திருப்பனந்தாள் செஞ்சடையப்பர் அருணஜடேஸ்வரர்
மூலவர் : செஞ்சடையப்பர் அருணஜடேஸ்வரர் தாலவனேஸ்வரர்
அம்பாள் : பெரியநாயகி பிருஹன்நாயகி தாலவனேஸ்வரி
ஸ்தல விருக்ஷம் : பனைமரம்
தீர்த்தம் : பிரம்ம ஐராவத தாடகை விஷ்ணு சூரிய சந்திர ஆதிசேஷ அரித்வஜ, நாககன்னிகை, தர்மசேன மண்ணியாரு கூப + மேலும் சில தீர்த்தங்கள்.
பாடல் : அப்பர் சம்பந்தர், சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம் சோழ நாட்டு காவிரி வடகரை ஸ்தலம் 39
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
•சுவாமி விமானம் பிரணவவடிவில் மூன்று ஸ்தூபிகளுடன் விளங்குகிறது.
•16கால் மண்டபத்தில் தாடகைக்காகப் பெருமான் வளைந்து கொடுத்ததும், குங்குலியக்கலயனார் பெருமானின் வளைவை நிமிர்த்தியதுமாகிய சிற்பங்கள் உள்ளன.
•இத்தலத்தில் தான் குமரகுருபர சுவாமிகள் நிறுவியுள்ள ஸ்ரீ காசிமடம் உள்ளது. •திருப்பனந்தாளில் வாழ்ந்த நக்கன்தரணி என்பவனால் இக்கோயில் கருங்கல்லால் கட்டப்பட்டது.
•இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் மேற்கு கோபுரத்தின் தென்பால், குங்குலியக்கலய நாயனாரின் கோயில் உள்ளது. மனைவியின் பெயர் நீலாயி என்று கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டில் இத்தலம் திருத்தாடகை ஈச்சரம் என்றும் இறைவன் பெயர் தாடகேச்சரத்து மகாதேவர் என்றும் குறிக்கப்படுகிறது.
•இவ்வூரைச் சுற்றிலும் பனை மரங்கள் நிறைந்து உள்ளதால் இவ்வூருக்குத் திருப்பனந்தாள் என்ற பெயர் ஏற்பட்டது. திரு+பனை+தாள்= (அழகிய பனை மரத்தின் அடிப்பகுதி.) இவ்வூரில் பனைமரத்தின் கீழே சிவபெருமான் எழுந்தருளியதால் இப்பெயர் பெற்றது. வடமொழியில் தாலவனம் என்று சிறப்பிக்கப்படுகிறது.
• சித்திரை மாதம் சில நாட்கள் மூலவர் மீது சூரிய ஒளி கதிர்கள் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இங்கு அம்பாள் சிவபூஜை செய்து ஞானோபதேசம் பெற்ற சிறப்புடையது.
தாழை மலரைச் சான்று காட்டி சிவபெருமானின் திருமுடியைக் கண்டதாகப் பொய் கூறிய பிரமனுக்கு அதனாலேற்பட்ட பாதகத்தைப் போக்கியது.
இந்திரனுக்கு விருத்திராசுரனைக் கொன்ற பாதகமும், கெளதமர் மனைவியைக் களவாற் சேர்ந்த தோஷமும் போக்கிய அருள் பாலித்தது.
பிருந்தையைப் புணர்ந்த திருமாலுக்கு அருள் செய்து.
தக்கனுடன் கூடிச் சிவத்துரோகத்தில் ஈடுபட்ட சூரியனுக்கு அத்துரோகத்தால் உண்டான பாவத்தைத் தீர்த்தது.
குருபத்தினியைக் கூடின சந்திரனுக்கு மாபாதகத்தை நீக்கியது.
அகத்தியரால் பூசித்து வழிபடப் பெற்றது.
ஆதிசேடனால் பூசிக்கப் பெற்றது.
தாடகை சிவ பூசையின் போது அணிவித்த மாலையை ஏற்றுக் கொள்ளத் திருமுடிசாய்த்தருளிய இறைவனைக் குங்குலியக்கலய நாயனார் அன்புக் கயிற்றால் இழுத்து நிமிர்த்தி வழிபட்டது.
இந்திரனிடம் சாபம் பெற்ற ஐராவதம் நாரதரின் அறிவுரையில் தாலவனநாதரை வணங்கித் தன் சாபத்தைப் போக்கிக் கொண்டது. தன் பெயரினால் மேற்பால் ஓர் தடாகமும் சிவலிங்கப் பிரதிஷ்டையும் செய்து பூஜித்து தன்னுலகடைந்தது (ஐராவது ஆனை தங்கி இறைவனை வணங்கிய இடம் “ஆனைகோயில்” என்று தற்போது வழங்கப் படுகிறது. இது செஞ்சடையப்பர் கோயிலுக்கு மேற்கே மண்ணியாற்றின் கரையில் உள்ளது.)
கீழ்பெரும்பள்ளம் திருநாகேஸ்வரம் காளகஸ்தி ஆகியவை ஆண் நாகம் வழிபாடு செய்த ஸ்தலமாகும். திருப்பனந்தாள் பெண் நாகம் (நாககன்னி) வழிபாடு செய்த ஸ்தலமாகும். வாசுகியின் பெண் சுமதி வழிபட்டு, இறைவன் அருளால் அரித்வஜனை மணந்து பேறு பெற்றாள்.
மேற்கூறிய ஒவ்வொருவரும் தத்தம் பெயரால் தீர்த்தங்கள் அமைத்து சிவலிங்கப் பிரதிஷ்டையும் செய்துள்ள பெருமை மிக்கது.
அத்தீர்த்தங்களில் அன்போடு மூழ்கியவர்களின் பாவப்பிணி மாய்த்துப் பெரும் பேறடையச் செய்வது இத்தலம்.
குங்கிலிய கலையனார் இவ்வூரில் தங்கி இருந்த பொழுது அவர் மகன் இறந்தான்.
விநாயகர் அசரீரியாக அருளியபடி நாயனார் அவ்வுடலைக் கொண்டு வந்து நாக கன்னிகை தீர்த்தத்தில் நனைக்க, மகனும் உயிர் பெற்று எழுந்தான். இவ்விநாயகர் இன்றும் பிணமீட்ட விநாயகர்’ என்ற திருநாமத்துடன் திரு வீதியின் வாயுமூலையில் எழுந்தருளியுள்ளார்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தாடகை மகப்பேறு விரும்பித் தவம் செய்த பொழுது பிரமதேவன் தோன்றி, ‘நீ தாலவனம் சென்று பூஜித்து வழிபட்டால் விரும்பிய பேற்றைப் பெறுவாய்’ என்றார். தாடகையும் அவ்வாறே இத்தலத்திற்கு வந்து நியமம் தவறாது விதிப்படி, இறைவனைப் பூஜித்து வந்தாள். ஒரு நாள் பூஜை முடிவில் மாலையைச் சாத்த எழுந்த பொழுது அவளுடைய ஆடை நெகிழ்ந்தது . தாடகையும் ஆடையை இரு முழங்கைகளாலும் இடுக்கிக் கொண்டு அண்ணலே! யாது செய்வேன்; எவ்வாறாயினும் இம்மாலையை ஏற்று அடியேனை ஆதரித்தருள வேண்டும்’ என்று பிரார்த்தித்தாள். இறைவனும் தனது திருமுடி சாய்த்து மாலையினை ஏற்றுக் கொண்டனன். உடனே அவளுக்குப் பதினாறு கரங்கள் தோன்றின. அவளும் பெருமானது கருணையை வியந்து வணங்க, பெருமானும் இடபாரூடராய்க் காட்சி தந்தனன். அப்போது அவள் பணிந்து வணங்கி, மகப்பேற்றையும் அடைந்தாள்.
இத்தலத்தின் மீது மிகுந்த பற்று கொண்ட சோழ அரசனாகிய வீரசேனனென்பவன், இத்தலத்திறைவன் தாடகையின் அன்புக்காகத் திருமுடி சாய்ந்திருப்பதைக் கேள்வியுற்று இறைவன் திருமுடியை நிமிர்த்தி வழிபட எண்ணினான். யானை குதிரை முதலியவைகளைக் கட்டி இழுப்பித்தான், முயற்சி பயனளிக்கவில்லை கவலைக்கடலில் ஆழ்ந்தான். இச்செய்தி திருக்கடவூர் குங்குலியக்கலய நாயனாருக்கு எட்டியது. அவரும் இத்தலத்திற்கு வந்தார். தாமும் அத்திருப்பணியில் ஈடுபட விரும்பினார். யானைகளை அவிழ்க்கச் செய்து தம் கழுத்தில் அரிகண்டமும் இறைவர் கழுத்தில் மெல்லிய கயிறும் பூட்டி இழுத்தார். அரிகண்டம் கழுத்தை அறுக்கத் தொடங்கியது. உடனே பெருமான் தமது திருக்கரத்தைத் தோற்றி சிரசின் மீது வைத்தருள, அறுபட்ட சிரசும் பொருந்தியது. இறைவன் திருமுடியும் நிமிர்ந்தது. அது கண்ட அரசன் அன்புக் கயிற்றால் நாயனார் இழுத்து நிமிர்த்ததைக் கண்டான். வணங்கினான். தன்னுடைய முயற்சிக்குத்தலை நிமிராது, குங்குலியக்கலயனார் அன்புக்குத் தலை நிமிர்ந்த இறைவனின் செயல் கண்ட சோழ மன்னன் மனம் வருத்தமடைந்தாகவும், அதனால் செஞ்சடையப்பரை வழிபடுதலைத் தவிர்த்து, திருப்பனந்தாளின் மேற்கே ஒரு இடத்தில் இதே போன்ற ஒரு பெருஞ் சிவாலயத்தை எழுப்பி வழிபட்டதாகவும் ஒரு செவிவழிக் கதை வழங்கி வருகிறது. பிறகாலத்தில் ஏற்பட்ட மண்மாரியால் அச்சிவாலயம் அழிந்ததாகவும் கூறப்படுகிறது.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவில், மேற்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம், கிழக்கில் 5 நிலை ராஜகோபுரம், மூன்று பிரகாரமும் கொண்டது. சிவனும் அம்பாளும் கிழக்கு நோக்கி திருமண கோலத்தில் அருள் பாலிக்கின்றனர். வலம்வரும் போது சுப்பிரமணியர், சாக்சிநாதர், அறுபத்துமூவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை மற்றும் சப்தமாதர்கள் சன்னதிகள், குங்கிலியக் கலய நாயனார் மற்றும் பெண் நாகமான நாககன்னிக்குத் தனித்தனி சன்னதிகள் உள்ளன.
தருமபுரம் ஆதீனம் கோவில். இரண்டு ஆண் பனைகள் கோவில் பிரகாரத்தில் உள்ளன. ஆஸ்தான மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவர் உள்ளார்.
இக்கோயிலுக்கு நன்செய், புன் செய்யாக சுமார் ஆயிரம் ஏக்கர் நிலமும் இருக்கிறது.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
புத்திரப் பேறு
சர்வ தோஷ நிவர்த்தி (சர்ப்ப தோஷம்)
குடும்ப நலம் மற்றும் ஐஸ்வர்யம்
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சித்திரை மாதத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது.
மஹா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, கந்த ஷஷ்டி, ஆடிப்பூரம், நவராத்திரி முதலிய விழாக்களும் நடத்த படுகின்றன.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அம்பாள், பிரம்மன், திருமால், இந்திரன், ஐராவதம் அகத்தியர், சந்திரன், சூரியன், ஆதிசேஷன், நாககன்னிகை, தர்மசேனன், எக்ஞகுப்தன், தாடகை, குங்குலியக்கலய நாயனார், சங்குகன்னன், நாகுன்னன், அப்பர், சம்பந்தர், ஐயடிகள் காடவர் கோன், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் முதலியோர்
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கும்பகோணத்திலிருந்து: கும்பகோணத்திலிருந்து வடக்கே 18KM தொலைவில் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை அல்லது அணைக்கரை செல்லும் அனைத்து புறநகர் பேருந்துகளும் திருப்பனந்தாள் வழியாகவே செல்லும். மேலும், நகரப் பேருந்து எண் 27 (ஆடுதுறை வழியாக அணைக்கரை செல்லும் பேருந்து) மூலமாகவும் நீங்கள் இக்கோவிலை அடையலாம்.
7.30AM – 12NOON, 4PM – 8PM
94431 16322 8825555081
கல்யாணசுந்தரம் குருக்கள்
தலைமை அர்ச்சகர்
75981 60747 அருணா ஜடேச குருக்கள்
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கண்பொலி நெற்றியினான் திகழ்
கையிலொர் வெண்மழுவான்
பெண்புணர் கூறுடையான் மிகு
பீடுடை மால்விடையான்
விண்பொலி மாமதிசேர் தரு
செஞ்சடை வேதியனூர்
தண்பொழில் சூழ்பனந்தாள் திருத்
தாடகை யீச்சரமே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply