இரும்பை மாகாளம் மஹா காளேஸ்வரர்
மூலவர் : மஹாகாளேஸ்வரர்
உற்சவர் : சந்திரசேகரர்
அம்பாள் : குயில்மொழி நாயகி மதுரசுந்தரநாயகி
ஸ்தல விருக்ஷம் : புன்னை
தீர்த்தம் : மாகாள தீ,
பாடல் : ஞான சம்பந்தர்
ஆகமம் : சிவாகமம்,
ஊர் : இரும்பை, சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம்
தொண்டை நாட்டு ஸ்தலம் 32
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுயம்பு கருவறையில் லிங்கம் 3 பாகங்களாக பிளந்து, 3 முகங்களுடன் இருக்கிறது. இம்மூன்று பாகங்களையும் செம்பு பட்டயத்தில் கட்டி வைத்து பூஜைகள் செய்கின்றனர்.
இம் 3 முகங்கள் சிவன் விஷ்ணு பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளை குறிப்பதாக சொல்கிறார்கள். சிவனின் இந்த மும்மூர்த்தி தரிசனம் மிகவும் அபூர்வமானது.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மூன்று முக லிங்கம் : குலோத்துங்க சோழன் ஆண்ட காலம். கடுவெளி சித்தர் என்பவர் இங்கு கடுந்தவம் செய்து வந்தார். நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. மன்னன் பஞ்சத்திற்கான காரணம் தெரிந்து அறிவிப்பவர்க்கு பரிசு தருவதாக அறிவித்தான்.
பழுத்த அரசு இலையையே உணவாக உண்டு தவம் செய்து வந்த இச்சித்தரை கண்டு கேட்க அவ்வூரில் இருந்த வள்ளி எனும் தாசி எண்ணினாள். அவர் தவம் செய்யும் இடத்திற்கு வந்தாள்.
தவத்திலிருந்த சித்தர் பழுப்பிலையை உண்ண கையை நீட்டிய போது அவள், அவர் கையில் உணவை இட்டாள். அதைப் பெற்று உண்டமையால் உணர்வு வர, சித்தர் கண் விழித்துப் பார்க்க, அவளும் நாட்டில் பஞ்சம் நீக்கி செழுமை உண்டாக அவரிடம் வேண்டினாள்.
அதன்பின் நாட்டில் நல்ல மழை பெய்தது. மக்கள் பஞ்சம் நீங்க பெற்று, சிவபெருமானுக்கு திருவிழா எடுத்தனர். கோவில் திருவிழாவில் சுவாமி ஊர்வலமாக சென்ற பொழுது, அவருக்கு முன்பாக சித்தரின் தவத்தை கலைத்த தேவதாசி நடனமாடி சென்றாள்.
ஆடும் பொழுது அவள் கால் சிலம்பொன்று அவிழ்ந்து விழ அதைக் கண்ட கடுவெளிசித்தர் விழாவிற்கு தடை வந்து விடக்கூடாது என, அச்சிலம்பை அவள் காலில் பூட்டி விட, மக்கள் இதைக் கண்டு பரிகாசம் செய்தனர்.
மனமுதிர்ச்சி அடையாத மக்கள் ஏளனம் செய்ததை கண்ட சித்தர் மனம் பொறாது, இறைவனை நோக்கி பாட, இறைவன் திருமேனி 3 பாகங்களாக வெடித்தது. சிவலிங்க திருமேனி வெடித்ததறிந்த மக்கள் பயந்து திகைத்தனர். சித்தரின் திருவடிகளில் விழுந்து தங்கள் பிழை பொறுக்க வேண்டினர்.
மனமிரங்கிய கடுவெளிச் சித்தர் மீண்டும் ஒரு பாடலை பாடினார். ஒட்ட பாடியதும் வெடித்து விழுந்த 3சில்லுகளுள் 2 சில்லுகள் வந்து பழையபடியே ஒட்டிக்கொண்டன.
ஒன்று மட்டும் வெளியே போய் விழுந்தது. அச்சில்லு விழுந்த இடம் கழுவெளி எனும் பெயரில் சிறு கிராமமாக உள்ளது. சிவலிங்கம் செப்பு தகட்டால் இணைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது. பின் சிவன் சித்தருக்கு காட்சி தந்து முக்தி கொடுத்தார்.
குயில் மொழி நாயகி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அம்பாள் திருநாமம், இவள் தனி சந்நிதியில் தாமரை மலர் பீடத்தின் மேல் தெற்கு பார்த்தபடி மஹா லக்ஷ்மியின் அம்சத்துடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள்.
கடுவெளி சித்தர் அரச மரத்தின் அடியில் தவம் செய்த போது, அம்பாள் குயில் வடிவில் இம்மரத்தில் தங்கியிருந்து சித்திரை கண்காணித்து, அவரின் தவத்தின் மேன்மையை தன் குரலால் சிவனிடம் சொல்வாளாம்.
இதனால் அம்பாளுக்கு குயில் மொழி நாயகி என்று பெயர்.
பேச்சு சரியாக வராதவர்கள், இசை கற்பவர்கள் அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டு, அதனை நாக்கில் தடவி கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதால் குரல் வளம் சிறக்கும், கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.
கலா சந்திரன்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கோயில் பிரகாரத்தில் சந்திரன் மேற்கு பார்த்தபடி தனி சந்நிதியில் இருக்கிறார்.
இவர் இடது கையில் ஏடு ஒன்றை வைத்துக்கொண்டு, “கலாச் சந்திரன்” ஆக காட்சி தருகிறார்.
பக்தர்கள் இவருக்கு பால் சாதம் நைவேத்யம் படைத்து வழங்கு கின்றனர். இதனால் கல்வி கலைகளில் சிறந்து விளங்கலாம்.
நவகிரஹ சந்நிதியில் உள்ள கிரஹங்கள் அனைத்தும் மனைவியுடன் இருக்கின்றர். சூரியன் தாமரை மலர் மீது தன் இரண்டு கால்களையும் மடக்கி வைத்து அமர்ந்து கொண்டு, உஷா பிரத்யுஷா இருவரையும் தன் இரு மடிகளில் அமர்த்திய கோலத்தில் அருள் பாலிக்கிறார். சூரியனின் இந்த தரிசனம் விசேஷமானது.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவனிடம் வரம் பெற்ற அம்பன் அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டனர். அவர்கள் இருவரும் பார்வதி தேவியை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர்.
அவர்களை பார்வதி தேவி, மகாகாளி அவதாரமெடுத்து வதம் செய்தாள். இதனால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்த அம்பாள், இங்கு சிவனை நோக்கி தவம் செய்து, தோஷம் நீங்க பெற்றாள்.
பிற்காலத்தில் மஹாகாலர் எனும் மகரிஷி சிவ தல யாத்திரையின் போது வடக்கே உஜ்ஜைனில் உள்ள லிங்கமும், தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு லிங்கமுமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார்.
அவர் கிழக்கே வந்தபோது இத்தலத்தின் மஹிமையை அறிந்து இங்கேயும் ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்து வணங்கினார். சுவாமியும், “மஹா காளநாதர்” என்ற பெயர் பெற்றார்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இங்குள்ள ஸ்தல விநாயகர் சுந்தர கணபதி. இங்குள்ள விமானம் ஏகதள விமானம். ஞான சம்பந்தர், பட்டினத்தார் ஆகியோர் சுவாமியை குறித்து பதிகம் பாடியுள்ளனர். சுந்தரர் ஊர் தொகை நூலில் சுவாமியை பற்றி பாடியிருக்கிறார்.
அம்பாள் சந்நிதிக்கு முன் இடப்புறம் நடராஜர் தனி சன்னதியில் இருக்கிறார். இவரது கால் சற்று கீழே மடங்கியபடி இருக்கிறது. இதனை நடராஜரின் சந்தோஷ கோலம் என்கிறார்கள்.
நடராஜரையும் சிவகாமி அம்மனையும் சுற்றி அக்னி வளையம் இருக்க, அதன் மத்தியில் இவர்கள் காட்சி தருவது வித்தியாசமான அமைப்பாகும்.
இவ்விடத்தில் நின்று கொண்டு சுவாமி அம்பாள் நடராஜர் ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம்.
பின்புறத்தில் முருகன் , ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்து வள்ளி தெய்வானை யுடனும், காலபைரவர் தனி சந்நிதியில் தெற்கு பார்த்த படியும் காட்சி தருகின்றனர்.
கோவில் முன் பெரிய இலுப்பை தோப்பு உள்ளது.
4 கல்வெட்டுகள் உள்ளன.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பேச்சுத் திறன் மற்றும் இசை வரம்
தோஷ நிவர்த்தி
அவப்பெயர் நீங்க
கல்வி மற்றும் கலை வளர்ச்சி
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரம்மோற்சவம், தேர் திருவிழா, குரு பெயர்ச்சி, மஹா சிவராத்திரி, மாசிமகம், திருக்கார்த்திகை, தைப்பூசம் பங்குனி உத்திரம், பிரதோஷம்..
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பார்வதி தேவி, மாகாளர், கடுவெளி சித்தர்,
ஞானசம்பந்தர் சேக்கிழார்
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
3KM ஆரோவில் இருந்து
10 KM from அரசிலி கோவில்
திண்டிவனம் பாண்டி வழி கிளியனூர், திருச்சிற்றம்பலம் கூட் ரோடு தாண்டி இரும்பை பாதை பிரிகிறது, 2KM
7AM – 12NOON, 4PM – 8PM
94434 65502 & 90039 18189 சுவாமிநாத குருக்கள்
8098144813
வைத்தியநாத குருக்கள்
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மண்டுகங்கை சடையிற்
கரந்தும் மதிசூடிமான்
கொண்டகையாற் புரம்மூன்
றெரித்த குழகன்னிடம்
எண்டிசையும் புகழ்போய்
விளங்கும் இரும்பைதனுள்
வண்டுகீதம் முரல்பொழில்
சுலாய்நின்ற மாகாளமே. 1
ஞான சம்பந்தர்


Leave a Reply