திருக்குறுக்கை கொருக்கை வீரட்டேஸ்வரர்
மூலவர் : வீரட்டேஸ்வரர்
உற்சவர் : யோகேஸ்வரர்
அம்பாள் : ஞானாம்பிகை
ஸ்தல விருட்சம் : கடுக்காய் மரம்
தீர்த்தம் : திரிசூல கங்கை & பசுபதி தீ
பாடல் : அப்பர், சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி வடகரை தலம் 26
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆவுடையாரில் தாமரை மலர் இருப்பது சிறப்பு.
சிவபெருமான் வீர செயல்கள் புரிந்த அட்ட வீரட்டான ஸ்தலங்களில் ஒன்று.
ரதி மன்மதன் உற்சவ திருமேனிகள் இத்தலத்தில் உள்ளன.
இங்குள்ள சூல தீர்த்தத்தின் பெருமையறியாது, ‘தீர்க்கபாகு’ என்னும் முனிவர், கங்கை நீரைப் பெறவேண்டித் தம் கைகளை நீட்டியபோது அக்கைகள் குறுகிவிட்டன. அதுகண்டு தம்பால் பிழை நேர்ந்தது என்றெண்ணித் தலையைப் பாறைமீது மோதமுற்பட, இறைவன் காட்சி தந்து, அவர் உடற்குறையைப் போக்கினார் என்பது வரலாற்றுச் செய்தி. இத்தலம் ‘குறுங்கை முனிவர் ‘ என்று இவர் பெயரால் அழைக்கப்பட்டு, நாளடைவில் ‘குறுக்கை’ என்று ஆனதாகச் சொல்லப்படுகிறது
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பெருமாளின் புத்திர சோகத்தை போக்கியதால் இத்தலத்தில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தப்படுகிறது.
இறைவன் யோகேஸ்வரர் அம்பாள் ஞானாம்பிகை, இங்கு சிவன் யோக மூர்த்தியாக இருப்பதால் நினைத்தவுடன் எளிதில் சென்று பார்க்க இயலாது. ஏதாவது தடங்கல் வந்துவிடும். அதையும் மீறி நாம் சுவாமியை தரிசித்து விட்டால் நமக்கு யோக நிலை கூடும்.
சுவாமி இங்கு அனுக்ரஹ மூர்த்தியாக இருப்பதால், தெரியாமல் தவறு செய்தவர்கள் இவரை வணங்கினால், நமது தவறை மன்னித்து அனுகிரஹம் புரிகிறார்.
இங்குள்ள குறுங்கை கணபதிக்கு மட்டும் கஜபிருஷ்ட விமானம் இருக்கிறது.
பூர்வ ஜென்ம தோஷ பரிகாரம், புத்திர காமேஷ்டி யாகம், 70 வயது பீமரத சாந்தி ஆகியவை இங்கு முக்கியமானவை.
இறைவனின் நெற்றிக்கண் மன்மதனை சுட்டு எரித்தது, (அனங்கன்). பின் வணங்கி மறுபிறவி எடுத்த ஸ்தலம்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒருபுறம் அந்தகாசுரனின் அட்டகாசம் தாங்க முடியவில்லை சிவபெருமான் தியானத்திலிருந்து எழுந்து அவனை அழிக்க வேண்டும். மறுபுறம் அவரது தியானத்தால் உலகம் உஷ்ணத்தால் தகித்தது.
தேவர்கள் அனைவரும் முருகப்பெருமானிடம் முறையிட, முருகரோ தன்னால் தந்தையின் தவத்தை கலைக்க முடியாது என ஒதுங்க, கடைசியில் மன்மதனிடம் அனைவரும் சேர்ந்து எப்படியாவது பெருமானின் தியானத்தை கலைக்க வற்புறுத்தினர்.
மன்மதனும் நடக்கப்போவது தெரியாமல், அறியாமை மேலிட,
தன்னிடம் உள்ள வில்லை எடுத்து சர்வேஸ்வரன் மீது கணைகளைத் தொடுத்தான். ஆனால் கணையோ புஷ்பமாக மாறி வந்து விழுகிறது.
தியானம் கலைந்த ஈஸ்வரன் மன்மதன் இருக்கும் இடம் நோக்கி ஒரு பார்வை பார்த்தார்.
எம்பெருமானின் நெற்றிக்கண் மன்மதனை சுட்டு எரித்து பஸ்பம் ஆகி போனான். அதன்பின் ரதி ஈஸ்வரனிடம் , அனைவரது வற்புறுத்தலையும் சொல்லி, தன் கணவனை மீட்டுத் தருமாறு கேட்க, மன்மதன் உயிர் பெற்றதாக வரலாறு கூறுகிறது.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காம சம்ஹார மூர்த்தி – அட்டவீரட்டான தலங்களில் இங்கு காமனை எரித்ததால் காமதகன மூர்த்தி என அழைக்க படுகிறார். காமதகன மூர்த்தி இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டு, வலக்கை அபயம் முத்திரையுடன், இடக்கை வடக்கிய கால் மீது வைத்து அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார்.
சம்ஹாரத்தினால் பெயர் பெற்ற ஊர்கள் – சிவபெருமானின் தவத்தை கலைக்க மன்மதன் தன் கைகளில் கங்கணம் கட்டிக் கொண்ட ஊர் கங்கணம் புத்தூர்.
பால் குடித்த இடம் பாலாக்குடி.
வில் எடுத்த இடம் வில்லியனூர்.
குறிபார்த்த இடம் காவளமேடு.
தன்னோடு வந்தவர்களோடு ஐவநல்லூரில் கூடி (5 பேர்) இங்கிருந்து வில் விடு என கூறினார்களாம்.
அந்த இடம் சரியாக இல்லை என்று கூறி மேட்டுக் கொற்கை எனும் இடத்திற்கு வந்து குறி பார்க்கையில், பின்பக்கம் முன் பக்கம் இல்லாது ஒரு ஓரமாக நின்று கணை விட்டாராம்.
5 நிலை ராஜகோபுரம், கோவிலுக்கு வெளியே சூல தீர்த்தம், அர்த்தமண்டபம் மஹா மண்டபம் தாண்டி கருவறை. மஹாமண்டபத்தில் உற்சவ திருமேனிகள் சிறப்பு. ஆறு கரங்களில் ஆறு விதமான ஆயுதங்களுடன் காம தகன மூர்த்தி மற்றும் ரதி மன்மதன் உலோக சிலைகள் சிறப்பு. தெற்கு நோக்கி அம்பாள் சந்ததி.
மஹாவிஷ்ணு, மஹாலக்ஷ்மி வள்ளி, தெய்வானை, சூரியன், சந்திரன், பைரவர் ஆகியோருடன் முருகப்பெருமான் சன்னதிகள் உள்ளன.
கோஷ்ட மூர்த்திகளான மகாகணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் , பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் கோஷ்டத்தில் உள்ளனர்.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மனத் தூய்மை மற்றும் புலனடக்கம் காமம் குரோதம் பேராசை நீங்க.
குடும்ப ஒற்றுமை மற்றும் கணவன்–மனைவி அன்பு ஓங்க திருமணத் தடை நீங்க
இழந்த சொத்துக்களை மீட்க
மன அமைதி மற்றும் தொழில் மேன்மை பெருக
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மாசி மகப் பெருவிழா (காமதகன விழா) 10 நாள் பிரம்மோற்சவம்.
மார்கழி திருவாதிரை உற்சவம்
மேலும் நவராத்திரி ஐப்பசி அன்னாபிஷேகம் திருக்கார்த்திகை பிரதோஷம் சிறப்பு.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அப்பர், சுந்தரர், சேக்கிழார், இலக்குமி, திருமால், பிரமன், முருகன், ரதி முதலியோர்
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
12 KM from மாயவரம்.
மாயவரம் மணல்மேடு நீடூர் கொண்டல் அடைந்து 3KM கொருக்கை சாலைக்கு வழிகாட்டி உள்ளது.
6AM – 12NOON, 4 PM – 8 PM
94435 27044 சோமசுந்தரம் குருக்கள்
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆதியிற் பிரம னார்தாம்
அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ்
ஓதிய வேத நாவர்
உணருமா றுணர லுற்றார்
சோதியுட் சுடராய்த் தோன்றிச்
சொல்லினை யிறந்தார் பல்பூக்
கோதிவண் டறையுஞ் சோலைக்
குறுக்கைவீ ரட்ட னாரே. 1
திருநாவுக்கரசர்


Leave a Reply