திருநாரையூர் சௌந்தர்யேஸ்வரர்

🌺மூலவர் : சௌந்தர்யேஸ்வரர்

அம்பாள் : திரிபுரசுந்தரி

ஸ்தல விருக்ஷம் : புன்னை

தீர்த்தம் : செங்கழுநீர், காருண்ய

பாடல் : அப்பர், சம்பந்தர், சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம் சோழ நாட்டு காவிரி வடகரை ஸ்தலம் 33.

🌺 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் அறுபடை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கோவிலின் இடது பக்கம் உள்ள “பொள்ளாப் பிள்ளையார்” சன்னதி விநாயகரின் ஆறாவது படை வீடாகும். இவர் சுயம்பு.

திருமுறைகள் கிடைப்பதற்கு காரணமாய் இருந்த நம்பியாண்டார் நம்பி அவதார ஸ்தலம். இவர் விநாயகருக்கு அமுது படைத்தபோது, பிள்ளையார் அதனை ஏற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க தலம்.

நாரையின் சாபம் தீர்த்த தலம்.

🌺 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருமுறைகள் எல்லாம் கிடைப்பதற்கு காரணமான ஒரு திவ்ய க்ஷேத்ரம். திருமுறைக்கு வித்திட்ட புண்ணிய பூமி. திருநரையூர் வேறு திருநாரையூர் வேறு. சோழநாட்டில் ஆதிசைவர் சிவாச்சாரியார் குலத்தில் அவதரித்த நம்பியாண்டார் நம்பியின் ஜன்ம ஸ்தலம். நித்தியமா அவர் தந்தை பூஜை செய்வார். ஆத்மார்த்த பூஜை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். பரார்த பூஜை அதுவும் ஆகம கோவில்களில் சிவாச்சாரியார் தான் பூஜை செய்ய வேண்டும். இவர் சாங்கோ பாங்கமாக நியமமாக செய்பவர். சப்த ரிஷிகளில் வசிஷ்டர் வம்சத்தில் யாரெல்லாம் தோன்றுகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான் அந்த அதிகாரமானது கொடுக்கப்பட்டிருக்கிறது.

அப்பா பூஜை செய்யும் பொழுது குழந்தையும் வரும், விளையாடி கொண்டிருக்கும். அப்படி நம்பியாண்டார் நம்பி சின்ன குழந்தையிலிருந்து நடந்து ஓடி ஆடி விளையாடி சுவாமியை பார்த்து நின்று அனுபவித்த புண்ணிய க்ஷேத்ரம், புண்ணிய பூமி இது.

இந்த நம்பியாண்டார் நம்பி இல்லை என்றால் திருமுறைகள் கிடைத்திருக்காது. அந்த திருமுறைகளை காட்டிக் கொடுத்த விநாயகர் இங்குதான் இருக்கிறார். உளி படாத விநாயகர், கைலாயத்திலிருந்து வந்த விநாயகர், தேவர்களால் தொழப்பட்ட விநாயகர், எந்த காரியத்தை நினைத்துக் கொண்டு அந்த விநாயகரை பிரார்த்தனை பண்ணினாலும் அந்த காரியத்தை அனுக்கிரகம் பண்ணி தரக்கூடிய விநாயகர். நம் சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கும் விநாயகர், ராஜராஜ சோழனுக்கு அருள்புரிந்த விநாயகர், அப்படிப்பட்ட விநாயகர் இங்கு க்ஷேத்ர தேவதையாக க்ஷேத்ர மூர்த்தியாக முழுமுதற் கடவுளாக ஆனந்த கணபதியாக பிரகாரத்தில் வீற்றிருக்கிறார்.

🌺பொள்ளாப் பிள்ளையார் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஒரு நாள் தந்தைக்கு உடம்பு சரியில்லை. குழந்தையை பூஜை செய்ய அனுப்புகிறார்கள். அப்பா செய்வது மாதிரியே சன்னதியில் அபிஷேகம் எல்லாம் செய்து விட்டு, பிள்ளையார்பிட்ட நைவேத்யம் வைக்கிறார். மணி அடித்துப் பார்க்கிறார். நைவேத்யம் சுவாமி எடுத்துக்கவே இல்லை. சரி அப்பா செய்வது போல் நமக்குத் தெரியவில்லை என்று வாசலில் வந்து ஐந்து நிமிடம் நிற்கிறார். மீண்டும் அதே நிலை. வேண்டிக்கொள்கிறார். அழுகிறார். இல்லை. பிள்ளையாரை கட்டிக் கொண்டார். தலையை எடுத்து முட்டிக் கொண்டார். கணபதி பிரத்யக்ஷமானார்.

” நாம ஒரு அருகம்புல், ஒரு தேங்காய் வச்சாலே நமக்கு எல்லாம் பண்ணி கொடுக்கிறார். இவருடைய உண்மையான பக்திக்கு வர மாட்டாரா !! “

எடுத்தார் சாப்பிட்டார் குழந்தைக்கும் ஊட்டி விட்டார்.

குழந்தை வீட்டிற்கு வந்தால் பாத்திரத்தில் பிரசாதம் இல்லை. பிள்ளையார் சாப்பிட்டு விட்டார்.

அப்பா பொய் சொல்லக்கூடாது என்று தெரியாதா! உன் உதட்டில் ஒரு பருக்கை ஒட்டிக்கொண்டு இருக்கிறதே! பிள்ளையார் ஊட்டி விட்டார் என்கிறார். நம்பவில்லை, அடித்தார்கள். கோவிலுக்கு கூட்டிக் கொண்டு போகிறார்கள் பழங்களோடு.

பிள்ளையாரிடம் கொண்டு போய் வைத்து எடுத்துக்கொள் என்றால் எப்படி எடுத்துக் கொள்வார்? திட்டுகிறார்கள் அடிக்கிறார்கள்! கணபதி மீண்டும் பிரத்யக்ஷமாக வந்தார்.

தட்டில் இருக்கும் பழங்கள் அத்தனையும் எடுத்துக் கொண்டார். அனைவரும் புரிந்து கொண்டார்கள். இவர் புகழ் எங்கும் பரவுகிறது. பிள்ளையாரே நம்பியாண்டார் நம்பிக்கு சகல கலைகளையும் அனுகிரஹம் பண்ணி தருகிறார்

இந்த நம்பியாண்டார் நம்பியை & கணபதியை தரிசிக்க வந்தான் ராஜராஜ சோழன். அவர் சரணத்தில் விழுகிறான். தன்னுடைய நீண்ட நாள் தேடலை, குறைய சொல்கிறான். பிள்ளையார் கிட்ட இருவரும் வேண்டிக் கொள்கிறார்கள். “தில்லை நடராஜர் ஆலயத்தின் தென்மேற்கு மண்டபத்தில் சுவடிகள் கிடைக்கும்” என விநாயகரின் தெய்வ வாக்கு ஒலித்தது. ( இன்றும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மேற்கு உள்பிரகாரத்தில் திருமுறை காட்டிய விநாயகர் சன்னதி உள்ளது )

🌺 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கிருதயுகத்தில் துர்வாசர் இங்கு காருண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் அனுஷ்டானம் முடித்து படித்துறையில் தியானம் பண்றார். அந்த வழியாக தேவலோகத்தில் இருந்து ஒரு கந்தர்வன் புஷ்பம் பறிச்சுண்டு சிவபூஜைக்கு எடுத்துக்கொண்டு செல்பவன், தீர்த்தத்தை பார்த்துவிட்டு இறங்கி விளையாடிக் கொண்டு இருக்கிறான். விளையாடும் பொழுது ஜலம் துர்வாசர் மேல் தெறித்து கண் திறந்து பார்க்கிறார். கோபத்தில் சாபம் கொடுக்கிறார். தண்ணீரில் விளையாடும் நாரையாக கடவது

பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்டாலும் கிளம்பி போயிட்டார். என்ன செய்வது தெரியாமல் இங்கேயே நாரையா கழிக்கிறார்

ஒரு நாள் நாரத மகரிஷி இங்கு வருகிறார். நாரை அவரையே பாவமா பார்த்துக் கொண்டு இருக்கிறது. தன்னுடைய ஞான திருஷ்டியினால் தெரிந்து கொண்டு அவனுக்கு அனுகிரகம் செய்கிறார். காசியில் இருந்து கங்கை ஜலத்தை எடுத்துக் கொண்டு வந்து இங்கு இருக்கக்கூடிய சுவாமிக்கு அபிஷேகம் பண்ணு. உனக்கு நிவர்த்தி உண்டு.

நான் எப்படி போவது? பஞ்சாட்சரத்தை சொல்லி, நம்பிக்கையோடு கண்ணை மூடினால் நாம் அங்கே இருக்கலாம். கண்ணை மூடி திறந்தால் காசி, கங்கை கொண்டு வந்து அபிஷேகம். சுவாமி அவனுக்கு சௌந்தர்யம் நிறைந்த அவனுடைய தேகத்தை (கந்தர்வன் என்றாலே அழகு) அனுக்கிரகம் செய்ததால் சௌந்தர்யேஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார். நாரைக்கு விமோசனம் வழங்கியதால் திருநாரையூர்.

🌺 ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, நவகிரகம், சனி பகவான், பைரவர், சூரியன் ஆகியோர் உள்ளனர்.

🌺 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கல்வி மற்றும் ஞானம்

பாப விமோசனம்

சாப நிவர்த்தி

🌺 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வைகாசி திருவாதிரை

நம்பி குருபூஜை விழா

நாரை முக்தி அடைந்த நாள்

ராஜராஜ சோழன் விழா

விநாயகர் சதுர்த்தி

மஹாசிவராத்திரி மற்றும் பிரதோஷம்

🌺 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

துர்வாசர், நாரதர், நாரை, நம்பியாண்டார் நம்பி,

ராஜராஜ சோழன், சம்பந்தர், அப்பர், கபிலதேவ நாயனார், சேக்கிழார்,

🌺 அமைவிடம் நேரம் தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சிதம்பரம் காட்டுமன்னார்குடி குமராட்சி அடுத்து திருநாரையூர் 1 KM, சிதம்பரத்திலிருந்து 16 KM

7.30AM – 11.30AM, 6PM – 7.30PM

63812 88122 முத்துக்குமார சுவாமி குருக்கள்

🌺 கோவில் தேவார பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வீறு தானுடை

வெற்பன் மடந்தையோர்

கூற னாகிலுங்

கூன்பிறை சூடிலும்

நாறு பூம்பொழில்

நாரையூர் நம்பனுக்(கு)

ஆறு சூடலும்

அம்ம அழகிதே. 1

திருநாவுக்கரசர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *