திருந்துதேவன்குடி நண்டாங் கோவில் கற்கடேஸ்வரர்

🌻மூலவர் : கற்கடேஸ்வரர்

உற்சவர் : சோமாஸ்கந்தர்

அம்பாள் : அபூர்வ நாயகி,

அருமருந்து நாயகி

ஸ்தல விருக்ஷம் : நங்கை மரம்

தீர்த்தம் : நவபாஷான தீர்த்தம்

ஆகமம் : சிவாகமம்

பாடல் : சம்பந்தர்,

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி வடகரை ஸ்தலம் 42.

🌻 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பொதுவாக கோவில்களில் ஒரு அம்பாள் தான் இருப்பார். இங்கு இரு அம்பிகையர் அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.

ஸ்வாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையும், இந்திரனால் வெட்டுப்பட்ட காயமும் உள்ளது.

🌻 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹பிணி நீக்கும் சிவன் 👉 கால வெள்ளத்தில் இவ்விடத்தில் சுயம்புலிங்கம் மண்ணிற்குள் மறைந்தது. ஒரு சமயம் இப்பகுதியை சோழ மன்னன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு வாத நோய் உண்டானது. பல வைத்தியங்கள் செய்தும் குணமாகவில்லை. தீவிர சிவ பக்தன் ஆன அவன் சிவனை சரணடைந்தான். ஒரு சமயம் வயதான மருத்துவ தம்பதியர் அவனது அரசவைக்கு வந்தனர். மன்னனிடம் விபூதியை தீர்த்தத்தில் கரைத்து கொடுத்தனர். அந்த மருந்தை சாப்பிட்டவுடனே மன்னன் நோய் நீங்கி எழுந்தான். மருத்துவ தம்பதியரை தனது அரசவையில் ராஜ வைத்தியராக தங்கும்படி வேண்டினான். அவர்கள் அன்புடன் மறுத்து கிளம்புவதாக கூறினர். அவர்களுக்கு பொன்னும் பொருளும் பரிசளித்தாலும் ஏற்றுக்கொள்ளவில்லை. வியந்த மன்னன் எது வேண்டுமானாலும் தருகிறேன் என வேண்டினான்.

பின்னர் அவர்கள் மன்னனை இவ்விடத்திற்கு அழைத்து வந்து, சுவாமி இருந்த இடத்தில் கோவில் எழுப்பும்படி கூறினர். மன்னனும் ஒப்புக்கொண்டான். அப்போது லிங்கத்தின் அருகில் சென்ற இருவரும் அதனுள் ஐக்கியமாயினர். அதன் பின்பு தான் வந்தது சிவபெருமான் என உணர்ந்த மன்னன் இவ்விடத்தில் கோவில் எழுப்பினான். இவரிடம் வேண்டிக் கொள்ள துணிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஞானசம்பந்தர் இவரை பிணி நீக்கும் சிவன் என்று பதிகம் பாடியுள்ளார்.

🌹 இரட்டை அம்பிகையர் 👉

மன்னன் இவ்விடத்தில் கோயில் எழுப்பியபோது ஏற்கனவே இங்கிருந்த அம்பிகையை காணவில்லை. எனவே புதிதாக ஒரு அம்பிகையை பிரதிஷ்டை செய்தான். மருத்துவர் வடிவில் வந்து அருளியவர் என்பதால் “அருமருந்து நாயகி”. ஆனால் சிறிது நாட்களிலேயே அம்பிகை சிலை கிடைத்தது. அதனையும் அங்கு பிரதிஷ்டை, அபூர்வ நாயகி. இவளே இங்கு பிரதான அம்பிகை. அம்பாள் அரும்பொழுந்து நாயகிக்கு அபிஷேகம் செய்து தரப்படும் தீர்த்தத்தை உட்கொண்டால் வியாதிகள் தீருகின்றன என்று நம்பப்படுகிறது. கோவிலில் இந்த அபிஷேக தீர்த்தம் விற்கப்படுகிறது.

🌹 யோக சந்திரன் 👉

கோயில் நுழைவு வாயிலில் சந்திரன் சன்னதி உள்ளது. எப்பொழுதும் நின்று கொண்டிருக்கும் சந்திரன் இங்கு அமர்ந்த கோலத்தில் உள்ளார். இவர் யோக நிலையில் யோக சந்திரனாக காத்து தருகிறார். ஜாதகத்தில் சந்திர தசை உள்ளவர்கள் இவருக்கு வெண்ணிற வஸ்திரம் சாந்தி வழிபட்டால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.

🌻 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஒரு சமயம் துர்வாச மகரிஷி சிவபூஜை செய்து கொண்டிருக்கும் பொழுது அவ்வழியே சென்ற ஒரு கந்தர்வன், துர்வாசரின் முதிய தோற்றத்தை கண்டு பரிகாசம் செய்தான். அவரது தியானம் கலையும் விதமாக கைதட்டி அழைத்தான். ஆனாலும் துர்வாசர் திரும்பவில்லை. நண்டு போல நடந்து காட்டி அவரை மேலும் கேலி செய்தான். கோபம் கொண்ட துர்வாசர், அவனை நண்டாக பிறக்கும்படி சபித்து விட்டார். வருந்திய கந்தர்வன் மன்னிப்பு வேண்டினான். சிவலிங்க பூஜை செய்து வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்றார். அதன்படி நண்டு வடிவில் இத்தலம் வந்த கந்தர்வன், சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருப்பதை கண்டான்.

தினமும் அருகில் உள்ள புஷ்கரிணியில் மலர் பறித்து, சுவாமிக்கு படைத்து வழிபட்டு வந்தான். இதனிடையே அசுரர்களை அழிக்கும் சக்தி வேண்டி இந்திரன் தன் குருவின் ஆலோசனைப்படி இங்கு சிவ பூஜை செய்ய வந்தான். இங்கிருந்த புஷ்கரணியில் தினமும் 1008 மலர் பறித்து சிவலிங்கத்தை பூஜித்து வந்தான். நண்டு வடிவில் வந்த கந்தர்வன் சிவனுக்கு மலர் படைக்கவே தினமும் இந்திரனின் பூஜையில் ஒரு மலர் குறைந்தது. இந்திரனுக்கு காரணம் புரியவில்லை. ஒரு சமயம் நண்டு பூஜை செய்வதை பார்த்து விட்டான். தான் பூஜை செய்யும் லிங்கத்தை பூஜிக்கும் தகுதி பிறருக்கு கிடையாது என ஆணவம் கொண்ட அவன், நண்டை கொல்ல முயன்றான். நண்டு சிவபூஜைக்காக லிங்கத்தின் பாணத்தின் மீது ஏறிய போது, வாளால் வெட்ட முயன்றான். அப்போது சிவன் லிங்கத்திற்குள் துளை ஏற்படுத்தி கொடுக்கவே, நண்டு அதற்குள் புகுந்து, கந்தர்வன் விமோசனம் பெற்றான். அப்போது இந்திரனின் வாள், லிங்கத்தின் மீது பட்டு காயம் உண்டானது.

தவறை உணர்ந்த இந்திரன் மன்னிப்பு வேண்டினான். சிவன் அவனை மன்னித்ததோடு, “ஆணவத்தோடு இருப்பவர்களால் எந்த ஒரு செயலிலும் வெற்றி பெற இயலாது. பணிவு குணமே வெற்றி / நன்மை தரும்.” என அறிவுறுத்தி காட்சி தந்தார்.

கற்கடத்திற்கு (நண்டு) விமோசனம் தந்தவர் என்பதால் இவர் கற்கடேஸ்வரர்.+ தேவேந்திரன் திருந்திய தலமாதலால், “திருந்து தேவன் குடி” என பெயர் வந்தது.

சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரம் உள்ளது.

ஆடி அமாவாசை பூர நட்சத்திரம் கூடிய நேரத்தில் 21 குடம் காராம் பசு பாலை கொண்டு இரவில் சிவலிங்கத்தை அபிஷேகித்தால் நண்டு வெளிப்பட்டு காட்சி கொடுக்கும் என்று வசிஷ்ட மாஹாத்மியம் கூறுகிறது.

🌻ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கோவில் எளிய மற்றும் அழகான கட்டடக் கலையுடன் அமைந்துள்ளது.நான்குபுறமும் பச்சைப் பசேலென்ற நெல் வயல்கள் சூழ நடுவில் அமைந்துள்ளது. ஏகதள விமானம், கருவறை சுற்றி அகழி போன்ற அமைப்பு.

சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையும் , இந்திரனால் வெட்டுப்பட்ட காயமும் உள்ளது.

இத்தல விநாயகர் கற்கட விநாயகர் என்று திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார். பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியம், சுதை வடிவில் நடராஜர் உள்ளனர். நவக்கிரக சந்நிதி கிடையாது. நண்டு கோவில் என்றால் தெரிகிறது.

🌻 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

புனர்பூசம் பூசம் ஆயில்யம் நட்சத்திரம் மற்றும் கடக ராசி பரிகார தலம் இது

சர்ம நோய் நிவர்த்தி

கர்வம் நீங்கி பணிவு பெற்றிடவும், வாழ்வில் தடைகள் விலகி நல்வழி கிடைக்கவுமான பிரார்த்தனைகள்.

🌻 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மஹா சிவராத்திரி

திருக்கார்த்திகை

நவராத்திரி

ஆடிப்பூரம்

🌻 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

நண்டு இந்திரன் சோழ மன்னன் அம்பாள் அப்பர் சம்பந்தர்

🌻அமைவிடம், நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கும்பகோணத்தில் இருந்து திருவிசநல்லூர் செல்லும் நகரப் பேருந்துகளில் செல்லலாம்.

கும்பகோணம் 10KM

திருவுசநல்லூர் 1KM ( இங்கிருந்து ஆட்டோ அல்லது நடந்து செல்லலாம் )

9AM – 12NOON, 4PM – 7PM

99940 15871 ராமநாத சிவாச்சாரியார்

குருக்களை அழைத்துவிட்டு செல்வது சிறப்பு.

🌻 கோவில் தேவாரப் பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மருந்துவேண் டில்லிவை

மந்திரங் கள்ளிவை

புரிந்துகேட் கப்படும்

புண்ணியங் கள்ளிவை

திருந்துதே வன்குடித்

தேவர்தே வெய்திய

அருந்தவத் தோர்தொழும்

அடிகள்வே டங்களே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *