திருப்புன்கூர் சிவலோகநாதர்
மூலவர் : சிவலோகநாதர் அம்பாள் : சௌந்தரநாயகி சொர்க்கநாயகி
ஸ்தல விருக்ஷம் : புங்கமரம்
தீர்த்தம் : ரிஷப தேவேந்திர நந்தனார் தீர்த்தம்
ஆகமம் : காரண ஆகமம்.
பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழநாட்டு & காவிரி வடகரை ஸ்தலம் 20.
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
புங்கமரம் நிறைந்த காட்டுப்பகுதியில் இருந்ததால் இக்கோவிலுக்கு புங்கூர் என பெயர் வந்தது.
புங்கமர காட்டுப் பகுதியில் இறைவன் புற்று வடிவமாக உள்ளார். இத்தலத்தில் முதலில் தோன்றியது புற்று வடிவமான லிங்கமே. பின் வந்தது நந்தி. இவை இரண்டும் தான் இவ்வாலயத்திற்கு பெருமையும் புகழும் சேர்த்தன.
புற்று வடிவமாக மூலவர் இருப்பதால் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில், 8.30 மணிக்கு குவளை எடுத்துவிட்டு புணுகு சட்டம் சாத்தி வழிபடுகிறார்கள். சுவாமியை குவளை சாத்தியுள்ள நிலையில் தான் தினசரி பக்தர்களால் காண முடியும். நம்முடைய பூர்வ கர்மா நசிந்து, சுவாமியின் அனுக்கிரகம் இருந்தால் தான் திருப்புங்கூர் க்ஷேத்ரம் வந்து அடைய முடியுமாம்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இன்னும் உயர்வு நந்தனாரின் சரித்திரம். அருகில் உள்ள கிராமம் ஆதனூர். நந்தனார் சதுர்த்த வர்ணம். அவர் ராஜகோபுரம் கடந்து உள்ளே வர அனுமதி இல்லை. அவருக்குப் பிறந்ததிலிருந்து சிதம்பரத்தின் மேல் பற்று. நடராஜமூர்த்தி ஒரு நாள் அவருடைய கனவில் வருகிறார். இந்த சுவாமியை நாம் எப்பொழுது போய் பார்க்கப் போகிறோம் என சதா சர்வ காலமும் தாபம். ( இந்த தாபம் பகவானை காண்பித்து கொடுக்கும் ). நாளைக்கு போகலாம் நாளைக்கு போகலாம்னு அவர் சொல்லிக் கொண்டு இருந்ததினால் அவர் பெயரே “(திரு)நாளை போவார்” என்றாயிற்று.
பகவானை தவிர வேற எந்த சிந்தனையுமே இல்லை. ஒருநாள் இந்த க்ஷேத்ரத்திற்கு வருகிறார். சுவாமியை பிரார்த்தனை செய்கிறார். வாசலோடு போய்விடுவார்.
அவருக்காக அவருடைய முதலாளி ஒன்று சொன்னாராம்
“நீ சிதம்பரம் போயிட்டு வா, ஒன்றும் தப்பில்லை. ஒரு குளத்தை வெட்டி கொடுத்துட்டு போ என்கிறார்.
நந்தனாருக்காக ஒரே இரவில் கணபதி ஒரு குளத்தை வெட்டி கொடுக்கிறார். மறுநாள் பார்த்தால் குளம் வெட்டி இருக்கு தானோ வெட்டவில்லை. முதலாளியும் பார்த்தார். இது சாத்தியமில்லையே நீ முதலில் போயிட்டு வந்து விடு என்று சொல்லிவிட்டாராம்.
சிதம்பரத்தில் உள்ள தீக்ஷிதர்களுக்கெல்லாம் கோவிலை திறந்தால் உள்ளே சுவாமி இல்லை. அசரீரி சொல்லியது, என் பக்தன் வருகிறான் அவனை அழைத்து கொண்டு வாருங்கள் என்று.
சிதம்பரம் கோவில் ராஜவீதியை பிரதக்ஷணம் பண்ணிய பிற்பாடு, பூரணக் கும்பம் கொடுத்து, திவ்ய மங்கள கோஷத்துடன், வேதமந்திரங்கள் முழங்க அழைத்துக் கொண்டு போகிறார்கள். சுவாமியைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை அவருக்கு. பக்தி ஒன்றுதான் காரணம்.
ஒரு காணாமல் போன
குழந்தையை பாக்கலையென அம்மாவோட தாபமும், அம்மாவ பாக்கலை என்ற குழந்தையும் ஏக்கமும் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.
கர்ப்பகிரகத்தில தீபம் எரிகிறது. தன்னால வாசல்கதவு திறக்கிறது. பஞ்சாட்சர படிக்கட்டு நமச்சிவாய சொல்கிறது. ஸ்தம்பம் எல்லாம் ஆச்சரியமா பார்க்கிறது. சன்னிதியே தேவ லோகமா மாறுகிறது. நந்தனார் ஆச்சரியமா பார்க்கிறார். எங்கே இருக்கிறோம் என்று கூட புரியவில்லை. இவா எல்லாரும் பார்த்துக் கொண்டே இருக்கும் பொழுது இறங்குகிறார், ஓடுகிறார், வேகமாக ஓடுகிறார், சுவாமி கிட்ட போனார், மறைந்து போய்ட்டார். பகவானோடு ஐக்கியமாகி விட்டார்.
சுவாமியை பார்க்கணும்னு நினைச்சா, சுவாமி நம்மை அனுகிரஹிப்பார். அப்படிப்பட்ட அணுகிரஹத்திற்கு மஹோன்னதமான புண்ணிய பூமி திருப்புன்கூர்.
அவருக்காக தான் சுவாமியே ஆசைப்பட்டு நந்தியை விலகி இருக்கச் சொன்ன ஸ்தலம். ஆனால் இங்கிருக்கும் நந்திக்கு நாக்கு இருக்காது. மற்ற எல்லா கோவில்களிலும் நந்திக்கு நாக்கு இருக்கும்.
சுவாமியை தரிசனம் செய்து கொண்டிருந்த நந்தியை விலகச் சொன்னதால்
ஒரு பக்கம் சிரித்துக் கொண்டிருக்கும் நந்தி சற்று தள்ளி நின்று பார்த்தால் கோபமாக இருக்கும்.
மேலும் இது மட்டும் பெண் நந்தி என்கிறார்கள். கழுத்தில் நிறைய ஆபரணம் காணலாம். பெண்கள் உடல் தரையில் படாமல் நமஸ்காரம் செய்வதை போல், நந்தியும் தன் உடல் தரையில் படாமல் 4 கால்களையும் மடக்கி அதன் மேல் அமர்ந்திருக்கும். ( மற்ற கோவில்களில் அப்படி இல்லை). அதீத அழகு இந்த நந்தியும்.
மேலும் எல்லா கோவில்களிலும் நேராக இருக்கும் துவார பாலகர்கள், இங்கு தலை சாய்த்து இருப்பர். ஸ்வாமி நந்தனாருக்கு நல்ல தரிசனம் கொடுக்க வேண்டி இவ்வாறு உள்ளனர்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“முந்தி நின்ற வினைகள் அவை போக” என்று பாடுகிறார்.
அதற்குப் பிறகுதான் நாம் பகவானை சிந்திக்க முடியுமாம். அப்பேர்ப்பட்ட பூலோக கைலாயமான திவ்யக்ஷேத்ரம்.
கைலாயத்தில் தேவாதி தேவர்களெல்லாம் எப்பவும் சுவாமியை ஸ்தோத்திரம் பண்ணிக் கொண்டு, வேதம், சங்கீர்த்தனம் சொல்லி, பத்ர புஷ்பம் சாத்துவா. ஒரு நாள் நாரத பகவான் பிரதக்ஷிணம் பண்ணி பிரார்த்தனை பண்ணும் பொழுது தன் மனதில் சுவாமி அழகா அம்பாள் அழகா என நினைக்கிறாராம். நான் அழகா நீ அழகா என சுவாமியும் அம்பாளும் கைலாயத்தில் தான் தனக்கு உள்ளேயே கேட்டுக் கொண்டார்களாம். அம்பாள் எப்பவும் நீங்க தான் அழகு. சுவாமியோ இல்லை நீதான் அழகு என பேசிக்கொள்ளும் பொழுது நாரதர் நீர் தான் அழகு என்று சொல்லிவிட்டார். அம்பாள் நான் அழகில்லையா எனக் கேட்டு விட்டாராம்.
அப்போ யார் அழகு என்று தெரிந்து கொள்வதற்காக என்ன பண்ணினா.. கைலாயத்திலிருந்து ஒரு கூர்ச்சத்தை கீழே விடுகிறார்கள்.
ஒரு தர்ப்பையில் முடிச்சை இட்டு இந்த கூர்ச்சம் எந்த இடத்தில் போய் சேருகிறதோ அந்த க்ஷேத்ரத்தில் பார்க்கலாம் என்று
அங்கு இரண்டு பேரும் ஒரு தராசு தட்டில் இருந்து பார்க்கும்போது சமமாக இருந்ததாம். அப்போ நாரதர் சொன்னாராம், நீங்கள் இரண்டு பேருமே அழகுதான். நீங்கள் இந்த க்ஷேத்ரத்திற்கு வர வேண்டும் என்று அப்படிச் சொன்னேன் எப்படி கைலாயத்தில் சுவாமியும் அம்பாளும் நாரதர் பார்த்து அனுபவித்தாரோ, அப்படியே அழகாக இருக்கிறார்களாம். சுவாமி சிவலோக தியாகர் / சிவலோக நாதர்.
தியாகராஜ பெருமான் கைலாயத்திலிருந்து பூமிக்கு வந்தவர். இங்குள்ள சுவாமியும் கைலாயத்திலிருந்து பூமிக்கு வந்தவர்.
திருவாரூரில் உள்ள சப்தவிடங்கர் தியாகராஜர் உற்சவமூர்த்தி. அதே தியாகராஜருடைய மூலவரை பார்க்கணும்னா வரவேண்டிய ஸ்தலம் பூலோக கைலாயமாய் இருக்கக்கூடிய திருப்புன்கூர்.
மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது.
கூர்ச்சம் இங்கே விழுந்த பொழுது பஞ்சலிங்கமாக மாறி விட்டது. அதன் மகிமை- திருமண வரம் நாகதோஷ நிவர்த்தி இவைகளை தரக்கூடியதாக பக்தர்களால் வணங்கப்படுகிறது.
அம்பாள் சௌந்தரநாயகி.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
யுகத்திற்கெல்லாம் முன்னால் உள்ள கோவில். அகத்தியருக்கு திருமண கோலம் காட்டிய ஸ்தலம். அம்பாள் அழகு, சுவாமி அழகு, நந்தி அழகு, க்ஷேத்ரம் அழகு, வருபவர்களை எல்லாம் அழகாக்கி தரும் ஸ்தலம். அகத்தின் கண் கொண்டு காண்பதே ஆனந்தம். அந்த அகத்தை அழகு பட செய்வதற்குரித்தான க்ஷேத்ரம். ஆனந்தமான க்ஷேத்ரம். ஆத்மார்த்த பூஜை பண்ணி அதனால் நமக்கு பலாபலனை அனுபவிப்பதற்கு உண்டான க்ஷேத்ரம்.
அழகிய பல சன்னதிகள் கொண்ட கோவில்.
வெளிமாட வீதியில் குளம் வெட்டிய விநாயகர், பஞ்சலிங்கங்கள் நாகர்கள் நவகிரகம் பைரவர் சந்திரன் காணலாம். மேலும் கோவிலில் நந்தனாருக்கு இரண்டு தனி தனி சன்னதிகள் உள்ளன.
கோவிலில் உள்ள அனைத்து சிலைகளும் கலைநயத்துடன் செதுக்கப்பட்டு அழகாக காட்சியளிக்கின்றன.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பூர்வஜென்ம பாப தோஷம் நீங்க
நாக தோஷம் நீங்க
ஆயுள் பலம் பெற
துயரம் நீங்கி மன அமைதி பெற
வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு பெற
மழை மற்றும் விவசாயம் செழிக்க
தொழில் மற்றும் வாழ்வியல் தடைகள் நீங்க பிரார்த்தனை
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வைகாசி பிரம்மோற்சவம் 10 நாட்கள்
புரட்டாசி நந்தனார் குருபூஜை விசேஷம்.
மஹா சிவராத்திரி திருக்கார்த்திகை
ஐப்பசி அன்னாபிஷேகம்
புத்தாண்டு தீபாவளி பொங்கல் பிரதோஷம் சிறப்பு.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரம்மன், இந்திரன், அகத்தியர், சந்திரன், சூரியன், அக்னி, பதஞ்சலி, வியாக்ரபாதர், சப்தகன்னியர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், விராலிமிண்ட நாயனார் ஏயர்கோன் கலிக்காமர், கபிலதேவ நாயனார், நந்தனார், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், இராசேந்திர சோழன் முதலியோர்.
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
4KM வைத்தீஸ்வரன் கோவில், – திருப்பனந்தாள் வழியில் 3KM சென்று, கோவில் வளைவில் 1KM உள்ளே செல்ல வேண்டும்
7AM – 12NOON, 5PM – 8PM
7639638152 பாலாஜி குருக்கள்
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முந்தி நின்ற வினைக ளவைபோகச்
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
அந்தம் இல்லா அடிகள் அவர்போலும்
கந்த மல்கு கமழ்புன் சடையாரே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply