சேய்ஞலூர் சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர்
மூலவர் : சத்தியகிரீஸ்வரர்
அம்பாள் : சகிதேவியம்மை
ஸ்தல விருக்ஷம் : அத்தி
தீர்த்தம் : மண்ணியாறு சத்திய புஷ்கரணி
புராணப் பெயர் : சேய்ஞலூர்
ஊர் : சேங்கனூர்
பாடல் : சம்பந்தர்,
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி வடகரை ஸ்தலம் 41.
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அனைத்து சிவாலயங்களிலும் அருள்பாலிக்கும் சண்டிகேஸ்வரர் அவதார தலம்.
மஹா மண்டபத்தில் தட்டினால் ஒலி கேட்கும் பைரவர் சன்னதி உள்ளது.
பக்தி எப்படி செய்யணும் என்பதற்கு உதாரணம் இந்த சிவாலயம்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
63 நாயன்மார்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் இவர்.
இத்தலத்தில் இவர் வேறு எங்கும் காணாத நிலையில் அர்த்தநாரி திருக்கோலத்தில் உள்ளார். அருகில் உள்ள திருவாய்பாடி இவரது முக்தி தலமாக போற்றப்படுகிறது.
சிவன் பார்வதி காட்சி கொடுத்ததால் சண்டேஸ்வரரே பிறை சடை குண்டலம் கங்கையுடன் காட்சி தருகிறார்.
சிபிச் சக்கரவர்த்தி ஹரிச்சந்திரன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். அருணகிரிநாதர் திருப்புகழில் முருகனை பாடியுள்ளார். சேக்கிழார் பெரிய புராணத்தில் இத்தல மஹிமையை கூறியுள்ளார். சோழர்களின் முக்கிய ஐந்து நகரங்களுள் இதுவும் ஒன்று. வைணவத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு உரை எழுதிய பெரியவாச்சானும் பிள்ளை அவதார ஸ்தலம் இது. எதிரே இவருக்கு கோவில் உள்ளது.
முருகன் வழிபட்ட ஸ்தலம்
பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாததால் பிரம்மனை சிறையில் அடைத்தார் முருகன். இதனால் பிரணவத்தின் பொருள் கூறும் படி சிவன் கேட்டார். அதற்கு சீடனாக கேட்டால்தான் கூறுவேன் என்றார் முருகன். இதனால் தந்தை சிஷ்யனாகவும் மகன் குருவாகவும் இருக்கும்படியான விபரீதம் ஏற்பட்டது. எனவே முருகனுக்கு சிவதுரோக தோஷம் ஏற்பட்டது. இதைப் போக்க முருகன் இத்தலம் வந்து தீர்த்தம் உண்டாக்கி தினமும் நீராடி சிவனை வழிபட்டு தன் தோஷம் நீங்கினார். ஒருமுறை முருகன் சூரபத்னை அழிக்க வரும்போது இத்தலத்தில் தங்கி சிவ பூஜை செய்து, ருத்ர பாசுபத படையை பெற்றார். அப்பொழுது தேவதச்சன் இத்தலத்தை ஒரு நகரமாக ஆக்கினான். இதனால் இத்தலம் குமாரபுரம் என்றும், முருகன் வழிபட்டதால் சேய் நல் ஊர், சேய்ஞலூர் என்றும் பெயர் பெற்றது. முருகனுக்கு பெரிய தனி சன்னதி உள்ளது.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒரு காலத்தில் வாயுவுக்கும் ஆதிசேஷனுக்கும் பலப்பரிட்சை ஏற்பட்டது. ஆதிசேஷன் மேருமலையை இறுகிப்பிடிக்க பெருங்காற்றால் மலையை அசைக்க முயன்றான் வாயு. இதில் ஒரு சிறு பகுதி இத்தலத்தில் விழுந்தது. இதனால் இத்தலம் சத்யகிரி எனப்பட்டது. முருகன் பூஜித்ததால் சேய்ஞலூர் என்ற பெயரும் உண்டு.
எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவர் தன் இளம் வயதில் அனைத்தும் கற்றார். ஏழாவது வயதில் குல முறைப்படி உபநயனம் நடந்தது. சிவனே அனைத்தும் என நினைத்து அதன்படி வாழ்ந்து வந்தார். ஒருநாள் கன்றுக்குட்டி தன்னை மேய்க்கும் இடையனை முட்ட பாய்ந்தது. உடனே அவன் கம்பால் அடித்தான். இதை கண்ட விசாரசருமன் தானே அப்பசுக்களை மேய்த்தான். தாயன்புடன் இவன் மேய்த்ததால் முன்னை விட அதிக பால் கொடுத்தது. விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால், மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் ஆத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான். அதற்கு பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்தான். இருந்தாலும் பசுவின் சொந்தக்காரருக்கு சரியான அளவு பால் கிடைத்து வந்தது. விசாரசருமரின் இந்த செயலை பார்த்த சிலர், வேள்விக்கு உபயோகப்படுத்தும் பாலை வீணாக்குவதாக கூறினர்.
இவனது தந்தையும் இதை கேள்விப்பட்டு, மறைந்திருந்து நடப்பதை பார்த்தார். இதையெல்லாம் அறியாத விசாரசருமன் எப்போதும் போல் நீராடி விட்டு தன் பூஜைகளை தொடர்ந்தான். பசுவின் பாலால் அபிஷேகமும் செய்தான். இதைப்பார்த்த தந்தை அவனை அடித்ததுடன், பால்குடங்களை தட்டி விட்டார். சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன், பூஜைக்கு இடையூறு செய்தவரை ஒரு கோலால் தாக்க, அதுவே மழுவாக மாறி கால்களை வெட்டியது. கால்கள் வெட்டப்பெற்றவர் தன் தந்தை என்பதை அறியாத விசாரசருமன் மீண்டும் சிவபூஜையில் ஆழ்ந்தார். இதைக்கண்ட சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து,”என் மீது கொண்ட பக்தியால் தந்தையின் கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தையாவேன்,”என கூறி தன் கழுத்திலிருந்த கொன்றை மாலையை விசாரசருமனுக்கு சூட்டி “சண்டிகேஸ்வரர்’ ஆக்கினார்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மேருமலையின் ஒரு சிறு பகுதி விழுந்த தலமானதால், கோயில் சிறு மலையில் அமைந்துள்ளது போன்ற தோற்றத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோச்செங்கண்ணன் கட்டிய மாடக்கோவில்களில் இதுவும் ஒன்று. மேலே ஒரு பிரகாரம் கீழே ஒரு பிரகாரம் என இரண்டு பிரகாரங்கள் உள்ளன. மேலே மூலஸ்தானம் அர்த்தமண்டபம் மஹாமண்டபம் உள்ளது. மஹாமண்டபத்தில் நடராஜர், தட்டினால் வெங்கல ஒலி கேட்கும் பைரவர், நால்வர் சன்னதிகள் உள்ளன. பிரகாரத்தில் விநாயகர் சுப்பிரமணியன் கஜலட்சுமி சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பதவி மற்றும் பட்டங்கள் பெற
பிதுர் தோஷம் மற்றும் குடும்ப சிக்கல்கள் நீங்க
மழலை பாக்கியம் பெற
நீண்டநாள் உடல்உபாதைகள் தீர
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சண்டேஸ்வர நாயனார் அவதார தினம் – தை மாதம் உத்திரம் நட்சத்திரம்
தைப்பூச திருவிழா
மஹா சிவராத்திரி திருக்கார்த்திகை
திருவாதிரை ஆடிப்பூரம் பிரதோஷம் சிறப்பு
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முருகப்பெருமான் சிபிச்சக்கரவர்த்தி ஹரிச்சந்திரன் சண்டேஸ்வரர் நம்பியாண்டார் நம்பி சம்பந்தர் அப்பர் சேக்கிழார் முதலியோர்.
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கும்பகோணம் திருப்பனந்தாள் சாலையில் சேங்கனூர் கூட் ரோடு. அங்குள்ள நுழைவு வாயில் வலது புறம் திரும்பவும்.
9AM – 10.30AM, 5.30PM – 7.30PM
93459 82373 ராமகிருஷ்ணன் சிவாச்சாரியார்.
ஹரிஹரன் குருக்கள்
குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல்மேவி யருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply