திருநல்லம் கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர்
மூலவர் : உமாமகேஸ்வரர்/ பூமிநாதர்
அம்பாள் : அங்கவளநாயகி /தேகசௌந்தரி
ஸ்தல விருக்ஷம் : அரசமரம் & வில்வம்
தீர்த்தம் : பிரம்ம, சக்தி, பூமி தீர்த்தம், ஞானகூபம்
பாடல் : அப்பர் சம்பந்தர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 34
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரம்மாண்ட சுயம்பு நடராஜர் :
ஆஹா பார்த்துக்கொண்டே இருக்கலாம். அர்ச்சகர் விவரிக்க விவரிக்க நமக்கு மேனி சிலிர்க்கிறது..
எட்டு அடி உயரம்.. கைரேகைகள், தேமல், மச்சம், நரம்புகள்… என மனிதருக்கே உரிய அங்க அடையாளங்களுடன் திகழும் விக்கிரகத் திருமேனி… நான்கு திருக்கரங்களும் விரிசடையுமாக, தரிசிக்கும் நம்மை வியக்க வைக்கிறார் கோனேரிராஜபுரம் ஸ்ரீநடராஜபெருமான்!
சக்கரவர்த்தி கண்டராதித்தரும் அவருடைய மனைவி செம்பியன்மாதேவியும் கோனேரிராஜபுரம் கோயிலிலும் ஸ்ரீநடராஜ சிற்பம் அமைக்க தீர்மானித்து, ஸ்தபதி ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்தனர்.
நாட்கள் நகர்ந்தன… எவ்வளவு முயன்றும் சிலை முழுமையடையாமல் பணி இழுத்துக் கொண்டே போக, செய்வதறியாமல் திகைத்தார் ஸ்தபதி. பணி தாமதமாவதை அறிந்த மன்னன், ஸ்தபதியை கடிந்துகொண்டான். ‘நாளைக்குள் சிலை தயாராகவில்லை எனில் தண்டனை நிச்சயம்‘ என்று எச்சரித்தான்.
ஸ்தபதியும் அவருடைய மனைவியும் கவலையில் ஆழ்ந்தனர். இறைவனை வேண்டினர். அப்போது, அவர்களது இல்லத்தைத் தேடி வந்த வயதான கணவனும் மனைவியும் ‘’உண்ணவோ பருகவோ ஏதேனும் கிடைக்குமா’’ என்று கேட்டனர். ஸ்தபதியோ விரக்தியுடன், ‘’காய்ச்சி உருக்கிய உலோகக் குழம்பைத் தவிர வேறு எதுவும் இல்லை’’ என்றான் விரக்தியாக! அத்துடன் தனது நிலையையும் விவரித்தான்.
இதைக்கேட்ட அந்தத் தம்பதி, சிலை வடிக்க வைத்திருந்த உலோகக் குழம்பை அப்படியே எடுத்துப் பருகினர். மறுகணம்… அங்கே இரண்டு விக்கிரகங்களாக மாறினர். ஆமாம்! ஸ்தபதி எதிர்பார்த்தது போன்றே அழகிய விக்கிரகங்களாக காட்சி தந்தனர். வந்தது சிவ பார்வதி என்பதை அறிந்து சிலிர்த்தான் ஸ்தபதி. விக்கிரகங்கள் தயார் என்பதை அறிந்த மன்னன், அவற்றைக் காண ஓடோடி வந்தான். அவனிடம், விக்கிரகங்கள் சுயம்புவாகத் தோன்றியதை ஸ்தபதி விவரிக்க… அதை நம்பாத மன்னன், உளியால் விக்கிரகத்தைத் தட்டினான். மறுகணம் விக்கிரகத்தில் இருந்து ரத்தம் பீரிட்டது. மன்னனின் கை-கால்கள் செயலிழந்தன. தவறை உணர்ந்த மன்னன், ஆலயம் சென்று வலம் வந்து இறைவனை வேண்ட, அவனது அங்கங்கள் குணம் பெற்றன.
கோனேரிராஜபுரம் ஸ்ரீநடராஜர் விக்கிரகம் உருவானது இப்படித்தான். தானே தோன்றியவர் என்பதால், தம்முடைய மேனியில், மனிதனுக்கு உள்ளது போன்றே ரேகைகள், மச்சங்களுடன் திகழ்கிறாராம்! ருத்ராட்ச பந்தலின் கீழ், ஸ்வாமி தெற்கு நோக்கி அருள, இவரை தரிசனம் செய்தபடி நால்வர் பெருமக்களும் அற்புதமாகக் காட்சி தருகின்றனர்.
மதுரை, உத்திரகோசமங்கை, கோனேரிராஜபுரம் ஆகிய இம்மூன்று தலங்களிலும் நடராஜருக்கு திருவீதி உலா கிடையாது.
அனுகிரஹ சனி பகவான்
மேற்கு பார்த்த நிலையில். நளனும் தமயந்தியும் திருநள்ளாறு செல்லும் முன் இத்தலத்தில் வழிபாடு. எப்பொழுதும் கருப்பு நிற ஆடை அணிந்திருக்கும் சனி பகவான் இங்கு மட்டும் வெள்ளை நிற ஆடை அணிந்து அனுகிரஹ மூர்த்தியா அருள்பாலிக்கிறார். சனி தோஷத்திற்கும் வழிபாடு செய்கிறார்கள்..
திரிபுரத்தை எரித்த திரிபுர சம்ஹார மூர்த்தி தனி சன்னதி. இவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் எமபயம் & எதிரிகள் தொந்தரவு விலகும்.
படிப்பில் மந்தம், ஞாபக சக்தி வேண்டுபவர்கள் இங்குள்ள ஞானகூபம் தீர்த்தம் சாப்பிட்டால் சிறந்த பலன்..
துர்க்கை மேற்கு பார்த்து அருள் புரிகிறாள். எமதர்மன் திருக்கடையூரில் ஏற்பட்ட பயத்தை போக்க இந்த துர்க்கையை வழிபாடு செய்துள்ளான்.
நந்தி பகவான் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளார். So பிரதோஷ காலத்தில் இங்கு வழிபாடு செய்தால் ஒன்றுக்கு பல மடங்கு பலன் கிடைக்கும்.
அஷ்டதிக் பாலகர்கள் இங்கு வழிபாடு செய்ததன் நினைவாக கோவில் விமானத்தின் மேல் அஷ்டத்தின் பாலகர்கள் வீற்றிருக்கிறார்கள்..
16 சித்தர்களும் இங்கு வழிபாடு செய்திருக்கிறார்கள்.
மூன்று சண்டிகேஸ்வரர் உள்ளனர்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பெருமாள் தாரை வார்த்து கொடுக்க சிவ பார்வதி திருமண காட்சியை அகத்தியர் இங்கு தரிசனம் செய்துள்ளார். எனவே இத்தல இறைவனுக்கு பூமிநாதன் என்று பெயர். அகத்தியர் வழிபட்ட தலம்.
சந்திரகுலத் தோன்றலாகிய புரூரவஸ் தமக்குக் கர்க்க முனிவரால் சபித்துண்டாகிய குஷ்டரோகம், மிகவும் வருந்தி, பல கோயில்களில் வேண்டினான். இறுதியில் இத்தலத்தில் நீங்கப் பெற்றார். இத்தலத்தில் அவர் வைத்யநாதரை பிரதிஷ்டை செய்து துதிசெய்து வந்தார். இச்சன்னதி இரண்டாம் திருச்சுற்றில் வடகிழக்கில் அமைந்துள்ளது. இதனால் குஷ்டரோகம் நீங்கி மன்மதனையொத்த பொலிவுடன் வலிவுகூடி வாழ்ந்தார். இவ்வைத்தியநாதரை இத்தலத்தில் வழிபடுவோர் சகல நோய் நொடிகளும் நீங்கி, குறிப்பாக வெண்குஷ்டம், பேரானந்த சுகவாழ்வு பெறுவர். இதனால் புரூரவஸ் சிவன் சன்னதி விமானத்தை பொன் தகட்டால் வேய்ந்தான், வைகாசி மாதப் பெருவிழாவை நடத்தித் தான தருமங்களைச் செய்து சிவப்பேறு பெற்றார்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முற்காலத்தில் ஹிரண்யாக்ஷன் என்ற அசுரன் பூமிதேவியைப் பாதாளத்திற்குக் கொண்டுச் சென்றான். அவளை மஹாவிஷ்ணு வராஹஅவதாரம் எடுத்து பூமியை மீட்டு மேலே கொணர்ந்தார். பின் அவர் பூமிதேவிக்கு பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேசித்து மேலும் நிலைபெற்று இருக்க திருநல்லம் பதியில் சிவபெருமானைப் பூசை செய்யுமாறு அறிவுறுத்தினார். அங்கு பத்ரம் என்று பெயர் பெற்றதும், கடலில் இருந்து பிறந்ததுமான ஒரு அரசமரம் உள்ளது. அங்கே சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டு, நிலை பெற்று இருப்பாயாக என்று திருமால் கூற, பூமாதேவியும் அவ்வாறே செய்தாள். பூமி தேவி ஐந்து சுலோகங்களால் சிவபெருமானை வழிபட்டாள். சிவபெருமானும், தேவிகளுடன் பெருமாளும் அவள் முன் தோன்றினர். சிவபெருமான் பூமி தேவியை நோக்கி என்ன வரம் வேண்டும் என்று வினவ, நீங்கள் உமையன்னையுடன் இத்தலத்தில் விளங்க வேண்டும் என வேண்டினாள். அது முதல் இந்தத் தலம் பூமீஸ்வரம் என்று புகழ் பெற்றது. பூமிதேவியும் வரம் பெற்றாள்.
கௌதம முனிவரும், மூவாயிரம் முனிவர்களும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைக் கண்டு தரிசிக்கப் பேரவா கொண்டனர். அதன் பொருட்டு அவர்கள் காவிரியின் கரையிலுள்ள அரச வனத்தில் சிவபெருமானை நோக்கிக் பஞ்சாட்சர மந்திரத்தைத் தியானித்து, கடுந்தவம் புரிந்தனர். உமாதேவியுடன் தோன்றி சிவபெருமான் காட்சியளித்தார். அக்காட்சியைக் கண்டு வணங்கி மகிழ்ந்த அவர்களது தவத்திற்கு இரங்கி, கௌதம முனிவர் சிவபெருமானை நோக்கி, “பெருமானே! நாங்கள் உமது ஆனந்தத் தாண்டவத்தைக் காணவே தவம் புரிந்தோம்; எமக்கு அதனைக் காட்டியருளுக” என வேண்டினார். அதற்குச் சிவபெருமான், “முனிவர்களே! உங்கள் எண்ணம் ஈடேறும்; கவலைப்படாதீர்; யாம் பூமிதேவியால் பூசிக்கப்படும் காலத்தில் ஆனந்தத் தாண்டவக் காட்சியைக் காட்டியருளுவோம்; அதுபோது நீங்களும் கண்டு தரிசிக்க!” எனக் கூறி மறைந்தார். அதன்படியே, பூமிதேவிக்கு ஆனந்தத் தாண்டவக் காட்சி அருளிய காலத்தில், கௌதம முனிவரும் மற்ற முனிவர்களும் கண்டு தரிசித்து, பேரின்ப வெள்ளத்தில் திளைத்து மகிழ்ந்தனர். ஆனந்தத் தாண்டவக் காட்சியை உலக மக்களும் கண்டு தரிசித்து, மட்டிலா மகிழ்ச்சியில் திளைக்க, இத்தலத்தில் மிகப்பெரிய ஆனந்தத் தாண்டவ (நடராசர்) மூர்த்தியாக எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எளிய முகப்புடன் தொடங்கும் இக்கோவிலில் பிரம்மாண்டமான தூண்களுடன் கூடிய நீண்ட மண்டபமும், கொடிமரமும், நந்தியும் இடம்பெற்றுள்ளன.
செம்பியன் மாதேவியாரால் 10ஆம் நூற்றாண்டில் செங்கற்கள் இருந்த இக்கோவில் கருங்கற்களால் கற்றளியாக மாற்றப்பட்டது. ஏக தள விமானம் மற்றும் பாதபந்த அதிட்டான அமைப்புடன் இது விளங்குகிறது. கருவறை மற்றும் தேவகோஷ்டங்களில் லிங்கோத்பவர், பிட்சாடனர், விநாயகர் மற்றும் அகஸ்தியர் போன்ற நுணுக்கமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன
சிவன் சன்னதி கோஷ்டத்தின் பின்புறம் பிரம்மா விஷ்ணு சிவன் மூவருமே அருள் பாலிக்கிறார்கள். வைத்தியநாதருக்கு தனி கோயில்.. இத்தல விநாயகர் அரசமர விநாயகர்.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சகல விதமான நோய்களும் குறிப்பாக வெண்குஷ்டம், இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாதரை வழிபட்டால் குணம் ஆகிறது.
வீடு கட்டுவதில் சிக்கல், நிலப்பிரச்சனை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம், திருமணத்தடை, உடல் நிலை, வியாபாரப் பிரச்சனை, சனி தோஷம் மற்றும் எதிரிகளால் தொல்லை உள்ளவர்கள் அனைவரும் வழிபாடு செய்கிறார்கள்..
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இக்கோவிலில் ஆண்டு தோறும் மொத்தம் 12 திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.
வைகாசி விசாகப் பெருவிழா
மார்கழி திருவாதிரைத் திருவிழா
சித்திரை திருவிழா 15 நாட்கள்
ஆறு நடராஜர் அபிஷேகங்கள்
• சித்திரை – திருவோணம்
• ஆனி – உத்திரம் (ஆனித் திருமஞ்சனம்)
• ஆவணி – சுக்லபட்ச சதுர்தசி
• புரட்டாசி – சுக்லபட்ச சதுர்தசி
• மார்கழி – திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்)
• மாசி – சுக்லபட்ச சதுர்தசி
ஐப்பசி அன்னாபிஷேகம் திருக்கார்த்திகை
மஹா சிவராத்திரி
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பூமாதேவி, நந்தி, அஷ்டதிக் பாலகர்கள், எமதர்மராஜன், அகத்தியர், கௌதமர், முனிவர்கள், 16 சித்தர்கள், புரூரவஸ், நளன், தமயந்தி, தர்மசர்மா, முரண்டகன், கண்டராதித்தன், செம்பியன் மாதேவி, அப்பர், சம்பந்தர், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார்
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கும்பகோணம் – காரைக்கால் அல்லது கும்பகோணம் – வடமட்டம் மற்றும் ஆடுதுறை – வடமட்டம் வழித்தடத்தில் உள்ள எஸ்.புதூர் / கோனேரிராஜபுரம் கூட்டு ரோட்டில் இறங்க வேண்டும். அங்கிருந்து வலதுபுறமாக அல்லது கூட்டு ரோட்டிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரம் சென்றால் திருநல்லம் திருக்கோவிலை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து வடமட்டம் செல்லும் நகரப் பேருந்துகள் மூலமாகவும் கோனேரிராஜபுரம் அருகில் செல்லலாம்.
கும்பகோணம் 21KM
ஆடுதுறை 13KM
திருவீழிமிழலை 7KM
வைகல் & கோழம்பியம் 5KM
7AM – 12NOON, 5PM – 8PM
84893 91675 சதாசிவ குருக்கள்
63809 02204
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கல்லால் நிழல்மேய கறைசேர் கண்டாவென்
றெல்லா மொழியாலும் இமையோர் தொழுதேத்த
வில்லால் அரண்மூன்றும் வெந்து விழவெய்த
நல்லான் நமையாள்வான் நல்லம் நகரானே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply