திருவாய்ப்பாடி திருஆப்பாடி பாலுகந்தநாதர்
மூலவர் : பாலுகந்த நாதர்
அம்பாள் : பெரியநாயகி
ஸ்தல விருக்ஷம் : அத்தி
தீர்த்தம் : க்ஷீரகுண்டம் / மண்ணியாரு
பாடல் : அப்பர், சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு வடகரை ஸ்தலம் 40
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவாலயம் சென்றால் சிவ தரிசனத்துக்குப் பின் கட்டாயம் சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும். சண்டிகேஸ்வரர் சந்நிதியில் மெதுவாக கைகளைத் தட்டி ஓம் நமசிவாய என்று சொல்லி, ‘சிவ தரிசனத்தின் பலனை எனக்கு அருள்வாய்’ என்று வேண்டிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் சிவனை தரிசித்த பலனே நமக்குக் கிடைக்கும். இப்படி சிவாலயத்தின் பொறுப்பாளராக இருந்து அருளும் சண்டிகேஸ்வரர் இந்த பூவுலகில் அவதரித்தபோது ஈசனின் தரிசனம் பெற்ற தலம் ஒன்று உண்டு. இங்குள்ள சிவனை தரிசனம் செய்தால் 1008 சிவாலயங்களை தரிசனம் செய்த பலன். மக்கள் வழக்கில் ‘திருவாய்ப்பாடி’ என்று வழங்குகிறது. சண்டேசுவரர்
வழிபட்டு முக்தி பெற்றத் தலம்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
63 நாயன்மார்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் இவர். அருகிலுள்ள சேய்ஞலூர் இவரது அவதார தலமாகவும், திருவாய்ப்பாடி லிங்கம் அமைத்து வழிபட்டு, முக்தி பெற்ற தலமாகவும் போற்றப்படுகிறது. மூலஸ்தானத்தின் அருகிலேயே சண்டிகேஸ்வரர் அருள்பாலிப்பது சிறப்பு.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவர் தன் இளம் வயதில் அனைத்தும் கற்றார். ஏழாவது வயதில் குல முறைப்படி உபநயனம் நடந்தது. சிவனே அனைத்தும் என நினைத்து அதன்படி வாழ்ந்து வந்தார்.ஒருநாள் கன்றுக்குட்டி தன்னை மேய்க்கும் இடையனை முட்ட பாய்ந்தது. உடனே அவன் கம்பால் அடித்தான். இதைக்கண்ட விசாரசருமன் தானே அப்பசுக்களை மேய்த்தான். தாயன்புடன் இவன் மேய்த்ததால் முன்னை விட அதிக பால் கொடுத்தது. விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால், மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் ஆத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான். அதற்கு பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்தான். இருந்தாலும் பசுவின் சொந்தக்காரருக்கு சரியான அளவு பால் கிடைத்து வந்தது. விசாரசருமரின் இந்த செயலை பார்த்த சிலர், வேள்விக்கு உபயோகப்படுத்தும் பாலை வீணாக்குவதாக கூறினர்.
இவனது தந்தையும் இதை கேள்விப்பட்டு, மறைந்திருந்து நடப்பதை பார்த்தார். இதையெல்லாம் அறியாத விசாரசருமன் எப்போதும் போல் நீராடி விட்டு தன் பூஜைகளை தொடர்ந்தான். பசுவின் பாலால் அபிஷேகமும் செய்தான். இதைப்பார்த்த தந்தை அவனை அடித்ததுடன்,பால்குடங்களையும் தட்டி விட்டார். சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன், பூஜைக்கு இடையூறு செய்தவரை ஒரு கோலால் தாக்க, அதுவே மழுவாக மாறி கால்களை வெட்டியது. கால்கள் வெட்டப்பெற்றவர் தன் தந்தை என்பதை அறியாத விசாரசருமன் மீண்டும் சிவபூஜையில் ஆழ்ந்தார். இதைக்கண்ட சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து,”என் மீது கொண்ட பக்தியால் தந்தையின் கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தையாவேன்,”என கூறி தன் கழுத்திலிருந்த கொன்றை மாலையை விசாரசருமனுக்கு சூட்டி “சண்டிகேஸ்வரர்’ ஆக்கினார். இறைவன் விசாரசருமன் அபிஷேகம் செய்த பாலை விரும்பி ஏற்றதால் “பாலுகந்தநாதர்’ ஆனார். விசாரசருமன் “ஆ'(பசு) மேய்த்த தலமாதலால், “ஆப்பாடி’ ஆனது.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முன் மண்டபம் வவ்வால் நெற்றி அமைப்புள்ளது. வலப்பக்கத்தில் அம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. கோயிலின் வடகிழக்கு மூலையில் பஞ்சமூர்த்தி மண்டபமும், அழகிய நந்தவனமும் அமைந்துள்ளது. மேலும் பலிபீடமும் நந்தியும் உள்ளன. விநாயகர் முருகன், தக்ஷிணாமூர்த்தி, சூரியன், சனிபகவான், நடராஜர் சபை, பைரவர் சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பதவி உயர்வு, பணி இடமாற்றம்
குடும்ப உறவுகள் மேம்பட
வினைகள் மற்றும் சங்கடங்கள் தீர இங்கு பிரார்த்தனை.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவராத்திரி அமாவாசையில் சண்டேஸ்வரர் பிரமோற்சவம் சிறப்பு
மஹா சிவராத்திரி,
மார்கழி திருவாதிரை,
திருக்கார்த்திகை,
அன்னாபிஷேகம் மற்றும் பிரதோஷம் கொண்டாடப்படுகிறது.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சண்டேசுவரர், அப்பர் சேக்கிழார்
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கும்பகோணம் திருப்பனந்தாள் சாலையில் சேங்கனூர் தாண்டி
சேங்கனூர் திருப்பனந்தாள் இரண்டும் 2.7KM only.
9AM – 12NOON, 5PM – 7PM
94421 67104 பால கந்த நாத குருக்கள். கோவில் அருகிலேயே இவர் வீடு. குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கடலகம் ஏழி னோடும்
புவனமுங் கலந்த விண்ணும்
உடலகத் துயிரும் பாரும்
ஒள்ளழ லாகி நின்று
தடமலர்க் கந்த மாலை
தண்மதி பகலு மாகி
மடலவிழ் கொன்றை சூடி
மன்னும்ஆப் பாடி யாரே. 1
திருநாவுக்கரசர்


Leave a Reply