கும்பகோணம் நாகேஸ்வரர்
மூலவர் : நாகேஸ்வரர் , வில்வனேசர், பாதாள பீஜ நாதர்
அம்பாள் : பெரியநாயகி, பிரஹன்நாயகி
ஸ்தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : மகாமக குளம்
புராண பெயர் : குடந்தை கீழ் கோட்டம், வில்வ வனம்,
பாடல் : அப்பர்
சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம் சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 27
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இக்கோயில் மகாமகம் தீர்த்தவாரியில் பங்குபெறும் 12 ஆலயங்களில் ஒன்றாகும்.
சூரியன் இத்தலத்தில் சித்திரை 11, 12, 13 தேதிகளில் வழிபடுகிறான். அப்போது லிங்கத்தின்மீது ஒளி படும்.
1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கோயில் இது. 1923ம் ஆண்டில் இந்த கோயில் புதர் மண்டிக்கிடந்தது. பாடகச்சேரியை சேர்ந்த ராமலிங்க சுவாமி என்பவர் தனது கழுத்தில் பித்தளை செம்பு ஒன்றை கட்டிக்கொண்டு பிச்சை எடுத்து, சிறுகச்சிறுக பொருள் சேர்த்து திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்துவைத்தார்.
ஜுரஹர விநாயகர்: இக்கோயிலில் சூரியபகவான் சந்நதிக்கு தென்புறத்தில் ஜுரஹர விநாயகர் சன்னதி உள்ளது. இவருக்கு சாதம், மிளகுரசம், பருப்பு துவையல் நிவேதனம் செய்து வழிபட்டால் ஆஸ்துமா, தீராத இருமல், காய்ச்சல் முதலியவை அகன்றுவிடும் என்பது நம்பிக்கை. இதயநோய் உள்ளவர்களுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தேரின் மீதிருக்கும் நடராஜர்
இந்த நடராஜ மண்டபம் தேர் வடிவத்தில் உள்ளது. இரு புறத்திலும் உள்ள கல் தேர் சக்கரம் மிக அருமையாக இருக்கும். இந்த சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம்பெற்றுள்ளன. இரண்டு குதிரைகளும், நான்கு யானைகளும் இழுக்கும் நிலையில் இந்த மண்டபம் மிக அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆனந்த தாண்டவ நடராஜ சபை என பெயர். நடராஜரின் நடனத்திற்கு ஏற்ப தாளம் போடும் பாவனையில் சிவகாமி அம்மையும், வேறு எங்கும் இல்லாதவிசேஷமாக நடராஜரின் அருகில் மகாவிஷ்ணு குழலூதும் காட்சியும் கண்டு ரசிக்கத்தக்கது.
கங்கை விநாயகர்
சோழ மன்னன் ராஜேந்திரனின் கங்கைப் படையெடுப்பின் போது, வெற்றி பெற்ற படை ஒரு அழகான விநாயகர் சிலையை சோழப் பேரரசுக்கு ஒரு போர்க் கோப்பையாகக் கொண்டு வந்ததாக நம்பப்படுகிறது. இந்த விநாயகர் சிலை இக்கோயிலில் வைக்கப்பட்டு, “ஸ்ரீ கங்கை விநாயகர்” எனப் பொருத்தமாகப் பெயரிடப்பட்டது. இந்த விநாயகரைக் கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் காணலாம்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒரு காலத்தில் பூமியை நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் தாங்கிக்கொண்டிருந்தான். மக்கள் செய்த பாவங்களால் அவனால் பூமியை சுமக்க இயலவில்லை. உடல் சோர்வு ஏற்பட்டது. எனவே திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை வேண்டினான். உலகை தாங்குவதற்கு உரிய சக்தியை தரும்படி அவரிடம் கேட்டுக்கொண்டான். ஆதிசேஷனின் முறையீட்டுக்கு மனம் இரங்கிய சிவபெருமான், எவ்வளவு காலமானாலும் ஒரே ஒரு தலையினால் இந்த உலகை தாங்கும் சக்தியை தருவதாக உறுதியளித்தார். பரிபூரண சக்தி பெற்ற ஆதிசேஷன் பிரளய காலத்தில் அமுத கும்பத்திலிருந்து வில்வம் விழுந்த இடமான கும்பகோணத்தின் ஒரு பகுதிக்கு வந்தான். அங்கு லிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தான். நாகராஜன் பூஜித்ததால் இறைவனுக்கு நாகேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு காலத்தில் வெள்ளத்தில் மிதந்துவந்த அமுத கும்பத்தின் உச்சியிலிருந்த வில்வம் தவறி விழுந்தது. அந்த இடம் வில்வவனம் என போற்றப்பட்டது. அவ்விடத்தில் இக்கோயில் அமைந்ததால் சுவாமிக்கு வில்வனேசர் , பாதாள பீஜநாதர் ஆகிய பெயர்களும் வழங்கப்படுகின்றன. மடந்தை பாகர், செல்வபிரான் என்றும் சுவாமிக்கு பெயர்கள் உண்டு. அம்பாள் பெரியநாயகி இறைவனுடன் இருந்து அருள்பாலிக்கிறாள்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
9ம் நூற்றாண்டில் ஆதித்த சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம், சோழர் காலத்து சிற்பக்கலையின் உச்சத்தை பறைசாற்றுகிறது.
கிழக்கு நோக்கிய இத்தலத்தில் ராஜகோபுரம் ஐந்து நிலை, 2 பிரகாரம் உள்ளது. உள்ளே சென்றதும் இடப்பக்கம் நந்தவனமும், சிங்கமுக தீர்த்த கிணறும் இருக்கிறது. வலப்பக்கம் பிருகன்நாயகி சன்னதியும், நடராஜ சபையும் உள்ளன.
நாகேஸ்வரர் லிங்க வடிவில் உயரமான ஆவுடையாருடன் காட்சி தருகிறார். ஆனால் பாணம் சிறிதாக இருக்கிறது.
அம்பாள் பெரியநாயகி தெற்கு நோக்கிய சன்னதியில் அபயகரத்துடன் காட்சி தருகிறாள். இக்கோயிலின் சிறப்பம்சமே பிரளயகால ருத்திரர் சன்னதிதான்.
காவல் தெய்வமான படைவெட்டி மாரியம்மன், வலஞ்சுழி விநாயகர், அய்யனார், சப்த மாதாக்கள், சுப்ரமணியர், சப்த லிங்கங்கள், வைத்தீஸ்வரர், சோமாஸ்கந்தர், சண்டேஸ்வரர், சிவசிவ ஒலி மண்டபம், நவக்கிரக சந்நதி, தண்டூன்றிய விநாயகர், தெட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா ஆகிய ஒட்டுமொத்த தெய்வங்களை இத்தலத்தில் தரிசிக்கலாம்.மேலும் விஷ்ணு துர்க்கை, சூரியன் ஆகியோருக்கும் தனி சன்னதிகள் உள்ளன.
இக்கோயிலுக்குள் மகாகாளி சன்னதியும், எதிரே ருத்ர தாண்டவமாடும் அக்னிவீரபத்திரர் சன்னதியும் உள்ளன. இருவரும் போட்டி நடனம் ஆடுவதுபோல அமைக்கப்பட்டுள்ளது மிக மிக சிறப்பாகும். இந்த சன்னதிகளின் அருகே செல்லவே பக்தர்கள் பயப்படுகிறார்கள். அந்த அளவுக்கு இரு சிலைகளும் உக்கிரமாக உள்ளது.
தீர்த்தக் கிணற்றில் படிகள் இறங்கிச் செல்ல வேண்டும்; இறங்கு வாயிலில் கல்லில் இரு சிங்கங்கள் சுதையில் உள்ளன.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இது ஒரு ராகு தோஷ நிவர்த்தி தலமாகும்.
சகலநோய்களும் நீங்கும்.
மரண துன்பம் பயம் நீங்கும்.
பிணிகள் தீர்க்கும் ஜுரஹர விநாயகர் பிரார்த்தனை.
சூரிய பகவான் ஆரோக்கிய பிரார்த்தனை.
குடும்ப ஒற்றுமைக்கு பிரார்த்தனை
கலைகளில் தேர்ச்சி பெற நடராஜர் வழிபாடு
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மகாமகத்தன்று சுவாமி இங்கிருந்து மகாமக குளத்திற்கு தீர்த்தவாரிக்கு செல்வது மிகப்பெரிய விசேஷம். இதுதவிர நவராத்திரி, திருவாதிரை, மஹாசிவராத்திரி, பங்குனி பெருவிழா பிரம்மோற்சவம் ஆகியவை விசேஷம்.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன், சூரியன், நளன்,
அப்பர், சம்பந்தர், சேக்கிழார் முதலியோர்
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இந்த கோவில் சுமார் 1.5KM மட்டுமே உள்ளது. நகரபேருந்து உச்சிப் பிள்ளையார் கோவில் நிறுத்தம்.
6.30AM – 12NOON, 5PM – 9PM
94862 60933 செந்தில்குமார் குருக்கள்
94435 83104 சந்திரசேகர் குருக்கள்
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்
சொற்பொருளுங் கடந்தசுடர்ச் சோதி போலுங்
கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
மன்மலிந்த மணிவரைத்திண் டோ ளர் போலும்
மலையரையன் மடப்பாவை மணாளர் போலுங்
கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. 1 திருநாவுக்கரசர்


Leave a Reply