செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர்
மூலவர் : சொர்ணபுரீஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்பாள் : சுகந்தகுந்தளாம்பிகை மருவார்குழலி
ஸ்தல விருக்ஷம் : வில்வம் / வன்னி
தீர்த்தம் : சூரிய தீ / காவேரி
புராண பெயர் : இலக்குமிபுரி, கந்தபுரி, இந்திரபுரி
ஊர் : செம்பொனார்கோவில்
பாடல் : அப்பர், சம்பந்தர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 42
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இங்குள்ள சிவலிங்கம் 16 இதழ்கள் உடைய தாமரை போன்ற ஆவுடையில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சித்திரை மாதம் 7-18ம் நாள் வரை 12 நாட்கள் காலையில் சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது படுவது விசேஷம். விசேஷ பூஜைகள் உண்டு.
மஹாலக்ஷ்மி திருமாலை தன் கணவனாக அடைந்ததும் இத்தல இறைவனை வழிபட்டு தான். எனவே “இலக்குமிபுரி”.
இந்திரன் இங்குள்ள சூரியதீர்த்தத்தில் நீராடி
சிவனை பூஜித்து விருத்திராசுரணை வெல்ல வஜ்ராயுதம் பெற்றான். எனவே “இந்திரபுரி”.
முருகப்பெருமான் இறைவனை வழிபட்டு தாருகனை வதைத்ததால் “கந்தபுரி”.
மேலும் ரதி மன்மதனை தன் கணவனாக அடைந்தது இத்தல இறைவனை வழிபட்டு தான்.
வட்டவடிவமான ஆவுடையாருள்ள இம்மூர்த்தி திருமாலால் பூஜிக்கப்பட்டவர்.
இத்தலத்தில் தான்
சிவபெருமான் வீரபத்திரரை தோற்றுவித்து திருப் பறியலூருக்கு அனுப்புகிறார்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவனின் சொல் கேளாமல் பார்வதி தன் தந்தையின் யாகத்திற்கு செல்கிறார். இதனால் சிவன் பார்வதியை தன்னுடன் சேர்த்துக் கொள்ள மறுக்கிறார். எனவே முருகப்பெருமான், சிவன் வடிவில் தன் தாய்க்கு நல்ல போதனைகளை எடுத்துக் கூறினார். இதனாலேயே இங்குள்ள முருகன் கையில் அட்சய மாலையுடன் காட்சி தருகிறார்.
பெயர் காரணங்கள்
சோழ மன்னர்கள் புதுப்பித்ததால் “செம்பியன் பள்ளி.” (செம்பியன்= சோழர்களின் மற்றொரு பெயர்)
சிவபெருமானின் கருவறை கோபுரத்தின் மேற்கூரை பல தங்க தாள்களை (செம்பொன்) பயன்படுத்தி அமைக்கப்பட்டதாக வரலாறு.
இந்தக் கோயிலின் சுயம்புலிங்கம் ஒரு காலத்தில் தங்கம் போல் மின்னியது. இதனாலேயே இறைவன் “ஸ்ரீ செம்பொன் பள்ளியார்” என்றும் போற்றப்படுகிறார்.
பொதுவாக கோவிலை சுற்றியுள்ள கிராமத்திற்கு தனி பெயர் இல்லை. இந்த நெறியை பின்பற்றி இங்கு உள்ள ஊர் செம்பொனார்கோவில் என்று அழைக்கப்படுகிறது.
ஸ்தல புராணம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தந்தை தக்ஷனுக்கு தெரியாமல் தாக்ஷாயணி சிவபெருமானை மணந்து கொண்டாள். இதனால் அவர்கள் மீது கோபம் கொண்டிருந்த தக்ஷன் தான் நடத்திய யாகத்திற்கு இவர்களைத் தவிர மற்ற அனைவர்களையும் அழைத்து இருந்தான். சிவபெருமானுக்கு கொடுக்க வேண்டிய அவர்பாகத்தை கூட கொடுக்கவில்லை. இதை தட்டிக் கேட்கச் சென்ற தாக்ஷாயணியையும் அவமதித்தான்.
தன் தந்தையின் யாகம் வெற்றி அடையாது என சபித்து, தன்னை எரித்து கொண்டாள். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் வீரபத்ரரை உருவாக்கி தக்ஷன் மற்றும் யாகத்தை அழித்தார். அங்கு வந்த விருந்தினர்களையும் தண்டித்தார்.
செம்பொனார் கோவிலில் இருந்து தான் சிவபெருமான் வீரபத்திரர் & பத்ரகாளியை
உருவாக்கி தக்ஷனையும் யாகத்தையும் அழிக்க
அவர்களை திருபறியலூருக்கு அனுப்பினார்.
தக்ஷன் மன்றாடி மன்னிப்பு வேண்ட, அவனது துண்டிக்கப்பட்ட தலை அக்னியில் எறியப்பட்டதால், அசல் தலைக்கு பதிலாக ஒரு ஆட்டின் தலையை வைத்து அவரது உயிரை காப்பாற்றினார். தக்ஷன் தன் தவறை உணர்ந்து சிவபெருமானை செய்த பிரார்த்தனை தான் சமகம் எனப்படுகிறது.
வீரபத்ரர் தக்ஷனுடன் கூடிய சிலையை இங்கு தாழ்வாரத்தில் காணலாம்.
தாக்ஷாயணி சிவபெருமானை எதிர்த்த ஒருவரின் மகளாக பிறந்த பாவத்திலிருந்து விடுதலை தேடினாள். இந்த இடத்தில் “பஞ்சாக்னி’யில் அமர்ந்து தவம் செய்தாள். அவளது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவள் முன் தோன்றி “சுகந்த குந்தளாம்பிகை” என ஆசீர்வதித்து கைலாயம்
அழைத்து சென்றார்.
பெண்கள் புதிய நகைகள் வாங்கிய பிறகு அதை முதலில் சுகந்த குந்தளாம்பிகை தேவிக்கு அர்ப்பணிக்கிறார்கள். அவ்வாறு செய்தால் நிறைய தங்கம் சேரும்
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°′°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காவிரி தென்கரையில், கோட் செங் சோழனால் கட்டப்பட்ட கிழக்கு நோக்கிய மாட கோவில். ராஜகோபுரம், கொடிமரம் இல்லை. ஆனால் நுழைவு வாயிலில் அழகான வளைவு உள்ளது. நுழைவாயிலைக் கடந்ததும் பிரகாரமும், அதைத் தொடர்ந்து மகா மண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் அமைந்துள்ளன. கருவறையின் மேல் உள்ள விமானம் ஏகதள வேசர விமானம் (ஒற்றை அடுக்கு வட்ட வடிவ அல்லது சிகர அமைப்பு) ஆகும்.
கருவறை கோஷ்டத்தில் வழக்கமான தக்ஷிணாமூர்த்தி, விநாயகர், பிரம்மா, துர்க்கை ஆகியோருடன் சோழர் கால கட்டடக்கலையை உணர்த்தும் ஜேஷ்டாதேவியின் சிலையும் உள்ளது.பிரகாரத்தில் கையில் உருத்திராட்ச மாலையுடன் இருக்கும் தனித்துவமான முருகன், வீரபத்திரர் மற்றும் தக்ஷன் சிலைகள் உள்ளன.
சோழர்களின் கல்வெட்டுகள் 6 உள்ளன.
சுவர்களில் அழகிய சிற்பங்கள்
பிக்ஷாடனர், பல்வேறு அரசர்கள், துறவிகள், ராணிகள் என உள்ளது.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தங்கம் மற்றும் சொத்து சேர்க்கை (செல்வ வளம்)
திருமணத் தடை நீங்குதல் & தம்பதி ஒற்றுமை
நவக்கிரக தோஷ நிவர்த்தி (ராகு – கேது, சூரியன், சந்திரன், சனி)
தியானம், யோகம் மற்றும் காரிய வெற்றி
துன்பங்கள் நீங்குதல்
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முதன்மைத் திருவிழா: சூரியத் திருவிழா (சௌர மகோத்சவம்)
12 தினங்கள்.
மஹா சிவராத்திரி
மார்கழி திருவாதிரை
ஆனி திருமஞ்சனம்
ஐப்பசி அன்னாபிஷேகம்
கார்த்திகை சோமவாரம் & திருக்கார்த்திகை
ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி மற்றும் நவராத்திரி..
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஹாவிஷ்ணு மஹாலக்ஷ்மி பிரம்மா தாக்ஷாயினி முருகன் இந்திரன் குபேரன் சூரியன் வசிஷ்டர் அகத்தியர் ரதி மன்மதன் வீரபத்திரர் மஹாகாளி அப்பர் சம்பந்தர் சுந்தரர் சேக்கிழார் முதலியோர்.
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார், தரங்கம்பாடி, பொறையாறு, ஆக்கூர் மற்றும் காரைக்கால் செல்லும் அனைத்து நகர மற்றும் புறநகரப் பேருந்துகளும் செம்பனார்கோவில் வழியாகச் செல்கின்றன. செம்பனார்கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மிக எளிதாக கோவிலை அடையலாம்.
மயிலாடுதுறை 10KM
திருநனிபள்ளி / புஞ்சை 4KM
திருப்பறியலூர் 4KM
8AM – 12 NOON, 5PM – 8PM
78455 83155 கணேசன் குருக்கள்
குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மருவார் குழலி மாதோர் பாகமாய்த்
திருவார் செம்பொன் பள்ளி மேவிய
கருவார் கண்டத் தீசன் கழல்களை
மருவா தவர்மேல் மன்னும் பாவமே.
ஞானசம்பந்தர்
ஊனினுள் ளுயிரை வாட்டி
யுணர்வினார்க் கெளிய ராகி
வானினுள் வான வர்க்கும்
அறியலா காத வஞ்சர்
நானெனிற் றானே யென்னு
ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்
தேனும்இன் னமுது மானார்
திருச்செம்பொன் பள்ளி யாரே.
திருநாவுக்கரசர்


Leave a Reply