திருக்காளத்தி ஸ்ரீ காளஹஸ்தி காளஹஸ்தீஸ்வரர்

🌼மூலவர் : காளஹஸ்தீஸ்வரர், காளத்திநாதர், குடுமித்தேவர்.

அம்பாள் : ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை, ஞானாம்பிகை

ஸ்தல விருக்ஷம் : மகிழ மரம்

தீர்த்தம் : ஸ்வர்ணமுகி, பொன்முகலியாறு.

பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர்

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம் & தொண்டை நாட்டு ஸ்தலம் 19.

🌼ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹பஞ்ச பூத ஸ்தலங்களில்- வாயு

🌹​இது ‘வாயு லிங்கம்’ என்பதால், கருவறையில் எவ்விதக் காற்று நடமாட்டமும் இல்லாத நிலையிலும், மூலவருக்கு அருகே இருக்கும் தீபம் எப்போதும் காற்றில் அசைந்தாடிக்கொண்டே இருப்பதைக் காணலாம்.

🌹இந்த லிங்கம் ‘தீண்டாத்திருமேனி’ என்பதால், அர்ச்சகர்கள் உட்பட மனிதக் கைகளால் இது தொடப்படுவதில்லை.

🌹இது ஞான சக்திபீடம் ஆகும் – 51 சக்திபீடங்களில் ஒன்று

🌹பெரிய கோயில், ஸ்ரீபுரம், மும்முடி-சோழபுரம் ஆகிய இரண்டு செங்குத்தான மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது.

🌹ராகு மற்றும் கேது பகவான்கள் சிவபெருமானை இங்கு வழிபட்டுத் தங்களது தோஷங்களிலிருந்து விடுபட்டதாகக் கூறப்படுகிறது. ராகு-கேது பரிகார ஸ்தலமாகவும் பிரசித்தி பெற்றது.

🌹முதலில் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது . இது கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் சோழ மற்றும் விஜயநகர மன்னர்களால் புனரமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது .

🌹பொன்முகலி ஆற்றின் கரையில் உள்ள ஒரு பெரிய கல் குன்றைக் குடைந்து இந்தக் கோயில் உருவாக்கப்பட்டது.

🌹இங்கு 1516 ஆம் ஆண்டில் விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டதாக நம்பப்படும் 100 தூண் மண்டபம் உள்ளது. இந்தக் குன்று “கைலாச மலை” என்றும் அழைக்கப்படுகிறது.

🌼ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹​புராணங்களின்படி, சிவபெருமானின் மீது அளப்பரிய பக்தி கொண்ட மூன்று உயிரினங்கள் வாழ்ந்து வந்தன – சிலந்தி (ஸ்ரீ), பாம்பு (காளன்), மற்றும் யானை (ஹஸ்தி).

🌹​யானை ஆற்றுநீரைத் தன் தும்பிக்கையில் எடுத்து வந்து சிவலிங்கத்தின் மீது ஊற்றி நீராட்டி, வில்வ இலைகளைச் சமர்ப்பித்து வழிபட்டு வந்தது.

🌹சிலந்தியோ வெயிலோ மழையோ படாமல் இருக்க லிங்கத்தின் மேல் தன் வலையால் பந்தல் அமைத்து வழிபட்டது.

🌹பாம்பு தன் மாணிக்கமணியை லிங்கத்தின் மீது வைத்து அலங்கரித்து வழிபட்டது. இந்த மூன்று உயிரினங்களின் கலங்கமற்ற தூய பக்தியைக் கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான், அவைகளின் பெயர்கள் அனைத்தும் தன்னுடைய பெயருடன் இணைய வேண்டும் என்ற வரத்தை அருளினார்.

🌹அதனால் இத்தல இறைவன் “ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்” என்று அழைக்கப்படுகிறார்.

🌹காசியில் கங்கை நதி வடக்கு நோக்கிப் பாய்வது போலவே, இங்கும் ‘பொன்முகலி’ நதி வடக்கு நோக்கிப் பாய்கிறது. இதனால் காசியைப் போன்றே ஸ்ரீகாளஹஸ்தியும் ஒரு முக்தி ஸ்தலமாகக் கருதப்படுகிறது. மோட்சம் பெறவும் இறைவனின் ஆசி பெறவும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

🌹​உயிர் பிரியும் வேளையில் செவிகளில் ஓதப்படும் ‘தாரக மந்திரத்தை’ (கர்ண மந்திரம்), காசியில் விஸ்வநாதர் ஓதுவது போலவே, ஸ்ரீகாளஹஸ்தியில் காளஹஸ்தீஸ்வரர் பக்தர்களின் செவிகளில் ஓதி முக்தி அருள்கிறார் என்பது ஐதீகம்.

🌹தக்ஷிண கைலாஷ் 👉 தென் இந்தியாவின் கைலாயமலை.

🌹இங்கு வந்த அகத்தியர் விநாயகரை வழிபடாமற் போகவே, பொன்முகலி ஆறு நீரின்றி வற்றியது; அகத்தியர் தம் தவறுணர்ந்து பாதாளத்தில் – ஆழத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்றார் என்பது தல வரலாற்றுச் செய்தி. (பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது.)

🌹அருச்சுனன், தன் தீர்த்த யாத்திரையில் இங்கு வந்து இறைவனை வழிபட்டும், பரத்வாஜ மகரிஷியைக் கண்டு வணங்கிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.’

🌹திருமஞ்சனக் கோபுரம் ‘ எனப்படும் கோபுரத்திலிருந்து பார்த்தால், நேரே பொன்முகலி ஆறு தெரியும்; ஆற்றுக்குச் செல்வதற்கு படிக்கட்டுகள் உள்ளன. இவ்வழியேதான் திண்ணனார் (கண்ணப்பர்) பொன்முகலி நீரைக் கொண்டுவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.

🌹நக்கீரர் இம்மலையில் வந்து தங்கி நதியில் நீராடி இறைவனைத் தொழுது வெப்பு நோயிலிருந்து முழுமையாக நீக்கம் பெற்றாராம்.

🌼ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹முன்பொரு காலம் ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் தம்மில் யார் பெரியவர் என்ற போட்டியில் ஆதிசேஷன் கைலாய மலையைச் சுற்றி மூடிக்கொள்ள வாயு தேவன் தன்னுடைய பலத்தால் மலைச்சிகரங்களை பெயர்த்தெறிய முயற்சித்தார். ஆயினும் இயலவில்லை.

🌹பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிசேஷன் லேசாக அசைய அந்த நேரத்தில் வாயுதேவன் தன் பலத்தால் சிகரங்களை பெயர்த்து கொண்டு வந்தவற்றுள் ஒன்றுதான் திருக்காளத்தி சிகரம்.

🌹‘திண்ணனார்’ என்ற வேடன், அருகிலுள்ள பொன்முகலி ஆற்றில் இருந்து வாயில் நீரைச் சுமந்து வந்து சிவலிங்கத்தின் மீது உமிழ்ந்து அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார். மேலும் தான் வேட்டையாடி சமைத்த மாமிசத்தையும், காட்டுப் பூக்களையும் இறைவனுக்குப் படைத்தார்.

🌹​இக்கோயிலின் அர்ச்சகர் வேடனின் இந்த வழிபாட்டு முறையைக் கண்டு மனம் வருந்தி, இதைத் தடுத்து நிறுத்துமாறு சிவபெருமானிடம் முறையிட்டார். சிவபெருமான் திண்ணனாரின் மெய்யான பக்தியை அர்ச்சகருக்கு உணர்த்த எண்ணி, ஒருநாள் மறைந்திருந்து நடப்பதைப் பார்க்கும்படி பணித்தார்.

🌹​வழக்கம்போல் திண்ணனார் வாயில் தீர்த்தம் ஏந்தியும், மாமிச உணவை எடுத்துக்கொண்டும் சிவலிங்கத்தை வழிபட வந்தார். அவரது பக்தியின் ஆழத்தை உலகுக்கு வெளிப்படுத்த எண்ணிய சிவபெருமான், லிங்கத்தின் ஒரு கண்ணில் இருந்து ரத்தம் வழியும்படி செய்தார். இதைக் கண்டு பதறிப்போன திண்ணனார் மூலிகைகளைப் பிழிந்து ரத்தத்தை நிறுத்த முயன்றார்; ஆனால் பலனில்லை.

🌹வேறு வழியின்றி, தன் அம்பால் தன் சொந்தக் கண்ணைத் தோண்டி எடுத்து லிங்கத்தின் காயம்பட்ட கண்ணில் பொருத்தினார்; உடனே ரத்தம் வழிவது நின்றது.

மகிழ்ந்தார்​, ஆனால் அடுத்த கணமே, சிவலிங்கத்தின் மற்றொரு கண்ணிலிருந்தும் ரத்தம் வழியத் தொடங்கியது. சற்றும் தயங்காமல் தன் மறுகண்ணையும் தோண்டி எடுத்துப் பொருத்த துணிந்தார். எனினும், இரண்டு கண்களையும் இழந்துவிட்டால் பார்வை தெரியாமல் லிங்கத்தின் கண்ணை அடையாளம் காண முடியாது என்பதை உணர்ந்த திண்ணனார், தன் காலை லிங்கத்தின் ரத்தம் வழியும் கண்ணின் மீது அடையாளமாக வைத்தார்; பின் தன் மறு கண்ணைத் தோண்ட முயன்றார்.

🌹​அவரது எல்லையற்ற அன்பையும் பக்தியையும் கண்ட சிவபெருமான் உடனே காட்சி தந்து, அவரது கையைப் பிடித்துத் தடுத்து, முக்தி அருளினார். மேலும், அன்றிலிருந்து அவர் “கண்ணப்ப நாயனார்” என்று அழைக்கப்படுவார் என்றும், 63 நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்வார் என்றும் அருள்புரிந்தார்.

🌼 ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹கருவறைக்கு எதிரில் வெள்ளைக்கல் நந்தியும் பித்தளை நந்தியுமாக 2 நந்திகள் & 2 கொடிமரங்கள் உள்ளன – ஒன்று உலோகத்தால் ஆனது, மற்றொன்று 60 அடி உயரமும் ஒரே கல்லால் ஆனதுமாகும்.

🌹முன் காலத்தில் ரிஷிகள் பொன்முகலி ஆற்றில் நீராடி விட்டு, கிழக்கு நோக்கி தரிசித்ததால் அவர்களுக்கு காட்சி கொடுப்பதற்காக இறைவன் மேற்கு நோக்கி உள்ளார். கோஷ்டத்தில் கணபதி லிங்கோத்பவர் தக்ஷிணாமூர்த்தி, பிரம்மா துர்கை உள்ளனர்.

🌹கோயிலிலுள்ள பிற சந்நிதிகள் ​மூலவர் சிவபெருமான் மற்றும் ஞானப்பூங்கோதை அம்பாளைத் தவிர ஸ்ரீராமர், சீதை, லக்ஷ்மண், அனுமன், தருமன் (யுதிஷ்டிரர்), வியாச முனிவர், சித்திரகுப்தன் மற்றும் எமதர்மன் ஆகியோரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்டதாகக் கூறப்படும் சிவலிங்கங்களைக் காணலாம்.

🌹​கருவறைக்கு அருகிலேயே கண்ணப்ப நாயனாரின் திருவுருவச் சிலையும் அமைந்துள்ளது. ​இக்கோயில் கிரகதோஷ ஸ்தலம் என்பதால் நவகிரக சந்நிதி தனியாக இல்லை; பிரகாரத்தில் சனி பகவானின் திருவுருவம் மட்டுமே உள்ளது. அம்மன் இடுப்பில் அணிவிக்கப்படும் ஒட்டியானத்தில் கேது உருவம் காணப்படுகிறது.

🌹​தரைமட்டத்திலிருந்து சுமார் 35 அடி ஆழத்தில், 20 படிகள் இறங்கிச் செல்லும் வகையில் “பாதாள கணபதி” சந்நிதி அமைந்துள்ளது.

🌹​இங்குள்ள சிவலிங்கம் எப்போதுமே தங்கக் கவசத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இத்தங்கக் கவசம் 27 நட்சத்திரங்களைக் குறிக்கிறது. தீபாராதனையின் போது இக்கவசம் தற்காலிகமாக அகற்றப்படும்;

🌹அச்சமயத்தில் லிங்கத்தின் அடிப்பாகத்தில் சிலந்தி, யானை, ஐந்து தலை பாம்பு மற்றும் கண்ணப்ப நாயனார் பொருத்திய கண் ஆகியவற்றின் உருவங்களை நாம் தரிசிக்கலாம்.

🌹​அருகிலுள்ள மலையின் உச்சியில் கண்ணப்பருக்குத் தனிக் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநீறு (விபூதி) பிரசாதமாக வழங்கப்படுவதில்லை; கண்ணப்பரின் அபிஷேகத் தீர்த்தத்தைக் குறிக்கும் வகையில், கற்பூரம் கலந்த தீர்த்தம் மட்டுமே பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

🌹​இக்கோயிலில் சிவலிங்கத்தின் மீது நேரடியாக அபிஷேகம் செய்யப்படுவதில்லை; அதன் ஆவுடையாருக்கு (பீடத்திற்கு) மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.

​இத்தலத்திற்கு வருகை தந்து இறைவனைத் தரிசித்தாலே மோட்சம் கிட்டும் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கை.

🌹​நாள்தோறும் நடைபெறும் ராகு – கேது மற்றும் சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

​🌹​அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது இந்நன்னாளில் ஞானப்பூங்கோதை அம்பாள் தங்கப் புடவையால் அலங்கரிக்கப்பட்டு அருள்பாலிக்கிறார்.

​

🌼 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ராகு – கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை

திருமண தடை நீங்க

புத்திர தோஷம் மற்றும் ஆயுள் விருத்தி

வியாபாரம் மற்றும் தொழில் தடை

🌼 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மாசி மாதத்தில் (பிப்ரவரி – மார்ச்) நடைபெறும் மகா சிவராத்திரி இத்தலத்தின் முதன்மைத் திருவிழாவாகும்.

​கார்த்திகை தீபம், நவராத்திரி சிறப்பு

தை மாத மகர சங்கராந்தி (பொங்கல்) மற்றும் சிவராத்திரி நாட்களில் நடைபெறும் கிரிவலம் ஆகியவையும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

🌼 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மஹாவிஷ்ணு, லக்ஷ்மி தேவி, பிரம்மன், சரஸ்வதி, இந்திரன், ஸ்ரீராமர், ஆதிசேஷன், மற்றும் அகத்தியர், வசிஷ்டர், நக்கீரர், பரத்வாஜ மகரிஷி,

முசுகுந்த சக்கரவர்த்தி, பரணதேவநாயனார் பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, ,

சிலந்தி, பாம்பு, யானை, கண்ணப்ப நாயனார், அப்பர் சம்பந்தர் சுந்தரர் சேக்கிழார் முதலியோர்.

🌼அமைவிடம் நேரம் தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருப்பதியிலிருந்து 45 கி.மீ., சித்தூரிலிருந்து 100 கி.மீ., மற்றும் சென்னையிலிருந்து 120 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் இது சாலை மார்க்கமாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாளஹஸ்தியில் ஒரு இரயில் நிலையம் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் திருப்பதி ஆகும், இது 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

6AM – 9PM CONTINUOUS மதியம் நடை சாத்துவதில்லை.

கேது பரிகாரத்திற்கு செல்பவர்கள், காலை முதல் மாலை ஐந்து மணிக்கு முன்னதாக பதிவு செய்ய வேண்டும். அபிஷேகத்திற்கு மூன்று மாதம் முன்னதாகவே பதிவு செய்ய வேண்டும்.

88011 28589 Dr.பரசுராம் தலைமை குருக்கள்.

95151 54805 பிரபுநாதன் குருக்கள்

79932 74666 விஜய தக்ஷிணாமூர்த்தி குருக்கள்

🌼கோவில் தேவாரப் பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

செண்டா டும்விடையாய்

சிவனேயென் செழுஞ்சுடரே

வண்டாருங் குழலா

ளுமைபாகம் மகிழ்ந்தவனே

கண்டார் காதலிக்குங்

கணநாதனெங் காளத்தியாய்

அண்டா உன்னையல்லால்

அறிந்தேத்த மாட்டேனே. 1

சுந்தரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *