திருப்பாற்றுறை திருப்பாலத்துறை ஆதிமூலேஸ்வரர்
மூலவர் : ஆதிமூலேஸ்வரர் / திருமூலநாதர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்பாள் : நித்யகல்யாணி / மேகலாம்பிகை
ஸ்தல விருக்ஷம் : வில்வம்
தீர்த்தம் : கொள்ளிடம்,
பாடல் : சம்பந்தர்
சுயம்பு, தேவாரப் பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி வடகரை ஸ்தலம் 59
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
உத்தராயணத்தில் பங்குனி 3ம் தேதியும் தக்ஷிணாயணத்தில் புரட்டாசி 3ம் தேதியும் சூரிய பூஜை நடந்து வந்தது.
கருவறை சுற்று சுவரில் வீணை வாசிக்கும் தக்ஷிணாமூர்த்தி அழகிய கோலத்தில். இடக்கால் சற்றே மடங்கி நளினமாக உள்ளார். இதனை வீணையின் இசைகேற்ப நடனமாடிய கோலம் என்கிறார்கள். அருகே சீடர்கள் இல்லை. இவருக்கு அருகிலேயே பிக்ஷாடனர்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அற்ப ஆயுள் பெற்றிருந்த மார்க்கண்டேயர் ஆயுள் விருத்திக்காக சிவனை வேண்டி யாத்திரை சென்றார். அவர் இங்கு வந்த பொழுது லிங்கத்திற்கு பூஜை செய்ய தீர்த்தம் கிடைக்கவில்லை. லிங்கத்தின் தலையிலிருந்து பால் பொங்கி தானாகவே அபிஷேகமானது.
அர்த்த மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடுகளுடன் நான்கு தூண்கள் விளங்கி, ” ராஜ சபை” என்றழைக்கப்படுகிறது.
இந்த சபையில் இருந்து சிவன் மன்னர் போல ஆட்சி செய்வதாக சொல்கிறார்கள்.
ஞான சம்பந்தர் சுவாமியை “மூலநாதேஸ்வரர்” என்றும், தலத்தை “கறார் கொன்றை” என்றும் பாடி உள்ளார். சுவாமிக்கு ஆதிமூலேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
தென்திசை எமதர்ம ராஜாவின் திசை. இவரது உக்கிரத்தை குறைக்க தெற்கு நோக்கிய அம்மன்களை வழிபடுவதால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் அம்பாள் நித்திய கல்யாணி தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். பௌர்ணமி தோறும் இவளது சன்னதியில் குழந்தை பேறுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. மேலும் அனுக்ஞை விநாயகரும் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிற்காலத்தில் சோழ மன்னனுக்கு பறவை மூலமாக அடையாளம்
மன்னன் வேட்டைக்கு சென்ற பொழுது அருகில் இருந்த புதரிலிருந்து வெண்ணிற அதிசய பறவை பறந்து சென்றது. மன்னன் அப்பறவையின் மீது ஆசை கொண்டு அம்பு எய்தான். ஆனால் தப்பிவிட்டது. சில நாட்கள் கழித்து மீண்டும் அதேபோல். புதர்தானே அதன் இருப்பிடம் அங்கு வந்ததும் பிடித்து விடலாம் என கருதி மறைந்து இருந்தான். அந்த இடம் முழுவதும் பால் மணம் வீசியது. பறவை வரவே இல்லை.
சந்தேகப்பட்ட மன்னன் புதரை தோண்ட, ஒரு புற்று மட்டும் இருந்தது. புற்றை தோண்டிய போது பால் பீறிட்டது. பயந்த மன்னர் அரண்மனைக்கு திரும்பி விட்டார். அன்றிரவு
அவரது கனவில் அசரீதியாக ஒலித்த சிவன், பால் வெளிப்பட்ட இடத்தில் தான் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார். அதன்பின் மன்னன் இவ்விடத்தில் கோவில் கட்டி வழிபட்டான். பால் பொங்க இடத்திலிருந்து வெளிப்பட்டதால் சுவாமி பாற்றுரைநாதர், தலம் பாற்றுறை (பால்துறை ).
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கொள்ளிடம் காவிரி ஆறுகளுக்கு மத்தியில் இக்கோவில் அமைந்திருக்கிறது. கோபுரம் 3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நந்தியும் பலிபீடமும் கோவிலுக்கு வெளியில் இருக்கிறது.கோபுர வாயிலின் தென்புறத்தில் விநாயகரும் கருப்பரும், வடபுறத்தில் பாலதண்டாயுதபாணியும் வீற்றிருக்கின்றனர்.கோபுர வாயிலைக் கடந்தவுடன் முன்மண்டபம் நம்மை வரவேற்கிறது. கருவறைக்கு பின்புறம் லிங்கோத்பவர் இடத்தில் சங்கரநாராயணன் இருக்கிறார். பிரகாரத்தில் சத்யபாமா ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதி சிறப்பு. பிரகாரத்தில் விநாயகர், முருகர், மகாலட்சுமி, துர்க்கை, பைரவர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் அமைந்துள்ளன.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மனவிருப்பங்கள் நிறைவேற
செல்வ வளம் பெருக
பாவங்கள் நீங்க
கல்வி மற்றும் குடும்ப ஒற்றுமை சிறக்க
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஹாசிவராத்திரி திருக்கார்த்திகை
திருவாதிரை
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மார்க்கண்டேயர் சூரியன் சோழ மன்னன் சம்பந்தர் சேக்கிழார்
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அல்லது சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கல்லணை செல்லும் நகரப் பேருந்துகளில் (பேருந்து எண்: 2, 26) ஏற வேண்டும். அவை திருவானைக்காவல் வழியாகச் செல்லும். நீங்கள் பனையபுரம் என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். இங்கிருந்து ஆட்டோ வசதிகள் குறைவு.
திருவானைக்காவிலிருந்து 10KM
7AM – 11AM, 4PM – 7PM
98431 72233
ஸ்ரீதர் சிவராஜரத்னம் குருக்கள்
குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
ஆரா ராதி முதல்வரே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply