குளித்தலை திருகடம்பந்துறை கடம்பவனேஸ்வரர்

🌸மூலவர் : கடம்பவனேஸ்வரர்

உற்சவர் : சோமாஸ்கந்தர்

அம்பாள் :முற்றிலாமுலையம்மை பாலகுஜாம்பாள்

ஸ்தல விருக்ஷம் : கடம்பமரம்

தீர்த்தம் : காவிரி, பிரம்ம தீ

பாடல் : அப்பர்

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 2

🌸 ஸ்தல சிறப்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷பொன்னியின் குளிர்ந்த அலைகள் கரையை மோதி நீர்த்திவிலைகளை காற்றில் மிதக்க விட்டு மேலும் குளிர்ச்சியை உண்டாக்குகின்றன. அதனால் இந்த இடத்திற்கு குளிர்தண்அலை என்றும், குழித்த சோலைகளை உடையதால் குழித்தண்டலை என்றும், கடம்ப மரங்கள் நிறைந்து இடமாக இருந்ததால் கடம்பந்துறை, கடம்பவனம், கடம்பர்கோயில் என்றும், தமிழ்நாட்டில் காவிரிக் கரையில் வடக்கு பார்த்த சன்னதி கொண்ட ஒரே தலமான படியால் தக்ஷிணகாசி என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

🌷ஒரு நாள் சிவன் முருகனை அழைத்து, “குழந்தாய், அன்று பிரணவத்தின் பொருள் உரைத்தாயே, அதை யாரிடம் நீ கற்றாய்?” என்று கேட்கிறார். முருகன் பூர்வத்திலே சிவன் உமைக்கு பிரணவப் பொருள் உரைக்கும் பொழுது மறைந்து கேட்ட குற்றத்தை உணர்கிறார். உடனே மோனியாகி விடுகிறார். இம்மோனம் நீங்கி ஞானம் பெற்று, அம்மை அப்பனின் பிரியத்தைப் பெற்று அவர்கள் இடையே சோமாஸ்கந்தராக அமைதியுடன் அமருகிறார் இத்தலத்தில். இதன் காரணமாக இத்தலம் கந்தபுரி என்றும், ஞானோதயபுரி என்றும் பெயர் பெறுகிறது.

🌷சோமகன் என்ற அரக்கன் நான்கு மறைகளையும் களவாடி பாதாளம் சென்று மறைகிறான். உலகோர் பிரார்த்தனைக் கிணங்கி நாராயணன் இத்தலத்தை அடைத்து இறைவனைப் பூசித்து அவனருளால் மச்சாவதாரம் எடுத்து, அரக்கனை வதைத்து, நான்மறைகளை மீட்டு, இத்தலத்து இறைவனடியில் சமர்ப்பித்து, மீண்டும் உலகோர்க்கு அளிக்கிறார். இது காரணமாக இத்தலம் சப்தபுரி என்றும் சதுர்வேதபுரி என்றும் பெயர் பெறுகிறது.

🌷 தேவ சர்மா இறைவனை வணங்கி தன் பாவம் தொலைத்த இடம்.அவன் பிரார்த்தனைக்கிணங்க இறைவனும், இறைவியும் மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கல்யாணக் காட்சியை அளிக்கின்றனர். இத்தலம் வடமதுரை என்ற பெயரைப் பெறுகிறது.

🌷பிரமனும் இத்தலத்தை அடைந்து பூசனை புரிந்து, அரனுக்கும், அம்மைக்கும், பரிவார தெய்வங்களுக்கும் ஆலயம் எழுப்பி, அக்னி மூலையில் அக்னி தீர்த்தம் உண்டாக்கி, நித்திய பூசனைகளைச் செய்து இறைவனுடன் இரண்டறக் கலக்கிறான். அதனால் இத்தலம் பிரம்புரி என்ற பெயர் பெறுகிறது.

🌷கன்வ மகரிஷிக்கு சிவபெருமான் , கடம்பமரத்தில் காட்சியருளிய தலம்.

🌸 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷கிருத யுகத்தில் பிரமன் பூஜித்ததால் சுவாமிக்குப் பிரமேசுவரர் என்ற நாமம் ஏற்பட்டது. திரேதா யுகத்தில் சப்த கன்னிகைகள் பூசித்து நற்கதி பெற்றனர். துவாபரயுகத்தில் அகத்திய முனிவர் வழிபட்டுப் பேறு  பெற்றார். கலியுகத்தில் புண்ணிய மூர்த்தியாகிய ஆறு முகக் கடவுள் பூசித்தார். யுகம் கண்ட கோவில்.

🌷காலைக் கடம்பர் மதியம் சொக்கர் ( ரத்தினகிரி ) மாலை ஈங்கோய்நாதர் என்ற வரிசையில் வழிபடுவது குறைவிலாத பலன்களை அளிக்கும். இக்கோயிலில் சிவன் சுயம்புவாக வாமதேவ முகமாக (வடக்கு திசையை நோக்கி) இருக்கிறார். கோமுகம் வலது புறமாக திரும்பி இருக்கிறது.

🌷கருவறையில் லிங்கத்திற்கு பின்புறத்தில் சப்த கண்ணியர்கள் இருப்பது தனி சிறப்பு. சிவ பெருமான் அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷ விமோசனம் அளித்தார்.

🌷இவர் இத்தலத்தில் சப்த கன்னிகளுக்கு பாதுகாப்பாக இருப்பதாக ஐதீகம். இங்கு சுவாமிக்கு நேர் பின்புறத்தில் இருக்கும் சாமுண்டியை துர்கையாக வழிபடுகின்றனர். எனவே துர்க்கைக்கு தனி சன்னதி இல்லை. பெண்கள் துர்க்கைக்குரிய வழிபாட்டை சிவன் சன்னதி முன்பாகவே செய்வது விசேஷம். ராகு கால வேளையில் இவளுக்கும் சிவனுக்கும் விசேஷ பூஜைகளும் நடக்கிறது.

🌷கோயிலுக்கு எதிரே அகண்ட காவேரி ஓடுகிறது. சப்த கன்னிகளுக்கு சிவன் தைப்பூசம் நாளில் காட்சி கொடுத்ததாக ஐதீகம். எனவே அந்நாளில் இவர் காவிரியில் அம்பாளுடன் எழுந்தருகிறார். இவருடன் சுற்றுப்பகுதியில் உள்ள ஏழு சிவன்களும் எழுந்தருளுகின்றனர்.

🌷இத்தலத்தில் ஐப்பசி முதல்

கட்ட துலா ஸ்நானம் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இவரை காலை வேளையில் வழிபட்டால் காசியில் வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்திற்கு தக்ஷிண காசி என்றொரு பெயரும் உண்டு.

🌸 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷 தேவர்களை துன்பப்படுத்திய தூம்ரலோசனனை அழிக்க அம்பாளிடம் வேண்டி, அம்பாள் துர்க்கை வடிவம் எடுத்து அசுரனை அழிக்கச் சென்று, அசுரன் பெற்ற வரத்தால் துர்க்கையுடன் தொடர்ந்து சம பலத்துடன் மோதவே, அம்பாள் சப்த கன்னிகளை அனுப்புகிறாள்.

அவர்களை எதிர்க்க முடியாத அசுரன் தப்பி வனத்திற்குள் ஓடி கார்த்தியாயன மகரிஷியின் ஆசிரமத்திற்குள் ஒளிந்து கொண்டான். சப்த கன்னியரும் ஆசிரமத்திற்கு சென்றனர். அங்கு முனிவர் தவத்தில் இருந்ததைக் கண்ட அவர்கள், தூம்ரலோசனன் தான் முனிவர் போல உரு மாறி அமர்ந்திருப்பதாக கருதி முனிவரை அழித்துவிட்டனர்.

இதனால் அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அவர்கள் தங்கள் தோஷம் நீங்க அருளும்படி அம்பாளை வேண்டினர்.

🌷அம்பாள் இத்தலத்தில் சிவனை வேண்டிக்கொள்ள விமோசனம் கிடைக்கும் என்றாள். அதன்படி சப்த கன்னிகள் இங்கு வந்து தவம் இருந்தனர். சிவன் அவர்களுக்கு கடம்ப மரத்தில் காட்சி தந்து சாப விமோசனம் கொடுத்தார். அசுரனை அழித்தால் தங்களுக்கு மீண்டும் தோஷம் ஏற்படும் என்று கருதிய சப்த கன்னியர் மீண்டும் சிவனை வேண்ட அசுரனை அழித்தார்.

🌸 கோவில் சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷 காசிக்கு நிகரான கோவில், வடக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரம், 2 பிரகாரங்கள், வெளியே 16 கால் மண்டபம். விநாயகர் அனுக்ஞை விநாயகர். விமானம் திரிதளம். 🌷சிவன் வடக்கு நோக்கி இருப்பதால் பின்புறத்தில் தக்ஷிணாமூர்த்தி (தெற்கு), சண்டிகேஸ்வரர் மேற்கு முகமாகவும், பிரம்மா கிழக்கு முகமாகும். கருவறை கோஷ்டத்தில் லிங்கோத்பவர் இருக்கிறார் அவரின் இருபுறமும் மஹா விஷ்ணு பிரம்மா வணங்கியபடி உள்ளனர்.

🌷தனி சன்னதியில், கிழக்கு பார்த்த அம்பாள் முற்றிலாமுலையம்மை 👉அம்பாள் சன்னதிக்கு எனத் தனியாக ஒரு கொடிமரமும் பலிபீடமும் இருப்பது இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும். முன்புறம் பரம நாதர் காவல் தெய்வமாக இருக்கிறார். இவர் தனது வலது கையை நெற்றி மேல் வைத்து, மரியாதை செய்தபடி வித்தியாசமான கோலத்தில் இருக்கிறார்.

🌷இக்கோயிலில் நடராஜர் சன்னதியில் 2 நடராஜர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஒருவரது பாதத்தின் கீழ் முயலகன் இல்லை, இவரது தலையில் பிறைசந்திரன் இருக்கிறார்.

🌷பிரகாரத்தில் உள்ள நவகிரக சன்னிதியின் மேலே முருகன் வள்ளி தெய்வானை உடன் இருக்கிறார். செவ்வாய் தோஷ வழிபாடு. அருகில் சனீஸ்வரருக்கு தனி சந்நிதி.

🌷நால்வர், 63 நாயன்மார்கள், விநாயகர், சோமாஸ்கந்தர், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, நவகிரகங்கள் மற்றும் வெளிப்பிரகாரத்தில் பைரவர் சன்னதி ஆகியவை அமைந்துள்ளன.

🌸 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருமண வரம் மற்றும் குடும்பப் பிணிகள் நீங்குதல்

பிரம்மஹத்தி தோஷம், பாவ விமோசனம் & முக்திப் பேறு

செவ்வாய் தோஷப் பரிகாரம்

மும்மூர்த்தி தரிசனப் பலன் (காசிக்கு நிகரான பலன்)

🌸 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தைப்பூசத் திருவிழா ( 8 ஊர் சாமிகள் சந்திப்பு )

மாசி மகப் பெருவிழா பிரம்மோற்சவம் 13 நாட்கள்

வைகாசி விசாகம்

ஐப்பசி அன்னாபிஷேகம்

ஐப்பசி கந்த சஷ்டி

மார்கழி ஆருத்ரா தரிசனம் மஹா சிவராத்திரி

🌸 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சப்த கன்னியர், பிரம்மா, மஹாவிஷ்ணு, முருகப்பெருமான், கன்வமுனிவர், அகத்தியர், தேவ சர்மா, அப்பர், அருணகிரிநாதர்

🌸அமைவிடம்,நேரம்,தொடர்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருச்சியிலிருந்து கரூர், நாமக்கல் அல்லது ஈரோடு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் குளித்தலை வழியாகவே செல்லும்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து, நகரப் பேருந்துகளும் இயக்கப் படுகின்றன.

7AM – 12 NOON, 5PM – 8PM

95003 06224 ராஜலிங்க குருக்கள்

99941 44299 ரத்னகுமார்குருக்கள்

86106 30077 ஜீவா குருக்கள்

96557 36888 சசிதரன் சிவாச்சாரியார்

🌸 கோவில் தேவார பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

முற்றி லாமுலை

யாளிவ ளாகிலும்

அற்றந் தீர்க்கும்

அறிவில ளாகிலுங்

கற்றைச் செஞ்சடை

யான்கடம் பந்துறைப்

பெற்ற மூர்தியென்

றாளெங்கள் பேதையே. 1

திருநாவுக்கரசர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *