருவர் நேரே பார்த்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பு. அமாவாசை நாட்களில் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்கு இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.
பரசுராமர் வழிபட்ட சிவன் பரசுராமலிங்கமாக இருக்கிறார்.
அருகில் ஜமதக்னிக்கு காட்சி தந்த சிவன் ஜமதக்னீஸ்வரராக சிறிய பாண வடிவிலும், பரிக்கேஸ்வரர் பெரிய பாண வடிவிலும் அருகில் மஹாவிஷ்ணுவும் இருக்கிறார்கள்.
இக்கோயிலைச் சுற்றி மாலையிட்டது போல் மூன்று குளங்கள் இருப்பது விசேஷம். இத்தலத்தின் தீர்த்தத்தை நீலமலர் பொய்கை என்று சம்பந்தர் தனது பதிகத்தில் பாடி உள்ளார். மேலும் இங்கு வழிபடுவோர் பயம் பாவம் மற்றும் நோய்கள் நீங்கி நல்வாழ்வு வாழ்வர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அனுஷ நட்சத்திர ஸ்தலம் :
சிதம்பரம் நடராஜரை தினமும் தரிசித்து வந்த சோழ மன்னன் ஒருவன் இத்தலம் வழியாகவே சென்று திரும்புவான். ஒரு சமயம் அவன் இத்தலத்தை கடந்து சென்ற பொழுது, காவலாளி கொண்டு சென்ற திரி அணைந்து விட்டது. அதனை மீண்டும் எரிய வைக்க முயன்றும் முடியவில்லை. அவர்கள் இத்தலத்தை கடந்த பொழுது திரி தானாகவே எரிய துவங்கியது. இதைப்போலவே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இதன் காரணத்தை கண்டறிய முடியவில்லை.
ஒரு சமயம் இத்தலத்தில் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த இடையனிடம், இத்தலத்தில் ஆச்சரியமான நிகழ்ச்சிகள் நிகழுமா என்று கேட்டான். அவன் ஓரிடத்தில் சுயம்புவாக இருக்கும் லிங்கத்தில் பசு தானாகவே பால் சொரிவதாக கூறினான். மன்னனும் அவ்விடத்தில் சென்று சிவலிங்கம் கண்டார். அதனை வேறு இடத்தில் வைத்து கோவில் கட்டுவதற்காக தோண்டிய பொழுது ரத்தம் வெளிப்பட்டது.
பின் இங்கேயே அனுஷ நட்சத்திர தினத்தில் கோவில் எழுப்பி வழிபட்டார். திரி அணைந்த தலம் என்பதால் திரிநின்றியூர் & மஹாலக்ஷ்மி வழிபட்டதால் திருநின்றியூர் என்றும் பெயர்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடியோ, அனுஷ நக்ஷத்திரத்திலோ, மற்ற சிறப்பு தினங்களிலோ சிவனுக்கு சந்தன காப்பிட்டு அதில் மாதுளை முத்துக்களை பதித்து வழிபாடு செய்தால் வாழ்வு சிறக்கும்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஜமதக்னி மஹரிஷி, தன் மனைவி ரேணுகா, கந்தர்வன் ஒருவனின் அழகை நீரில் கண்டு வியந்ததால், அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமரிடம் கூறினார். பரசுராமரும் தாயை வெட்டினார். அதன் பின் தந்தையிடம் வரம் பெற்று அவரை உயிர்ப்பித்தார்.
தாயைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் வழிபட்டு மன அமைதி பெற்றார்.
ஜமதக்னியும் இங்கு பாவத்திற்கு விமோசனம் வேண்டி சிவனை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். சிவன் இருவருக்கும் காட்சி தந்து அருள் செய்தார்.
மஹாலக்ஷ்மியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே இத்தலத்து ஈசன் மகாலக்ஷ்மீஸ்வரர் என்றும் அம்பாள் உலகநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ராஜகோபுரம் 3 நிலை உடையது.
கொடிமரம் இல்லை.
ஸ்தல விநாயகராக செல்வ கணபதி அருள் பாலிக்கிறார்
கோஷ்டத்தில் உள்ள தக்ஷினாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது புறமாக திரும்பி கையில் நாகத்துடன் இருக்கிறான். சுவாமி தன் இடது கையால் அவனுக்கு அருள் செய்யும் கோலத்தில் இருக்கிறார். பிரகாரத்தில் செல்வ விநாயகருக்கு சன்னதி உள்ளது. அனுஷம் நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. கடன் தொல்லை உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக் கொண்டால் தீர்வு ஏற்படும் என்பது நம்பிக்கை. வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் வலது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் இருக்கிறார்.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அனுஷ நக்ஷத்திர தோஷ நிவர்த்தி
கடன் தொல்லைகள் நீங்க
மாத்ருஹத்தி தோஷம் நீங்க
பிதுர் கடன் மற்றும் முன்னோர்கள் வழிபாடு
நோய் மற்றும் பயம் நீங்க
குடும்ப அமைதி பெற
செல்வ வளம் பெற..
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மாசி மகம்
ஆனித் திருமஞ்சனம்
மாசி மஹாசிவராத்திரி
திருக்கார்த்திகை
அனுஷ நட்சத்திர சிறப்பு பூஜைகள்
ஆடி வெள்ளிக்கிழமை & பிரதோஷ சிறப்பு பூஜைகள்
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஹாலக்ஷ்மி, மஹாவிஷ்ணு,
பரசுராமர் ஜமதக்னி அகத்தியர் சோழ மன்னன் அப்பர் சம்பந்தர் சுந்தரர் சேக்கிழார் முதலியோர்
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மாயவரம் சீர்காழி பாதையில் உள்ளது.
வைத்தீஸ்வரன் கோயில் 6KM
மாயவரம் 10KM
7AM – 11AM, 4PM – 7PM
90470 24457 ராஜேஷ் சிவாச்சாரியார்
76391 77416 சேதுராம குருக்கள்
9790952994 மகாலிங்கம் மணியம்
கோவில் குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சூலம்படை சுண்ணப்பொடி
சாந்தஞ்சுடு நீறு
பாலம்மதி பவளச்சடை
முடிமேலது பண்டைக்
காலன்வலி காலின்னொடு
போக்கிக்கடி கமழும்
நீலம்மலர்ப் பொய்கைநின்றி
யூரின்நிலை யோர்க்கே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply