திருக்கோடிக்காவல் திருக்கோடிகா கோடீஸ்வரர்

🪷மூலவர் : கோடீஸ்வரர் வேத்ரவனேஸ்வரர் கோடிகாநாதர்

அம்பாள் : திரிபுர சுந்தரி, வடிவாம்பிகை,

ஸ்தல விருக்ஷம் : பிரம்பு

தீர்த்தம் : சிருங்கோத்பவ தீ & காவிரி நதி

புராணபெயர் : வேத்ரவனம்

பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர்

தேவார பாடல் பெற்ற சிவாலயம்

சோழ நாட்டு வடகரை ஸ்தலம் 37

🪷ஸ்தல சிறப்பு

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°*

👉இது 1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலம்.

👉சனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர்.

👉அதேபோல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ளனர்.

👉இங்குள்ள சனிபகவான் “பாலசனி’ என அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது.

👉காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் உள்ளது. மங்கு, பொங்கு, ஸ்மரணச் சனி மூன்றிற்கும் வழிபடக்கூடிய சனிபகவான் இவர்.

👉இவ்வூரை ஒட்டி காவேரி நதி, “உத்திரவாஹினி’ யாக (தெற்கிலிருந்து வடக்காக) பாய்கிறது.

🪷 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

👉 “கா’ என்றால் சோலை எனப் பொருள்படும். “கா’ என முடியும் ஐந்து சிவத்தலங்களை “பஞ்சகா’ என அழைப்பர். அவை திருஆனைக்கா திருகோலக்கா, திருநெல்லிகா, திருகுறக்குக்கா மற்றும் திருகோடிக்கா ஆகும். சோலைகளுக்கு இடைய அமைந்து ஊர் என பொருள் கொள்ளலாம்.

👉“திரிகோடி’ என்றால் மூன்றுகோடி என்று பொருள் ஆகவே, மூன்று கோடி மந்திர தேவதைகளுக்கு ஏற்பட்ட சாபம் இத்தலத்தில் நீங்கியதால், “திரிக்கோடிக்கா’ என்ற காரணப்பெயர் ஏற்பட்டு, நாளடைவில் “திருக்கோடிக்காவல்’ என்று மருவி இருக்கலாம்.

👉யமபயம் இல்லை : தன் கணவனைக் கொன்றுவிட்டு, நெறி தவறி தன் வாழ்க்கையை நடத்தி வந்த லோக காந்தா என்ற பெண்மணி, வாழ்க்கையின் இறுதிகாலத்தில், திருக்கோடிக்கா வந்து தங்க நேர்ந்தது. அவள் மரணமடைந்ததும், யமன், அவளைத் தண்டிக்க, நரகலோகம் அழைத்துச் செல்லுகிறான். சிவ தூதர்கள், இதை வன்மையாக கண்டிக்கின்றனர். யமதர்மராஜன், சிவபெருமானிடம் வந்து முறையிடுகிறார்.

தமது தலமான திருக்கோடிக்காவோடு, சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க யமனுக்கு அதிகாரம் இல்லை என்றும், காலதேச வர்த்தமானங்களால், இங்கு வந்தவர்களை எமன் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும், அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் கட்டளையிடுகிறார்

பாவக க்ஷேத்திரமான திருக்கோடிக்காவில் ஸ்நான, ஜப, தப, தியானங்கள் செய்கிறவர்களை நான் எதுவுமே செய்ய முடியாது என்று யமதர்மராஜன், யமலோகத்தில் முழக்கமிடுகிறான். லோககாந்தா என்ற அந்தப் பெண்மணி இத்தலத்தில் சம்பந்தப்பட்டு விட்டதால், யமனிடமிருந்து விடுபட்டு, பின் முக்தி அடைகிறாள்.

காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் யமபயம் கிடையாது. இந்த நம்பிக்கையை உறுதி செய்வது போல, இவ்வூரில் ருத்ரபூமி (மயானம்) தனியாக இல்லை. இவ்வூரில் மரிப்பவர்களை, காவிரி நதியின் மறுகரைக்கு கொண்டு சென்றுதகனம் செய்யும் வழக்கம் தொன்று தொட்டு இன்றுவரை தொடர்கிறது.

👉வைணவருக்கு அருள்பாலித்த ஈஸ்வரன்: இவ்வூருக்கு மேற்கே அமைந்துள்ள சுக்ரத்தலமான கஞ்சனூர் கிராமத்தில் ஹரதத்தர் என்ற பெரியவர் வாழ்ந்து வந்தார். பிறப்பால் வைணவரானாலும், இவர் தீவிர சிவபக்தர். கண்பார்வைக் குறைவு உள்ளவர். தினமும் காலையில் கஞ்சனூரிலிருந்து கிளம்பி திருமாந்துறை, திருமங்கலக்குடி, திருக்குரங்காடுதுறை, திருவாவடுதுறை, திருவாலங்காடு மற்றும் திருக்கோடிக்கா ஆகிய சிவத்தலங்களை தரிசித்து விட்டு, அர்த்த ஜாம பூஜைக்கு, தனது சொந்த ஊரான கஞ்சனூர் ஆலயத்துக்கு திரும்பிவிடுவதை, தினம் தனது வழக்கமாகக் கொண்டவர்.

ஒரு நாள் மாலை, திருக்கோடிக்கா ஆலயத்தில், ஸ்ரீ திருக்கோடீஸ்வரர் தரிசனத்தை முடித்துக் கொள்ளும் சமயம் பேய்மழை அடிக்க ஆரம்பித்து விட்டது. வெளியே புறப்பட முடியவில்லை. ஒரே இருட்டு வேறு, அவருக்கு நல்ல பார்வையும் கிடையாது. அர்த்த ஜாமம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

கஞ்சனூர் போயாக வேண்டுமே? ஈஸ்வரா, இப்படி ஏன் சோதனை செய்கிறாய் என்று துயரப்பட்டுக் கொண்டே நடுங்கும் குளிரில் கோபுர வாசலில் காத்துக் கிடந்தார். அக்கணம் அவ்வழியே ஒர் அரிஜனன் வந்தார். “”சுவாமி இதோ இந்தக் கம்பைப் பிடித்துக்கொள்ளுங்கள். உங்களை நொடியில் கஞ்சனூர் கொண்டுபோய்ச் சேர்த்து விடுகிறேன்,” என்றார். ஹரதத்தருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. தெய்வாதீனமாக, அங்கு வந்த அரிஜனன் நீட்டிய கம்பைப் பற்றிக்கொண்டு வேகமாக நடந்து, கஞ்சனூரை அடைந்து. அங்கு கோயில் அர்த்தஜாம வழிபாட்டை இனிதாக முடித்தார். தக்க சமயத்தில் வந்த தனக்கு உதவி புரிந்த அந்த அரிஜனனுக்கு, கோயிலில் தனக்கு பிரசாதமாகக் கிடைத்த அன்னத்தையும், சுண்டலையும் வழங்கினார். அரிஜனனும் நன்றி சொல்லி, அதைப் பெற்றுக் கொண்டு போய்விட்டார்.

👉மறுநாள் காலை, திருக்கோடீஸ்வரர் ஆலயத்தில் நந்தி, அம்பாள், சுவாமி, விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் சந்நிதிகளில், அன்னமும், சுண்டலும் காணப்பட்டன. முதல் நாள் இரவு அரிஜனனாக வந்து, ஹரதத்தருக்கு கை கொடுத்து உதவியவர், திருக்கோடீஸ்வரர்தான் என்பதில் சந்தேகம் இருக்க முடியுமா?

👉காட்சி கொடுத்த அம்பாள்: ஸ்ரீ திருக்கோடீஸ்வரரைப் போல் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாளும், அருள்பாலித்த விபரம் வருமாறு.

👉 ஆழ்வாருக்கு காட்சி கொடுத்தல் : ஆழ்வார்கள், வெங்கடாஜலபதியின் தரிசனத்திற்காக, திருப்பதி சென்றார்கள். அங்கு இறைவன், அவர்களுக்கு காட்சி தரவில்லை, மாறாக, “”திருக்கோடிக்காவில் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள், நீங்கள் விரும்பும் தரிசனம் கொடுப்பாள், அங்கே செல்லுங்கள்,” என்று அசரீரியாக உத்தரவு பிறந்தது. ஆழ்வார்களும், ஆவலுடன் புறப்பட்டு, திருக்கோடிக்காவை அடைந்தனர். ஊரை நெருங்கியபோது, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதைக்கடந்து வரமுடியாமல் ஆழ்வாராதிகள் சிரமப்பட்டபோது, அகத்திய முனிவர், அவர்கள் முன் தோன்றி, ஆலயத்திலுள்ள கரையேற்று விநாயகரை, மனதில் பிரார்த்தித்துக் கொள்ளும் படி கோரினார். அவர்களும் அவ்வாறே செய்ய, காவிரியில் வெள்ளம் குறைந்தது. ஆழ்வாராதிகள், கரையைக் கடந்து ஆலயத்தினுள் வர, அங்கு அம்பாள் அவர்களுக்கு வெங்கடாஜலபதியாக தரிசனம் தந்தருளினாள்.

👉 துர்வாசருக்கு காட்சி கொடுத்தல் :

துர்வாச மகரிஷி, ஆருத்ரா தரிசனத்தன்று, ஸ்ரீ நடராஜரை வணங்கிவிட்டு, திருக்கோடிக்கா வந்தடைந்தார். வேத்ரவனேஸ்வரரான ஸ்ரீ திருகோடீஸ்வரரை தரிசிக்க, ஆலயத்தில் வேகமாக பிரவேசிக்கையில், அம்பாளின் சந்தியைத்தாண்டிச் சென்று விடுகிறார். இதைக் கண்ட திரிபுரசுந்தரி அன்னை, எங்கே பிருங்கி முனிவர் போல் துர்வாசரும், சிவன்வேறு, சக்தி வேறு, எனப் பிரித்து எண்ணிவிடுவாரோ என அஞ்சி. அதற்கு சந்தர்ப்பமே கொடுக்கக்கூடாது என்று எண்ணி, தானே வலியச் சென்று திருக்கோடீஸ்வருக்கு முன்னால் துர்வாசருக்கு காட்சி கொடுக்கிறாள் என்று ஒரு புராணக்கதையும், கூறப்படுகிறது.

👉திருக்கோயிலில், ஸ்வாமி சந்நிதியில் ஸ்ரீ திருக்கோடீஸ்வரருக்கும், துர்வாசர் சிலைக்கும் நடுவில், மஹாமண்டபத்தில் காட்சி கொடுத்த அம்பாள் சிலை இருக்கிறது

👉சோழ மன்னர் பரம்பரையைச் சேர்ந்த செம்பியன் மாதேவி, எடைக்கு எடை பொற் காசுகளை வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கத்தை தோற்றுவித்தார்.

🪷 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

👉மந்திரங்கள் தவறான கொள்கைக்கு பயன்படுத்தப் பட்டதால் மந்திரங்கள் மீதே கோபப்பட்ட துர்வாசர் மந்திரத்திற்கு சாபம் கொடுத்தார். மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக உச்சரிக்கப்பட்டு சாபவிமோசனம் பெற்றன. அதேபோல் மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனை வேண்டி விமோசனம் பெற்றுள்ளனர். எனவே இத்தல இறைவனின் திருநாமம் “கோடீஸ்வரர்’ என்றும், ஊர் “திருக்கோடிக்கா’ அழைக்கப்பட்டது.

👉திரிகோடி மந்திரங்களுக்கு சாயுஜ்ய முக்தி கிடைத்தல் இத்தலத்தின் மகிமையை விளக்கும் வரலாறு ” ஆதிசைவ ருத்ரகோடி ஸம்ஹிதை’ என்ற சிவபுராணத்தில் சாயுஜ்ய காண்டத்தில், முப்பத்தி மூன்று அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. நைமிசாரணியத்தில், சனகாதி முனிவர்களுக்கு, சூத பௌராணிகர் நிகழ்ச்சிகளை விவரிப்பதாக அமைந்துள்ளது

👉பிரகாரத்தில் நிருதி பாகத்தில் இருக்கக்கூடிய பிள்ளையாருக்கு கரையேற்று விநாயகர் என்று பெயர். காவிரி கரைபுரண்டு ஓடும் பொழுது இங்கு தபஸ் செய்து கொண்டு இருப்பவர்கள் பயப்படுகிறார்கள். அப்போ அகஸ்தியர் காவிரி மணலில் கணபதி பிடித்து வைக்கிறார். இங்கு இருப்பவர்கள் அனைவரையும் கரையேற்றி விட்டு விட்டார் கணபதி. இவரை தரிசனம் செய்தால் இந்த ஜென்மாவிலிருந்து நம்மை கரையேற்றி விடுவார்.

👉யுகங்களுக்கெல்லாம் முன்னால் ஏற்பட்ட கோவில். மந்திரங்கள் எல்லாம் ஒரு நாள் தாங்களே தங்களை பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளும் பொழுது துர்வாசர் உங்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது. உங்களுக்கு உண்டானதை தான் நீங்கள் செய்யணும். அதனால் மந்திரங்கள் தனது சக்தியை இழந்தது. அதனால் அந்த மந்திரங்களுக்கெல்லாம் உண்டான தேவதை பரமேஸ்வரனிடம் சென்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

👉தெய்வாதீனம் ஜகத் சர்வம்

மந்திராதீனம்ச தெய்வதம்.

என்ன அர்த்தம்னா, எல்லா இடங்களிலும் தெய்வ சக்தி இருக்கிறது, அந்த தெய்வ சக்தியை அழைத்து வரக் கூடிய ஆற்றல் மந்திரத்திற்கு உள்ளது. அந்த சக்தி இழந்த போது தான் இவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

👉அப்போ சொல்றாராம் இந்த இடத்துக்கு போய் தபஸ் செய்யுங்கள். இங்கே வந்து உங்களுக்கு அனுக்கிரகம் செய்கிறேன். அப்போ துர்வாசர் வழி காண்பிக்க எல்லோரும் வந்து சேருமிடம் வேத்ர வனம்னு பிரம்பு மரங்கள் எல்லாம் ஸ்தல விருக்ஷமாக இருக்கக்கூடிய இடத்தில், கங்கை எப்படி ஓடுகிறதோ அதுபோல இங்கு காவிரி உத்தரவாஹினியாக ஓட, அதற்குப் பக்கத்தில் ரிஷப தேவரால் தனது கொம்பினால் கிளற அந்த பூமியில் இருந்து சிரிங்கி தீர்த்தம் வெளிவர, அதற்கு அருகாமையில் ஆசிரமம் வைத்துக்கொண்டு ரிஷிகள் அதற்கு பக்கத்தில் மந்திரங்கள் இவாளெல்லாம் சுவாமியை பூஜை செய்ய சுவாமி அந்த இடத்தில் பூமியிலிருந்து முளைத்து எழுந்த ஜோதியாக இவர்களுக்கு எல்லாம் அனுக்கிரகம் பண்ணக்கூடிய ரூபமாக திருக்கோடீஸ்வரராக எழுந்தருளி தரிசனம் கொடுத்த அதி அற்புதமான ஒரு க்ஷேத்ரம்.

மூன்று கோடி சிவாலயங்களை தரிசனம் செய்த பலன் இந்த திவ்ய க்ஷேத்ரத்திற்கு வந்தால் உண்டு. இங்கு சிவாலயம் உண்டு விஷ்ணு ஆலயம் கிடையாது. அம்பாளே விஷ்ணு ரூபத்தில். சிவாலயம் மட்டும் உள்ள சுடுகாடு இல்லாத ஒரு ஊர். மாத்ருஹத்தி பிரம்மஹத்தி குருஹத்தி சாயாஹத்தி இதெல்லாம் நிவர்த்தி பண்ற ஒரே க்ஷேத்ரம்.

பரசுராமருக்கு மாத்ருஹத்தி

ராமருக்கு பிரம்மஹத்தி

பலராமனுக்கு பிரலம்பாசுரனைக் கொன்ற தோஷ நிவர்த்தி,

மஹாகாளிக்கு ஏற்பட்ட தோஷநிவர்த்தி வீரபத்திரருக்கு ஏற்பட்ட தோஷ நிவர்த்தி என்று சொல்லிக் கொண்டே போகலாம்

🪷ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

👉இத்தல விநாயகர் கரையேற்று விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவர் ஐந்து நிலை ராஜகோபுரத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் கரையேற்று விநாயகர், கற்சிலை நடராஜர், சப்தரிஷிகள், அகத்தியர், சித்திரகுப்தர், யமன் முதலிய சன்னிதிகள் உள்ளன.

செம்பியன்மாதேவியாரின் ஆனைப்படி செங்கற்களால் ஆன கோயில் இடிக்கப்பட்டு கருங்கற்களால் திரும்பக் கட்டப்பட்டது. அதற்குப் பிறகு வழிவழியாக நாட்டை ஆண்ட மன்னர்களால் இக்கோயிலின் மற்றப்பகுதிகள் பல்வேறுகால கட்டத்தில் கட்டப்பட்டன.

🪷 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஜென்ம பாவ விமோசனம்

எம பயம் நீங்குதல்

சனி தோஷ நிவர்த்தி

சாப நிவர்த்தி

🪷 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் சித்ரா பௌர்ணமி

திருக்கல்யாண உற்சவம்

கார்த்திகை லட்சதீபத் திருவிழா

சனிப்பெயர்ச்சி

மற்றும் ஆடிப்பூரம் நவராத்திரி கார்த்திகை சிவராத்திரி பிரதோஷம் சிறப்பு.

🪷 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மூன்று கோடி தேவர்கள் மற்றும் ரிஷிகள்

மூன்று கோடி மந்திர தேவதைகள்

துர்வாசர் அகஸ்தியர்

ராமர் பரசுராமர் பலராமர் காளி எமதர்மராஜன் சித்திரகுப்தன் செம்பியன் மாதேவி பாஸ்கரராயர் அப்பர் சம்பந்தர் சுந்தரர் சேக்கிழார் முதலியோர்

🪷அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கும்பகோணம் கதிராமங்கலம் சாலையில் பெரிய கோவில் என்றால் தெரியும். &

மாயவரம் குத்தாலம் கதிராமங்கலமும் வரலாம்.

3 KM 👉 கஞ்சனூர்

6 KM 👉 திருமங்கலக்குடி

6 KM 👉 சூரியனார் கோவில்

8AM – 12NOON, 4PM – 8PM

91595 14727 தியாகராஜ குருக்கள்

🪷 கோவில் தேவாரப் பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இன்றுநன்று நாளைநன்

றென்றுநின்ற இச்சையால்

பொன்றுகின்ற வாழ்க்கையைப்

போகவிட்டுப் போதுமின்

மின்தயங்கு சோதியான்

வெண்மதி விரிபுனல்

கொன்றைதுன்று சென்னியான்

கோடிகாவு சேர்மினே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *