திருஇடைச்சுரம் திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர்
மூலவர் : ஞானபுரீஸ்வரர் இடைச்சுரநாதர்
உற்சவர் : சந்திரசேகர்
அம்பாள் : இமயமடக்கொடி, கோப ரத்னாம்பிகை,
ஸ்தல விருக்ஷம் : வில்வம்
தீர்த்தம் : மதுரா தீ,
ஆகமம் : சிவாகமம்,
பாடல்: சம்பந்தர், சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம் தொண்டை நாட்டு ஸ்தலம் 27
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவன் மரகத மேனியுடன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.
தீபாராதனையின் போது லிங்கத்தில் ஜோதி தெரிவது சிறப்பு. ஜோதி ரூபமாக சுவாமியை தரிசித்தால், தீய குணங்கள் மறையும், வாழ்க்கை பிரகாசம் அடையும் என்பது நம்பிக்கை. சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் சுவாமியை அழகு மிகுந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.
இத்தலத்து தக்ஷிணாமூர்த்தி காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது பக்கம் திரும்பி படுத்த கோலத்தில் வித்யாசமாக இருக்கிறார். தக்ஷிணாமூர்த்தியை அவரது சீடர் சனத்குமாரர் வழிபட்டு இருக்கிறார்.
இடைச்சுர நாதரை கௌதமர், பிரிங்கி மகரிஷி ஆகியோர் வணங்கி சென்றுள்ளனர். மூலவர் மரகத லிங்கமாக கிழக்கு திசை நோக்கி பளபளப்புடன் இருக்கிறார். பிரதான வாயில் தெற்கு பக்கம் இருக்கிறது.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பல்லாண்டுகளுக்கு முன்பு வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று மட்டும் சரிவர பால் தரவில்லை. சந்தேகப்பட்ட இடையன் அப்பசுவை கண்காணித்த போது ஒரு புதருக்குள் சென்று பால் சொரிவதைக் கண்டான்.
இவ்விஷயத்தை அவன் ஊர் மக்களிடம் சொல்ல, அவர்கள் புதரை விலக்கிப் பார்த்தபோது சிவன் சுயம்பு மரகத லிங்கமாக இருந்ததை கண்டனர். இவ்விடத்தில் கோவில் கட்டி வழிபட்டனர்.
அம்பிகையே பசு வடிவில் ஞானம் தரும் பாலை அபிஷேகித்து பூஜை செய்த சிவன் என்பதால், இவரை ஞானபுரீஸ்வரர் என்றும், அம்பாளை கோவர்த்தனாம்பிகை (கோ பசு) என்றும் அழைக்கின்றனர். இவரிடம் வேண்டி கொண்டால் கல்வி ஞானம் பெறலாம்.
அம்பாள் அமைப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பொதுவாக அம்பாள் தன் பாதங்களை நேராக, ஒன்றோடு ஒன்று நேராக வைத்து தான் காட்சி தருவாள். ஆனால் இங்கு தன் இடது காலை சற்று முன் வைத்து, வலது காலை பின்னே வைத்த படி (நடந்து செல்வதற்கு தயாராகும் நிலையில்) காட்சி.
இந்த அமைப்பு வித்தியாசமானதாகும்.
சிவன் இடையன் வடிவில் ஞான சம்பந்தரின் களைப்பை போக்க கிளம்பிய போது அம்பாளும் அவருடன் கிளம்பினாள். அவரோ அம்பாளை தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்தார். அம்பாள் சினத்துடன் காரணம் கேட்டாள்.
சம்பந்தன் நீ கொடுத்த ஞானப் பாலை குடித்தவன். தாயை தெரியாத குழந்தை, உலகில் இருக்க முடியாது. எந்த குழந்தையும் தன் தாயை எளிதில் அடையாளம் கண்டுவிடும். நீ வந்தால் சம்பந்தன் எளிதில் நம்மை தெரிந்து கொண்டு விடுவான். அதனால் நீ இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.
இதனால் தான் அம்பாள் இந்த கோலத்தில் நிற்கிறார். காலில் ஊனம் உள்ளவர்கள் இவளிடம் வேண்டிக் கொண்டால் மனதில் அமைதி உண்டாகும்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நால்வரில் ஒருவரான ஞானசம்பந்தர் சிவ தல யாத்திரையின் போது இவ்வழியாக சென்று கொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததால் பசி. சூரியன் உச்சி வானில் ஏற ஏற வெயிலும் கூடியது. களைப்படைந்த சம்பந்தர் ஓய்வெடுக்க ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார்.
அப்போது அங்கு கையில் சிறு தடியுடன் கோவணம் கட்டியபடி மாடு மேய்க்கும் இடையன் ஒருவன் வந்தான். கையில் தயிர் கணையம் வைத்திருந்த அவன், சம்பந்தர் பசியோடு இருந்தது அறிந்து தயிரை பருக கொடுத்தான்.
களைப்பு நீங்கிய சம்பந்தரிடம், நீங்கள் யார் என்று இடையன் கேட்க, அவர் தனது சிவ தல யாத்திரையை பற்றி கூறினார். அவரிடம் இதே வனத்திலும் ஒரு சிவன் இருப்பதாக கூறிய இடையன், அங்கு வந்து பாடல் பாடி தரிசனம் செய்யும்படி கட்டாயப்படுத்தினான். இடையன் மூலமாக பசியாறிய சம்பந்தரால் அவனது சொல்லை தட்ட முடியவில்லை.
இடையனாக இருந்தாலும், அழகு மிகுந்தவராக இருந்ததை கண்டார் சம்பந்தர் மனதில் சந்தேகம் கொண்டாலும், “எல்லாம் சிவன் சித்தம்” என்றெண்ணிஅவனை பின் தொடர்ந்தார். வழியில் ஒரு குளக்கரையில் நின்ற இடையன், சம்பந்தரை பார்த்து புன்னகைத்து விட்டு மறைந்து விட்டார். திகைத்த சம்பந்தர், சிவனை வேண்டினார்.
அவருக்கு காட்சி தந்த சிவன், இடையன் வடிவில் அருள் புரிந்ததை உணர்த்தினார். இடையனாக வந்து இடையிலேயே விட்டு விட்டு சென்றதால் சிவனை, “இடைச்சுர நாதா” என்று வணங்கி பதிகம் பாடினார். சிவன் மரகத மேனியுடன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். இடைச்சுரநாதர் என்ற பெயரும் பெற்றார்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மக்கள் வழக்கில் தற்போது திருவடிசூலம்.
கருவறை அகழி அமைப்புடையது.
பிரகாரத்தில் பிரம்மாண்டேஸ்வரர் சன்னதி உள்ளது.
கோவிலில் நால்வர் பிரதிஷ்டை உள்ளது.
மலைகள் சூழ்ந்த இயற்கை சூழலில் கோவில் அமைந்துள்ளது.
பிரகாரத்தில் வில்வம் வேம்பு ஆலமரம் ஆகிய மூன்று மரங்கள் இணைந்திருக்கிறது. சிவன் அம்பாள் விநாயகர் ஆகிய மூவரும் இம்மரத்தின் வடிவில் அருளுகின்றனர் என்பதால் இங்கு வேண்டிக் கொண்டால் குடும்ப ஒற்றுமை நிலைக்கும், பிரிந்த குடும்பங்கள் கூடும் என நம்புகின்றனர்.
சிவன் மறைந்த குளம் “காட்சி குளம்” என தற்போதும் உள்ளது.
ஸ்தல விநாயகர் வரசித்தி விநாயகர்.
கோவிலில் பிரம்மாண்டேஸ்வரருக்கும் பிரம்மாண்டேஸ்வரிக்கும் தனி தனி சந்நிதி உள்ளது.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கல்வி மற்றும் ஞானம்
கால் மற்றும் உடல் உபாதைகள் நீங்க
திருமண தடை நீங்க
குழந்தை பேறு
முகப் பொலிவு
குடும்ப ஒற்றுமை
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சித்ரா பௌர்ணமி,
பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம்,
லட்சதீப திருவிழா ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு உற்சவம். மஹாசிவராத்திரி திருக்கார்த்திகை, பிரதோஷம்
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அம்பாள், அப்பர், சேக்கிழார், சனத் குமாரர், கெளதம ரிஷி, பிருங்கி ரிஷி ஆகியோர்.
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
செங்கல்பட்டு திருப்போரூர் சாலையில் திருவடிசூலம் பேருந்து நிறுத்தம் 1KM உள்ளே
திருக்கழுக்குன்றம் பாதையில் சென்றால் திருப்போரூர் பாதை
8.5 KM FROM செங்கல்பட்டு ரயில் நிலையம்.
7AM – 11AM, 4PM – 6.30PM
99437 74950 94444 29775
சங்கர் குருக்கள்
63813 37203 கோபி குருக்கள்
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வரிவள ரவிரொளி யரவரை தாழ
வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்
கரிவளர் தருகழல் கால்வல னேந்திக்
கனலெரி யாடுவர் காடரங் காக
விரிவளர் தருபொழில் இளமயில் ஆல
வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்
எரிவள ரினமணி புனமணி சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே 1
ஞானசம்பந்தர்


Leave a Reply