சிதம்பரம் நடராஜர் திருமூலநாதர்
மூலவர் : திருமூலநாதர், மூலட்டானேஸ்வரர்,( சபாநாயகர் பொன்னம்பல கூத்தன் )
அம்பாள் : உமையாம்பிகை ( சிவகாமசுந்தரி )
ஸ்தல விருக்ஷம் : தில்லைமரம்
தீர்த்தம் : சிவகங்கை, பிரமானந்த கூபம், வியாக்ரபாத, அனந்த, நாகசேரி, சிவபிரிய, பிரம, புலிமேடு, குய்ய திருப்பாற்கடல் இன்னும் சில..
புராணப் பெயர் : தில்லை
ஊர் : சிதம்பரம்
பாடல் : நால்வரும் அப்பர் சுந்தரர் சம்பந்தர் மாணிக்கவாசகர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு & காவிரி வடகரை ஸ்தலம் 1
274 பாடல் பெற்ற சிவாலயங்களில் முதன்மையான சிவாலயம், சிவபெருமான் அற்புதமான ஒரு சன்னதியில் அருள்பாலிக்க கூடிய ஒரு இடம், நம்முடைய இந்த பிரபஞ்சத்தின் ஒரு காரண காரிய வித்தாக, தானே எல்லாமாக, எல்லாம் தானே ஆக இருந்து அருள்பாலிக்க கூடிய அற்புதமான ஒரு சிவக்ஷேத்ரமே பொன்னம்பலம், ஆதிகைலாசம் தில்லை எத்தனையோ திருநாமங்கள் கொண்ட சிதம்பரம். தரிசித்தால் முக்தி. பஞ்சபூதங்களில் ஆகாசம். இங்கே மூலவர் உற்சவர் இரண்டுமே மூலமூர்த்தியாக இருக்கக்கூடிய நடராஜ பெருமானே. சிவாலயத்தின் உள்ளே சிவாலயம்.
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிருதயுகத்தில் பிரம்மா, இந்த ஊரில் இருக்கும் அந்தணர்கள் யாவரையும் ஒரு யஞ்யம் செய்ய பிரம்மலோகத்திற்கு அழைக்கிறார். இங்க உள்ளவா. ” எங்க ஊர்ல இருக்கிற சுவாமியை விட உங்க ஊர்ல இருக்கிற சுவாமி பெரிசா என்ன, என்று கேட்டார்களாம்? “..
பிரம்மா
நீங்க எல்லோரும் வாங்கோ! வரச்சே இந்த யஞ்ய ஜோதில வரக்கூடியவர் வேற யாருமில்ல, நீங்கள் நித்யம் பூஜை பண்ணக்கூடிய நடராஜரே வருவார். ( பெரிய புராணத்தில் சொல்லப்பட்ட ) தில்லையில் வாழ்ந்த 3000 அந்தணர்களும் பிரம்மலோகம் போனா. யஞ்யம் செஞ்சா. அந்த யாக ஜோதில தோன்றின ஸ்வாமிதான் தினமும் காலை 11 மணிக்கு அபிஷேகத்திற்குரிய மூர்த்தியாக இருக்கும் மரகதலிங்கம். பிரம்மலோகத்திலிருந்து இங்கே அழச்சிண்டு வந்துட்டா.
பார்வதி பரமேஸ்வரா இருவரும் ரொம்ப லீலார்த்மா பேசிக்கிறா. கலைகள் அதில் பரதம் ரொம்ப ஸ்ரேஷ்டமானது. பரத முனிவருக்கே சிவபெருமானால் உபதேசம் பண்ணித் தரப்பட்டது தான் பரதம். அவா இரண்டு பேருமே யார் யாரால பரதம் சிறப்பு! யாரால் எதற்கு உயர்வு! அப்படின்னு(உலகுக்கு உணர்த்த)
அப்படி பிரம்மாண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளையும் தன்னுள் கொண்டு ஒரு நர்த்தனதை சுவாமியும் அம்பாளும் காண்பித்த இடம். ஒரு சமயம் அம்பாளோட நர்த்தனத்துக்கு ஈடாக சிவனால் ஆட முடியவில்லை, பார்த்து வியக்கிறார். ஒரு நொடி பொழுது, அம்பாளை இந்த இடத்தில் எதிர்க்கணும்கிறதுனால தன்னுடைய காலை தன் தலைக்கு மேலே தூக்குகிறார். அதற்கு சமமா அம்பாள் பேசாம இருக்கிறார்.
ஒரு நொடிப்பொழுது, க்ஷண காலம், சிவபெருமான் நடனத்தை பார்த்துட்டு, ஒரு உக்கிரமான நடனம் ஆட ஆரம்பிச்சா. அந்த உக்கிரமான நடனம் தான் காளி தேவி – “ஸ்த்ரீ பராசக்தி பராபரி உக்கிரமானால் இந்த உலகமே சிதறிவிடும். அவளுடைய உக்கிரத்தை அடக்குவதற்காக பரமேஸ்வரன் அந்த இடத்தில், “சவத்திற்கு நடுவே சிவம் சென்று சேர்ந்தது”. சிவம் சக்தியை தன்னுள் ஐக்கிய படுத்தியது. ஒரு நொடிபொழுதில் கால் வைக்கும் பொழுது,தன்னை மறந்தாள், நாக்கை வெளியே நீட்டினாள், அப்பேர்ப்பட்ட கோலமே “காளி கோலம்” “தில்லை காளி” என எல்லையில் ஆட்சி பரிபாலனம் செய்கிறாள்.
ஸ்வாமியின் நர்த்தனத்தை யார் யாரெல்லாம் அனுபவித்தார்கள். கணபதி சுப்ரமணியர் பிரம்மா மஹாவிஷ்ணு கந்தர்வர்கள் ரிஷிகள் அரம்பயர்கள் அனைவரும் அனுபவிச்சா! அந்த “SNAP SHOT”
அந்தக் கோலம் தான்
மூலமூர்த்தியா இருக்கக்கூடிய உலகத்தினுடைய பிரபஞ்சத்தினுடைய காரண காரியமாய், வித்தாக இருக்கக்கூடிய, “சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் திரோபாவம் அனுகிரஹம்” பஞ்ச கிருத்யத்தை பண்ணக்கூடிய எம்பெருமான் ஆடவல்லான் நடராஜ பெருமான்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நடராஜன் எனும் ஆனந்தகூத்தன். அந்தத் திருவாச்சி பிரணவாகாரம் ஓம்காரம் எனும் பெயர். அந்த பிரணவாகாரத்தின் மேல் உள்ள சுடர்கள் 54
54 எழுத்துக்களை குறிக்கும். உள்ளே இருக்கும் சுவாமி பிரணவம்- எல்லாம் நானே. மேலே இருக்கக்கூடிய உடுக்கை – உலகத்தினுடைய படைப்பு.
தமிழ் பெரிதா, தமிழ் மாதிரியே இருக்கக்கூடிய வடமொழி பெரிதா, அப்படின்னு கேட்டா, உடுக்கையில் ஒரு புறத்திலிருந்து வடமொழி, ஒரு புறத்திலிருந்து தென்மொழி அழியாத மொழி, அற்புத மொழி, அருள்தரும் ஆனந்த மொழி.
இகபர சுகம் தரக்கூடிய சௌபாக்யம் தரக்கூடிய தமிழ் மொழியை அகஸ்தியரிடம் தருகிறார்..
இறைவனோடு பேசுவதற்கு உண்டான ஒரு மொழி, பேச்சு வழக்கில் இல்லாத ஒரு மொழி, இறைவனை ஓசை ஒலியெலாம் சத்தத்தின் மூலமாக இறைவனை அடைவதற்கு உண்டான ஒரு வழியை, ஒரு மொழியை, சமஸ்கிருதத்தை, கிரந்த மொழியை, கிரந்த லிபியை, அக்ஷரத்தை, பாணினி என்ற மகரிஷிக்கு கொடுக்கிறார்.
எல்லாவற்றுக்கும் ராஜா. கொடுத்தவர் நடராஜன். கையிலே வைத்திருப்பது உடுக்கை. இவற்றில் இருந்த சத்தம், “மாகேஸ்வர சுக்தம்”. படைப்பின் ரகசியத்தை கொடுத்த இடம் சிதம்பரம். ஒரு பக்கத்தில் ஸ்வாமி எல்லாவற்றையும் படைக்கிறார்.
இன்னொரு பக்கம் தீச்சுடர் அக்னி- தானே சம்ஹாரம் பண்றா எல்லாத்தையும் தனக்குள்ளே கொண்டு வந்து அடக்கி விடுகிறார். அக்னியில் அனைத்தையும்- பிரபஞ்சம். பஞ்சபூதத்தினுடைய குணம் பஞ்சசபை இங்க அமைஞ்சிருக்கு
எம்பெருமான் இடது கரங்களில் வைத்துக் கொண்டிருக்கிற அக்னி – எல்லாவற்றையும் தன்னோடு, தன்னுள்ளே எல்லாவற்றையும் வெளிப்படுத்துகிறது.
பகவானுடைய அனுகிரகத்தை பெறுவதற்கு, வலது கையில் அருள் பெறுவதற்கு உண்டான, அபய ஹஸ்தத்திற்கு உண்டான முத்திரை, அருள்தரும் முத்திரை. இடது ஹஸ்தம், ஊரு ஹஸ்தம். திருவடியை பிடித்து விடு. இதுதான் இந்த நடராஜ பெருமாளுடைய தத்துவம். அதற்குக் கீழே முயலகனை மிதித்த நிலையில் ஸ்வாமி. ஆணவம் கன்மம் மாயை அற்ற நிலை இருந்தால் தான் அந்த திருவடியை பற்ற முடியும். அப்பேர்ப்பட்ட சிவக்ஷேத்ரம்.
அதனாலதான் ஸ்வாமி – இவ்வளவு பெரிய மூர்த்தி – உற்சவ காலங்களில் பெரிய கோபுரம் வழியாக வருவதில்லை. அருகில் உள்ள திட்டி வாசல் வழியாகத்தான் வருவார். அம்பாளுக்கு, தோத்தவளுக்கு ஒன்று விட்டு கொடுக்கணும் இல்லையா, அதனால தான். எல்லையை காக்கின்றாள் தில்லை காளி. எல்லையில் உள்ளே இருக்கின்றார் ஆனந்த தாண்டவ மூர்த்தி, ஆகாச க்ஷேத்ரத்தில்.. எல்லா கோவில்லயும் கர்ப்பகிரஹத்தில் மூலமூர்த்தி பிரதிஷ்டை ஆகி இருக்கும். இங்கு நடராஜமூர்த்தி ஊஞ்சலில் இருக்கிறார்.
தேவாரம் கிடைத்த தலம். மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது. திருநாரையூரைச் சேர்ந்த நம்பியாண்டார் நம்பி என்பவரும் திருமுறை கண்ட சோழ மன்னனும் ( ராஜராஜ சோழன் ) திருநாரையூர் தலத்தில் உள்ள பொள்ளாப் பிள்ளையாரை வணங்கி, அப்பெருமானுடைய திருவருளால், சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் அருகே திருக்கர முத்திரைகளோடு தேவார ஏடுகள் உள்ளன என அறிந்தனர்.
கோவிலில் முதலில் தீக்ஷிதர்கள் மறுக்க, மூவருக்கும் விழா எடுத்து, அனுமதி பெற்று, குறிப்பிட்ட இடத்தில் கரையான் புற்றுகள் மூடிக்கிடந்த ஏடுகள் கிடைத்தன. பின் எண்ணெய் விட்டு, எடுத்து, பல பகுதிகள் கரையானுக்கு இரையாகி, மீதத்தை பத்திரப்படுத்தினர். இத்தகைய அரிய தேவார பதிகங்கள் கிடைத்த இடம்.
திருநாளை போவார் என்ற நந்தனாருக்கு நந்தி வழிவிட்டு திருப்புன்கூரில் தரிசனம் தந்த சிவன், இங்கு தீக்ஷிதர்கள் கனவில் வந்து இவரை பூர்ண கும்ப மரியாதையுடன் அழைக்கும் படி உத்தரவிட, இங்கு நந்தனார் சிவனுடன் ஐக்கியமான தலம்.
இந்த ஊரின் தேரோடும் வீதிகளில் அப்பர், அங்க பிரதக்ஷிணமே செய்துள்ளார். இலங்கை மன்னனின் ஊமை மகளை, மாணிக்கவாசகர் நடராஜர் அருளால் பேச செய்த தலம் இது. இத்தலத்து முருகனை அருணகிரிநாதர் 10 திருப்புகழ் பாடல்கள்.
நால்வரும் வந்த வழி :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சம்பந்தர் இறைவனை அடைய சத்புத்ர மார்க்கத்தில்- தென் வாயில் வழியாக நேரே வந்து கண்டு களித்தார்.
நாவுக்கரசர் தாச மார்கத்தில் வலது புறமாக (கிழக்கு) வந்து ஏவல் கேட்கும் நோக்கத்துடன் இறைவனைக் கண்டார்.
சுந்தரர்- நட்பு முறை – பின்புறமாக (வடக்கு) வந்து வேண்டியதை உரிமையுடன் பெற்றார். மாணிக்கவாசகர்- சன்மார்க்க முறை- (குரு சிஷ்ய உறவு) ஆதலால் அருட்சக்தி மேற்கு பக்கம் வந்து இறைவனை கண்டார்.
மூலவரே வீதி வலம் வருவது இங்கு மட்டுமே. இங்கு மட்டுமே சிலையின் முன்னும் பின்னும் தீபாராதனை. 11 மணிக்கு நடைபெறும் ஸ்படிக லிங்க – ரத்ன சபாபதி பூஜையின் போதும் முன்னும் பின்னும் தீபாராதனை.
உடலின் அமைப்பில் நடராஜமூர்த்தி ( உருவமாக), ஆகாயம் என்ற அருவமாக, ஸ்படிகலிங்கம் என்ற அருவுருவமாகவும் அருள் பாலிக்கிறார். இங்கு அர்த்தஜாம பூஜையில் உலகில் உள்ள அனைத்து தெய்வங்களும் கலந்து கொள்வதாக ஐதீகம்.
சைவத்தில் கோவில் என்றால் அது சிதம்பரத்தை குறிக்கும். 276 பாடல் பெற்ற சிவாலயங்களில், இது 1வது தேவார பாடல் பெற்ற சிவாலயம் ஆகும். இத்தலம் தில்லை எனும் மரங்கள் அடர்ந்த காடாக( இப்பொழுது இல்லை ), இப்போ பிச்சாவரம் அருகே உப்பங்கழியின் கரைகளில் மிகுதியாக உள்ளன.
நடராஜர் இங்கு வருவதற்கு முன்னாலேயே இங்கு இருக்கும் “திருமூலட்டநாதர்” – ஆதி மூலவர் ரொம்ப அழகான சன்னிதி. கோவிலின் மேற்கு பிரகாரத்தின் மேல்பால் உள்ளது சன்னதி.அங்க உள்ளேயே சிற்றாலயத்தில் தனியா அம்பாள். பிரதக்ஷினமா பூர்த்தி பன்னிண்டு வர இடத்தில், இங்க மட்டும் தான் அர்த்த ஜாம அழகர். பிள்ளையார் மட்டுமே 16 இருக்கா.பொள்ளா பிள்ளையார், முக்குருணி விநாயகர், திருமுறை காட்டிய விநாயகர், செந்தூர விநாயகர், கற்பக விநாயகர் etc. அனைத்தும் அனுபவிக்க வேண்டிய மூர்த்திகள்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் எட்டு திசைகளிலும் சாஸ்தாவின் 8 அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இறைவன் இங்கு உருவமாகவும் அருவமாகவும் அருவுருவமாகவும் அருள் பாலிக்கிறார்.
சிதம்பர ரகசியம் : சித் + அம்பரம் சித்=அறிவு,அம்பரம்=வெட்டவெளி
மனிதா! உன்னிடம் ஒன்றுமே இல்லை என்பதுதான் அந்த ரகசியத்தின் பொருள் !!!
நமக்குத்தான் இன்னும் புரியவில்லை!
அனைத்தும் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி!!
பதஞ்சலியும் வியாக்ரபாதரும் துவாரபாலர்களாக இருக்கக்கூடிய புண்ணிய பிரதேசம்.
பதஞ்சலிக்கு பிரத்யக்ஷமானார் ஸ்வாமி – எப்படி?
நாம நிறைய தபஸ் பண்ணினா தான் பதஞ்சலியோட தரிசனமே கிடைக்கும். அஷ்டாங்க யோகத்திற்கு குரு அவர்தான். பிரதானமா வியாகரணம் நாம தெரிந்து கொள்வதற்கும் அறிந்து கொள்வதற்கும் குரு அவர்தான். சில ரகசியமான சூத்திரங்களும் பண்ணியிருக்கிறார்.
ஸ்தலபுராணம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°
நித்யம் சிவபூஜை செய்கிறாராம் திருமால்.!! (அப்ப நாம சிவபூஜை பண்ணாமல் இருந்து விட்டோம் என்றால்.. )
ஒரு நாள் சிவபூஜையை ஆத்மார்த்தமாக செய்பவர், அந்த சிவலிங்கத்தை கையில் எடுத்து வெளியில் பார்க்கிறார்.
ஒரு பொருள் கையில் இருக்கும் பொழுது கனமாக இருக்கும். உள்ளே வைத்து விட்டால் கனமில்லாமல் போய்விடும்.
திருமால் அந்த மூர்த்தியை எடுத்துப் பார்க்கிறார். ஆதிசேஷனால் தாங்க முடியவில்லை. ஆதிசேஷனுக்கு 1000 தலை. கேட்கிறார்
தினமும் நான் தான் உங்களை தாங்குகிறேன், இப்போ தாங்க முடியவில்லையே.. என்னுடைய மூலமூர்த்தியை எடுத்து பார்த்தேன் என்றார். நான் பார்க்க முடியாதா? தபஸ் பண்ணனும்!
எப்ப நான் பண்றது? அனுகிரஹம் பண்ணுங்கோ என்றார்!
மஹாவிஷ்ணு ஆதிசேஷன் பூமியில் பிறக்க அனுக்கிரஹம் செய்கிறார். அந்த சமயத்தில் “அத்ரி” மகரிஷி சத்புத்ரன் வேண்டி தீர்த்தக்கரையில் தபஸ். அப்பொழுது அவர் தீர்த்தத்தை எடுத்து சூரியபகவானுக்கு சமர்ப்பணம் பண்ண கைய எடுக்கிறார், அஞ்சலி ஹஸ்தத்தோட இருக்கார், அப்போ ஒரு சிறிய குட்டி பாம்பு விழ, அதை கீழே விட, ஒரு யுவாவா மாறி கைகூப்பி நின்றாராம். ‘பத’ என்றால் கீழே விழுவது, அஞ்சலி ஹஸ்தத்திலே தோன்றியதால்
பதஞ்சலி என்ற நாமதேயத்தை சூட்டி, தனது கரத்தால் ஸ்பர்ஷதீக்ஷய் அனுக்கிரகம் பண்ணி, 16000 ஆண்டுகள் இங்கேயே தபஸ் செய் என்று சொல்லிவிட்டு செல்கிறார். சிவதரிசனம் வேண்டுமல்லவா.
அதே சமயத்தில் முனிவர்களில் சிறந்தவரான வசிஷ்ட முனிவரின் உறவினரான மத்யந்தினர் மகன் மாத்யந்தினர். அவனுக்கு ஆத்ம ஞானம் கிடைக்க வேண்டி தில்லை வனக்காட்டில் உள்ள சுயம்புலிங்கத்தை வணங்க வசிஷ்டர் அனுப்புகிறார். So காசியிலிருந்து சிதம்பரம் வந்தடைகிறார். இங்குள்ள லிங்கத்தை பூஜை செய்கிறார். பூஜைக்குத் தேவையான மலர்களை பொழுது விடிந்த பிறகு பறித்தால், தன் பூஜை தவம் முதலியவற்றுக்கு நேரமாகி விடுகிற படியாலும், மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுப்பதால் மலர்கள் பூஜைக்கு ஏற்றவை அல்ல என்பதாலும், மனம்வருந்தி ஸ்வாமியிடம் தினமும் முறையிட்டார்.
ஸ்வாமியும் மரங்களில் ஏறுவதற்கு வசதியாக, வழுக்காமல் இருக்கக்கூடிய புலியின் கை கால்களும், இருளிலும் நன்றாக தெரியும் படியான கண் பார்வையும் அருளினோம். மேலும் புலிக்கால் புலிக்கை பெற்றதால் உம் பெயரும் வியாக்ரபாதர் என்றும் அருளினார். வியாக்ரபாதரும் மன நிறைவுடன் தனது பூஜையை தொடர்ந்தார்.
அப்பேர்ப்பட்ட பதஞ்சலிக்கும் வியாக்ரபாதருக்கும் ஸ்வாமி தனுர் மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் தன் வடிவத்தை காண்பிக்கிறார். வடிவம் பூமிக்கும் ஆகாசத்திற்கும் தாண்டியதாய் இருக்கிறது. அந்தப் பிரம்மாண்டத்தை பார்க்க கண் பத்தல. நாங்க பிரயத்ன பட்டு பார்த்த இந்த தரிசனம், எல்லோருக்கும் இலகுவா அனுக்கிரகம் பண்ணனும் என்று பிரார்த்தனை செய்தா.
அப்படி அன்னைக்கு அவாளுக்கு கொடுத்த அந்த தரிசனம், வருஷா வருஷம் தனுர் மாசம் ஆதிரை நட்சத்திரத்தில் “ஆருத்ரா தரிசனமாக” பக்தர்களுக்கு அனுகிரஹம் செய்கிறார் நடராஜ பெருமான்.
பதஞ்சலி தன்னுடைய சீடர்களுக்கு கூட ரகசியமாகத்தான் உபதேசம் செய்கிறார். ராமேஸ்வரத்தில் நடராஜர் பின்புறம் ஒரு கரம் மட்டும் உள்ளது. இதற்கு தினமும் பூஜை நடக்கும். பதஞ்சலி முக்தி அடைந்த தலம் என்பதால் நம் கண்களுக்கு தெரிய மாட்டார்.
10 இடங்கள் பதஞ்சலி முக்தி ஸ்தலம் என்கிறார்கள்.
இன்னொரு ஆச்சரியமான ஒற்றுமை, திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பதஞ்சலி முனிவரின் சமாதியும் வெகு அருகில் 0.5KM காசி விஸ்வநாதர் கோவிலில் வியாகரபாதர் சமாதியும் உள்ளது
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
40 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. மனித உடலின் ஐந்து அடுக்குகளைக் குறிக்கும் வகையில் 5 பிரகாரங்கள் உள்ளன
இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் காந்த புலத்தின் மைய மையத்தில், பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதியில் என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World’s Magnetic Equator ).
நடராஜர் மேலே இருக்கக்கூடிய அந்த பொன்னம்பலம், பராந்தக சோழன் அனுபவித்து அனுபவித்து அழகாக நமக்கு கட்டி தரப்பட்டது. மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
தங்கம் வேய்ந்த இந்த ஆலயத்தில், உள்ளே இருக்கக்கூடிய 28 தூண்கள்
28 ஆகமம். 64 ஓடுகள்-ஆயகலைகள் 64. 21600 முறை, ஒரு நாள் நாம் சுவாசம் விடும் எண்ணிக்கை
அங்கே பதிக்கப்பட்டிருக்கக்கூடிய ஆணிகள். 72000 இணைப்புகள் இருக்கின்றது
நம் உடம்பில் இருக்கக்கூடிய அங்கங்களின் இணைப்பு.
ஐந்து பிரகாரங்கள்
அன்னமய கோஷம்
பிராணமய கோஷம்
மனோமய கோஷம் விஞ்ஞானமய கோஷம் ஆனந்தமய கோஷம்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே – இவ்வாலயம்
பிரபஞ்சத்தினுடைய வித்து
அச்சுப்புள்ளி இந்த இடத்தில் தான் இருக்கிறது. இதில் தான் பிரம்மாண்டம் சுழன்று கொண்டிருக்கிறது. மேலே போகணும்னா புவன சுவன மஹர ஜனக தபோ சத்ய லோகங்கள்.. கீழே அதள விதள சுதள ரசாதள தலாதள மஹாதள பாதாள லோகங்கள் என விரிந்து கொண்டே போகிறது.
இப்படியே TRAVEL பண்ணிண்டு போனா 7கடல் இருக்கு. லவன(உப்பு) க்ஷீர(பால்)
கிருத(நெய்) ததி(தயிர்) சுரா(மது) இக்ஷு(கரும்புச்சாறு), ஜல(தண்ணீர்) சாகரங்கள். இந்த க்ஷீர சாகரத்தில் மஹாவிஷ்ணு படுத்துக்கொண்டு இருக்கிறார். ஸ்வாமியை பார்கிறார். நாம ஒரு இடத்தில் நின்னா திருப்பாற்கடலையும் பார்க்கலாம் கைலாயத்தையும் பார்க்கலாம்.
பிரம்மாவே எல்லாவற்றுக்கும் காரண காரியமாக இருக்கக்கூடிய காரணத்தினால் இங்கு பிரம்மாவே சண்டிகேஸ்வரராக இருக்கிறார். பிரம்ம சண்டிகேஸ்வரர் இருக்கக்கூடிய அற்புதமான சன்னதி. காலை பொழுது விடிந்தது முதல் சாயந்திரம் வரை நடராஜர் ஊஞ்சலில் தான் இருக்கிறார்.
கீழே 5 படி. பஞ்சாட்சர படி, “ஓம் நமசிவாய”. அதற்கு வெளியில் இருக்கக்கூடிய மண்டபம் 16 வித்துக்களை தெரிவிக்கக் கூடிய தூண்கள் அமைந்திருக்கு. ரொம்ப அழகான விசேஷமான அந்த சந்நிதியில் ஏறி நிற்கின்ற பொழுது ஆத்மாவை அனுபவிப்பதற்கு உண்டான இடம். அதற்கு பக்கத்தில் இருக்க க்கூடிய இடமே துவாரத்தின் மூலமாக பார்க்கக்கூடிய “சிதம்பர ரகசியம்.” தங்கத்தினாலே வேயப்பட்ட பஞ்சாட்சர எழுத்துக்களினால் இருக்கக்கூடிய வில்வமாலை சாற்றப்பட்டு இருக்கிறது. அதற்கு உள்ளுக்குள்ள திரை இருக்கு. அங்குதான் பிரபஞ்சத்தின் காரிய வித்தான, மூல மூர்த்தியான, திருமூலநாதனுடைய வித்தாக இருக்கக்கூடிய மைய அச்சு இருக்கிறது.
ஸ்வாமி நடராஜர் தனிக்கோவில்.
அம்பாள் சிவகாமசுந்தரி தனியாக எழுந்தருளியிருக்கிறார் அம்பாள் சன்னதி உள்ளே நுழைந்ததும் வலது பக்கம் பார்த்தேள்னா ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்கரம். பிரகாரங்களில் கவனிச்சோம்னா 108 தாண்டவங்களின் அமைப்பு அழகாக அனுபவிக்கலாம்.
4 ராஜகோபுரம், நால்வராலும் இறைவனை தேடி உள்ளே வந்து வழங்கப்பட்டது. தமிழுக்கு வித்தான பூமி. பன்னிரு திருமுறைகள் தோன்றுவதற்கு உண்டான பூமி. திருவாசகம் வித்திட்ட பூமி. திருமறை கண்ட பூமி.
சிதம்பரம்
பதஞ்சலி யோக சூத்திரம் அருளி செய்யப்பட்ட இடம். ஆதிசங்கருக்கு அனுக்கிரகம் பண்ணியது, கோவிந்த பகவத் பாதர், கௌடபாதர்க்கு தொடர்புடையது. பல அற்புதங்கள் நிகழ்ந்த இடம். சிவகங்கை தீர்த்தம், பரமானந்த கூபம், நாக தீர்த்தம், சேஷ தீர்த்தம், புலிக்கால் தீர்த்தம் என பற்பல தீர்த்தங்கள். அம்பாள் சன்னதி அருகில் நவகிரகங்கள் லிங்க ரூபமாக இருக்கு. அதுமட்டுமல்ல
ஒரே இடத்தில் நின்னா, நேரே ஸ்வாமி பார்க்கலாம், இடது பக்கம் திவ்யதேச கோவிந்தராஜ பெருமாள், நாபியில் பிரம்மா என மும்மூர்த்திகள் தரிசனம் ஒரே இடத்தில் மிகச் சிறப்பு.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முக்தி பேறு, துன்பங்கள் நீங்க
வளம் பெற, குழந்தை வரம்,
பிணி நீங்க, மன அமைதி பெற
கலைகளில் தேர்ச்சி பெற பிரார்த்தனை
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம் 10 நாள், ஆனித் திருமஞ்சனம் 10 நாள், நாட்டியாஞ்சலி திருவிழா 5 நாள்,
மஹாசிவராத்திரி பங்குனிஉத்திரம் நவராத்திரி…
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்,திருமாளிகைத்தேவர், பரணதேவ நாயனார், கபிலதேவ நாயனார், கருவூர்த்தேவர், சேரமான் பெருமாள் நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், பூந்துருத்திநம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர், சேந்தனார் , பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர், திருநீலகண்டர், திருமூலர், திருநாளைப்போவார், கணம்புல்ல நாயனார் முதலியோர்.
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கடலூர் சீர்காழி நடுவே உள்ளது.
எல்லா இடங்களிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.
6AM – 12 NOON, 5PM – 10PM,
93607 36063 T. கார்த்திகேய தீக்ஷிதர்
93455 11118 SS சேதுராம தீக்ஷிதர்
97865 96855 தன்வந்திரி தீக்ஷிதர்
98426 94431 தியாகப்பன்தீக்ஷிதர்
93442 17094 T.பத்ரீசன் தீக்ஷிதர்
84381 08019 ஸ்ரீவத்ஸன் தீக்ஷிதர்
கோயில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே. 1
ஞானசம்பந்தர்
சிதம்பரம் பற்றி சொல்லனும்னா சொல்லிக் கொண்டே இருக்கலாம். தரிசிப்போம் இன்புறுவோம் அருள் பெறுவோம்.
ஆனந்தம் அடைவோம்.


Leave a Reply