திட்டை தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர்
மூலவர் : வசிஷ்டேஸ்வரர்
அம்பாள் : உலகநாயகியம்மை, மங்களாம்பிகை, சுகந்தகுந்தளாம்பிகை
ஸ்தல விருக்ஷம் : முல்லை, வெண்சென்பகம், செவ்வந்தி
தீர்த்தம் : சக்கர, சூல தீ
புராண பெயர் : தென்குடிதிட்டை
பாடல் : சம்பந்தர்
சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 15
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சூரிய பகவான் ஆவனி 15,16,17 தேதி கருவறையில் லிங்க திருமேனியின் மீது தன் கிரணங்களை பரப்பி பூஜை செய்கிறார்.
உத்தராயண புண்ணிய காலத்தில் பங்குனி மாதம் 25,26,27 தேதிகளில் சூரிய பகவான் உதயசூரியனாக வசிஷ்டேஸ்வரர் திருமேனியில் பட்டு சூரிய பூஜை செய்கிறார்.
மூலஸ்தான வசிஸ்டேஸ்வர் திருமேனியில் விமானத்தில் இருந்து 20 நிமிடத்திற்கு ஒரு முறை நீர் சொட்டு சொட்டாக இதுவரை விழுந்து கொண்டுள்ளது அதிசியமாகும். விமானத்தில் சந்திரகாந்த கல் , சூரியகாந்த கல் வைத்து கட்டப்பட்டுள்ளது.
இக்கற்கள் காற்றிலிருந்து ஈரப்பதத்தை தம்முள் ஈர்த்து
வேதிவினை ஏற்பட்டு 24
நிமிடங்களுக்கு ஒரு சொட்டு நீரை சுவாமியின் மீது சொட்டுகின்றது.
நித்யாபிஷேகம் செய்வது வேறெங்கும் காண இயலாத சிறப்பு. சந்திரனின் வழிபாடாக இந்த அபிஷேகம் நிகழ்கிறது.
குரு ஸ்தலங்களில் முக்கியமான தலம் இது.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பொதுவாக அமர்ந்த நிலையில் காட்சி தரும் குரு
பகவான், இத்தலத்தில் நின்ற நிலையில் தனிச் சன்னதியில் ராஜகுருவாக இருக்கிறார்.
இங்கே வந்து தன்னை வேண்டுவோருக்கு உடனடியாக சென்று உதவ வேண்டும் என்பதற்காக குரு
நிறை நிலையிலேயே அருள் பாலிக்கிறார் என்கின்றனர்.
அம்மன் சன்னிதி மேல் விதானத்தில் 12 ராசி கட்டங்கள் உள்ளன. அந்தந்த ராசியினர் தங்கள் ராசிகட்டத்தின் கீழே நின்று பிரார்த்தனை செய்வதால் சகல தோஷங்களும் நீங்க பெறுவர் என்பது ஐதீகம். பெண்களுக்கு மங்கள வாழ்வளிப்பதால் அம்பாள் மங்களாம்பிகை இனப் போற்றப்படுகிறாள்.
ஆதிகாலத்தில் இறைவன் விரும்பி இருந்த 28 தலங்களில் 26 தலங்கள் ஊழிகாலத்தில் முழ்கிவிட்டன. 2 தலங்கள் மட்டும் திட்டாக நின்றது. அவற்றுள் ஒன்று சீர்காழி. மற்றொன்று தென்குடி திட்டை.
வசிஷ்டேஸ்வரர் மும்மூர்த்திகளுக்கு சக்தியையும் ஞானத்தையும் அருளியவர். கால பைரவரின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கியவர். குரு பகவானுக்கு தேவகுரு என்ற பதவியை அருளியவர். நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்களின் நடுவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் பஞ்சலிங்கேஸ்வரராக அருள் பாலிக்கிறார். இது தவிர தனக்கு இணையாக உயர்ந்த பீடத்தில் அன்னை சுகந்த குந்தளாம்பிகையை இருத்தி உள்ளார்.
வசிஷ்ட முனிவர் அசிரமம் அமைத்து இத்தல ஈஸ்வரனை பூஜித்தமையால் இத்தல ஈஸ்வரன் வசிஷ்டேஸ்வரர் என பெயர் பெற்றார். அம்பாள் உலகநாயகியம்மை.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
புராணங்களின்படி, பிரளய காலத்தில் பிரபஞ்சம் முழுவதும் நீரில் மூழ்கியபோது, இந்த இடம் ஒரு மணல் குன்று போல உயர்ந்து நின்றது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாகத் தோன்றியதாக நம்பப்படுகிறது. எனவே, இவ்விடம் தென்குடி திட்டு (தெற்குப் பக்க மணல் குன்று) என்ற பெயரைப் பெற்றது.
இந்து புராணங்களின்படி, குரு (தமிழில் “வியாழன்”) என்பவர் ஆங்கிரச முனிவரின் ஏழாவது மகன் ஆவார். குரு மிகவும் கற்றறிந்த அறிஞராகி, தேவர்களுக்கு குருவானார். அவரது வழிகாட்டுதலின் கீழ், தேவர்கள் அமைதியாக வாழ்ந்தனர். ஒருமுறை அவர் இந்திரனைச் சந்திக்கச் சென்றபோது, இந்திரன் ஊர்வசியின் நடனத்தைப் பார்ப்பதில் மும்முரமாக இருந்ததால் அவரைச் சந்திக்கவில்லை. இந்த அவமதிப்பால் கோபமடைந்த குரு, தேவர்களைக் கைவிட்டுத் துறவியாக வாழத் தொடங்கினார். அவரது வழிகாட்டுதல் இல்லாமல், தேவர்களின் வாழ்க்கை துன்பமயமாகியது, மேலும் அசுரர்கள் அவர்களை அச்சுறுத்தத் தொடங்கினர். தனது தவறை உணர்ந்த இந்திரன், குருவிடம் மன்னிப்புக் கேட்பதற்காக அவரைத் தேடினான், ஆனால் அவரால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்திரன் பல சிவன் கோவில்களுக்குச் சென்று, குருவைக் கண்டுபிடிக்க உதவுமாறு இறைவனிடம் வேண்டினான். அவன் இந்தக் கோவிலுக்கு வந்தபோது, குரு அவனுக்கு முன் தோன்றி அவனை மன்னிக்கத் தீர்மானித்தார்.
மஹாபிரளய காலத்திலும் அழியாமல் மேடாகக் காட்சியளித்த இந்த “ஞானமேடு” (திட்டை) திருத்தலத்திற்கு வந்த வசிஷ்ட முனிவர், இங்கு ஆசிரமம் அமைத்து, சுயம்புவாக எழுந்தருளிய சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து வழிபட்டார். இதனால் மகிழ்ந்த ஈசன் அவருக்குக் காட்சியளித்தார். வசிஷ்டர் பூஜித்ததால் தான் இத்தலத்து இறைவனுக்கு வசிஷ்டேஸ்வரர் என்ற திருநாமம் வந்தது.
அங்கிரச முனிவரின் புத்திரரான பிரகஸ்பதி (நவக்கிரக குரு பகவான்), தனக்கு “தேவகுரு” மற்றும் “ராஜகுரு” தகுதியும் பதவியும் கிடைக்க வேண்டி இத்தலத்து இறைவனான வசிஷ்டேஸ்வரரை வணங்கி தவம் இருந்தார். அவரது பக்திக்கு மெச்சி சிவபெருமான் அவருக்குத் தேவர்களின் குருவாகும் “ராஜகுரு” பதவியை அருளினார்.
இங்கு மூலவர் மற்றும் அம்பாள் சன்னதிகளுக்கு நடுவே குரு பகவான் தனி சன்னதியில், நின்ற கோலத்தில் ராஜகுருவாகப் புத்தகத்தைக் கையில் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழா கோலாகலமாக நடக்கிறது.
நவகிரகங்களில் சுபகாரகர் குரு பகவான், தான் இருக்குமிடம் மட்டுமின்றி பார்க்கும் இடத்தில் உள்ள மற்ற கிரஹங்களின் தோஷத்தையும் போக்கும் வல்லமை பெற்றவர்.
திட்டை என்பது ஞானமேடு. மனித உடல் மூலாதாரம் சுவாதிஷ்டானம் மணிபூரகம் அனாதகம் விசுத்தி ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இத்தல முருகன் தன்னை வழிபடுபவர்களுக்கு முதலில் இந்த ஆறு ஆதார ஞானம் அருளி, அதற்கு மேல் ஞானமாகி மெய்யுணர்வையும் தந்து பேரானந்தப் பெருவாழ்வில் நிலைபெற வைப்பார். எனவே இத்தலத்தில் முருகன் மூலமூர்த்தியாக விளங்கி உடலால் தென்குடி ஆகவும் உயிரால் ஞானமேடு எனப்படும் தென் திட்டையாகவும் இருந்து அருள் பாலிக்கிறார்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிழக்கு நோக்கி, அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கொடிமரம் விமானம் என அனைத்தும் கருங்கற்களால் உருவாக்கப்பட்ட கோவில். கோயில் வெளியே அழகிய தீர்த்தகுளம் உள்ளது.
தேவ மங்கையர்களும் தேவர்களும் முல்லை மல்லிகை போன்ற கொடிகளாகவும், வில்வம் அரசு பலாசு முதலிய மரங்களாகவும் நின்று ஸ்தல விருக்ஷங்களாக இறை தொண்டாற்றுகின்றனர்.
வரங்களை வாரி வழங்கும் வசிஷ்டேஸ்வரர் கோயில் ராஜகுருவை வணங்கி குருவின் திருவருளையும் அம்மையப்பனின் பேரருளையும் பெற்று வாழ்வில் உயர்நிலை அடைவோம்.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
குரு பரிகாரம் மற்றும் ராஜயோகம்
கல்வி மற்றும் அறிவு மேம்பட
செல்வ வளம்
தோஷ நிவர்த்தி
திருமணத்தடை நீங்க
குழந்தை பேறு
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
குருபெயற்சி விழா
மஹா சிவராத்திரி
சித்ரா பௌர்ணமி
வைகாசி பிரம்மோற்சவம்
திருக்கார்த்திகை
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரம்மன் மஹாவிஷ்ணு முருகப்பெருமான் பைரவர் சூரியன் சனி காமதேனு ஆதிசேஷன் முப்பத்து முக்கோடி தேவர்கள் அப்பர் சம்பந்தர்
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தஞ்சாவூரில் இருந்து 10KM திருக்கருக்காவூர் செல்லும் வழியில் திட்டை (தென்குடித்திட்டை) வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து திட்டை மற்றும் திருக்கருக்காவூர் செல்லும் நகரப் பேருந்துகள் மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.
7AM – 12.30PM 4PM – 8PM
99521 41092 சுவாமிநாதன் குருக்கள்
90431 89055 குருமூர்த்தி குருக்கள்
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முன்னைநான் மறையவை
முறைமுறை குறையொடுந்
தன்னதாள் தொழுதெழ
நின்றவன் தன்னிடம்
மன்னுமா காவிரி
வந்தடி வருடநற்
செந்நெலார் வளவயல்
தென்குடித் திட்டையே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply