கானாட்டம்புலியூர் கானாட்டுமுள்ளூர் பதஞ்சலீஸ்வரர்
மூலவர் : பதஞ்சலீஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்பாள் : கோல்வளைக்கை அம்பிகை
ஸ்தல விருக்ஷம் : எருக்கு
தீர்த்தம் : சூரிய புஷ்கரணி
பாடல் : சுந்தரர், சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு வடகரை ஸ்தலம் 32.
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இத்தலத்தில் அம்பாள் கோல்வளைக்கையம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். இவளை “அம்புஜாட்சி’, “கானார்குழலி’ என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர். சுந்தரர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியுள்ளார். இவளது சன்னதிக்கு வலப்புறத்தில் சனீஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். சனிதோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனைகள் செய்து கொள்கின்றனர்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள இக்கோயிலுக்கு “மதூகவனம்’ என்றும் பெயருண்டு. கருவறையில் சிவன் சிறிய லிங்கமாக இருக்கிறார்.
தமிழ் வருடப்பிறப்பின் போது 3 நாட்கள் சூரியன் தன் ஒளியை சூரியன் மீது பரப்பி பூஜிக்கிறார். தண்டகாரண்ய முனிவர்கள் இங்கு சிவனை வழிபட வந்தபோது, மணல்கள் எல்லாம் லிங்கங்களாக அவர்களுக்கு தெரிந்ததால், வெளியில் இருந்தே சிவனை தரிசித்துவிட்டு சென்றார்களாம். எனவே, இத்தலத்து மண்ணை மிகவும் விசேஷமானதாக கருதுகிறார்கள். மண்ணை எடுத்துச்சென்றால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும், பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள நடராஜர், தனது இடது காலை முன்புறமாக தள்ளி தூக்கி நிறுத்தி, உடலை பின்புறமாக சாய்த்தபடி இருக்கிறார். பதஞ்சலிக்காக சிவன், மகிழ்ந்து நடனமாடியதால்இவ்வாறு காட்சியளிப்பதாக சொல்கிறார்கள்.
பதஞ்சலி, நடராஜர் சன்னதிக்கு எதிரே நால்வருடன் சேர்ந்து இருக்கிறார். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு சுவாமி மற்றும் பதஞ்சலியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால், தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.
இத்தலத்திற்கு அருகிலேயே வியாக்ரபாதர் வழிபட்ட ஓமாம்புலியூர் தலம் இருக்கிறது. ஒரே வரிசையில் சிதம்பரம், கானாட்டம்புலியூர், ஓமாம்புலியூர் ஆகிய மூன்று தலங்கள் அமைந்திருப்பது சிறப்பு.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பாற்கடலில் பள்ளிகொண்டி ருக்கும் மகாவிஷ்ணுவை தாங்கும் ஆதிசேஷன், சிவனின் நடன தரிசனம் காணவிரும்பி பதஞ்சலி முனிவராக அவதாரம் செய்தார்.சிவன், அவருக்கு சிதம்பரத்தில் தன் நடனக்காட்சி காட்டியருளினார். ஒருசமயம் பதஞ்சலி நடராஜரை தரிசித்தபோது, அவரை இத்தலத்திற்கு வரும்படி கூறவே, இத்தலத்திற்கு வந்தார் பதஞ்சலி. சிவனை வேண்டி தவம் செய்தார். அவருக்கு சிவன் தன் நடனத்தை காட்டி அருள் செய்தார். அப்போது சிவன் பதஞ்சலியிடம், “”என் தாண்டவங்களை கண்டு மகிழ்ந்தீரா? இப்போது திருப்திதானே!” என்றார்.
“தங்கள் நடனம் என்றும் எனக்கு சலிக்காதது. அந்நடனத்தை நான் என்றும் தரிசித்துக் கொண்டிருக்க வேண்டும்,” என்று வேண்டிக்கொண்டார் பதஞ்சலி. சிவன், அவர் விரும்பியபடியே பல தலங்களில் தான் தரிசனம் தருவதாக கூறினார். மேலும் அவருக்கு மரியாதை செய்யும்விதமாக அவரது பெயரையே தனக்கும் சூட்டி, “பதஞ்சலீஸ்வரர்’ என்ற பெயர் பெற்றார்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கோயில் 3 நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
கோஷ்டத்தின் பின்புறம் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் இருக்கிறார். இவருக்கு நேரே இருக்கும் முருகனும் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். தன் மாமாவிற்கு மரியாதை செய்யும்விதமாக முருகன் நின்ற கோலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.
இதில் வள்ளி காதில் மூதாட்டிகள் அணியும் பாம்படம் (தண்டட்டி) அணிந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இங்குள்ள தெட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை. பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர், கஜலட்சுமிக்கு சன்னதிகள் உள்ளது.
முன்மண்டபத்தில் இரண்டு நாகங்களுக்கு நடுவே கிருஷ்ணனும், அருகே நாகங்களுக்கு நடுவே லிங்கமும் இருக்கிறது.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
புத்திர பாக்கியம்
நவக்கிரக தோஷ நிவர்த்தி
ராகு கேது தோஷம்
சனி தோஷம்
திருமணம், சுகப்பிரசவம், வேலை & மன அமைதி
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மாசி மஹாசிவராத்திரி
ஐப்பசி அன்னாபிஷேகம்
திருக்கார்த்திகை
மார்கழி திருவாதிரை மற்றும் பிரதோஷம் சிறப்பு.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பதஞ்சலி சுந்தரர் சேக்கிழார் முதலியோர்
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஓமாம்புலியூர் அருகில் 4KM
சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் வழியாக ஓமாம்புலியூர் செல்லும் பேருந்தில் முட்டம் இறங்கி 1KM
9.30AM – 11AM, 6PM – 8PM
94862 20284 சந்திரசேகர சிவாச்சாரியார்
குருக்களை அழைத்துவிட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை
மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப்
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கியுமிழ்ந் தானைப்
பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை
முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று
மொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ்
கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 1
சுந்தரர்


Leave a Reply