பந்தநல்லூர் பந்தணைநல்லூர் பசுபதீசுவரர்

🌼மூலவர் : பசுபதீஸ்வரர்

அம்பாள் : வேணுபுஜாம்பிகை காம்பணையதோளி

ஸ்தல விருக்ஷம் : சரக்கொன்றை

தீர்த்தம் : சூரிய தீர்த்தம்

பாடல் : அப்பர் சம்பந்தர், சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம் சோழநாட்டு வடகரை ஸ்தலம் 35.

🌼 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கம்பீலியைச் சேர்ந்த பூபதி சூடாமணி என்ற மன்னர் அவர் இங்குள்ள இறைவனை வழிபட்டு , கண் தெரியாத தனது மகனுக்கு பார்வையை பெற்றார். தன் மகனுக்கு ‘பசுபதி’ என்று பெயரிட்டு, இந்த கோவிலையும் புதுப்பித்தார். கோவிலின் குளத்திற்குச் செல்லும் ஒரு நுழைவாயில் ‘கம்பீலி மன்னன் துறை’ என்று அழைக்கப்படுகிறது.

சையகிரி ராஜ்ஜியத்தைச் சேர்ந்த அன்னபுரம் மிருதுஞ்சயன் என்ற மன்னன் பசுவைக் கொன்றதால் ஏற்பட்ட பாவங்களின் காரணமாக அவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் பல சிவன் கோவில்களுக்குச் சென்று இறுதியாக இந்த இடத்தை அடைந்தார். அவர் இந்தக் கோவிலின் புனிதக் குளத்தில் நீராடி, இறைவனை வழிபட்டு, அற்புதமாகக் குணமடைந்தார்.

காம்போஜ ராஜ்ஜியத்தைச் சேர்ந்த காந்தன் என்ற மன்னன் நோயால் அவதிப்பட்டு வந்தார். அதிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக இந்த இடத்திற்கு வருகை தந்தார். அவர் இங்கு 45 நாட்கள் (ஒரு மண்டலம்) தங்கி, தினமும் புனிதக் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டார். அதன் பிறகு அவர் தனது நோயிலிருந்து குணமடைந்ததாக நம்பப்படுகிறது.

துளுவ ராஜ்ஜியத்தைச் சேர்ந்த வீரதுரந்தரன் இங்கு இறைவனை வழிபட்டு, ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததாக நம்பப்படுகிறது.

🌼 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பசுவின் பதியாக வந்ததால் சிவபெருமான் பசுபதீஸ்வரர்.

ஸ்வாமியின் திருமணத்தை நவகிரகங்கள் நேர்கோட்டில் நின்று தரிசிப்பதால், அனைத்தும் அனுக்கிரஹ மூர்த்திகளாக விளங்குகின்றன.

நவகிரக தோஷம் உள்ளவர்கள் சுவாமி அம்பாள் நவகிரகத்தை சுற்றுவது நல்லது. நடராஜருக்கு இங்கு தனிசபை கிடையாது. மகாவிஷ்ணு தனி கோவிலில் ஆதிகேசவப் பெருமாளாக அருள் பாலிக்கிறார்.

🌼 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சிவனும் பார்வதியும் கைலாயத்தில் அமர்ந்திருந்த போது பார்வதிக்கு பந்து விளையாடும் ஆசை ஏற்பட்டது. சிவன் 4 வேதங்களையும் 4 பந்துகளாக மாற்றி பார்வதியிடம் கொடுக்கிறார். பார்வதியும் தொடர்ந்து விளையாடுகிறாள். இவள் விளையாடுவதால் சூரியன் மறையாமல் வெளிச்சம் தருகிறார். இருட்டே இல்லாமல் போனது. இதனால் மாலை வேளையில் முனிவர்கள் சந்தியா வந்தனம் செய்ய இயலாமல் போனது. அனைவரும் சூரியனிடம் சொல்ல, பார்வதியின் கோபத்திற்கு நான் ஆளாக மாட்டேன் என கூறி விடுகிறார்.

எனவே அனைவரும் சிவனிடம் சென்று முறையிடுகின்றனர். சிவன் பார்வதியிடம் செல்கிறார். இவர் வந்ததை பார்வதி கவனிக்கவில்லை. கோபம் கொண்ட சிவன் பார்வதியை பசுவாக சபிக்கிறார். வருந்திய பார்வதி சாப விமோசனம் வேண்டுகிறார்.

சிவன் பந்தை காலால் எத்த, அது பூமியில் சரக்கொன்ற மரத்தின் அடியில் விழுகிறது. இந்த மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கத்திற்கு பால் சொரிந்து அபிஷேகம் செய்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்கிறார். பந்து அணைந்த தலம் என்பதால் பந்தணைநல்லூர் ஆனது.

பார்வதியை பாதுகாக்க மஹாவிஷ்ணு இடையர் வடிவில் அப்பசுவை அழைத்துக் கொண்டு இத்தலம் வருகிறார். பகல் பொழுதில் பசுவை மேய விட்டு, மாலையில் அருகில் உள்ள கன்வ மகரிஷி ஆசிரமத்தில் பால் கொடுத்து வந்தார்.

ஒரு நாள் பசு புற்றில் இருந்த லிங்கத்தை பார்த்து அதன் மேல் பாலை சொரிந்து விடுகிறது. அன்று மாலை மஹரிஷிக்கு பால் இல்லை. இதற்கான காரணம் அறிய பசுவின் பின்னால் விஷ்ணு செல்கிறார். உற்றின் மீது பால் சொறிவதை கண்டவுடன் பசுவை அடிக்கிறார். பசு துள்ளி குதித்து புற்றின் மேல் காலை வைக்க, பசுவும் இடையனாக வந்த விஷ்ணுவும் சுய உருவம் பெறுகின்றனர்.

சாப நிவர்த்தி பெற்றவுடன் தன்னை திருமணம் செய்ய சிவனிடம் வேண்டுகிறார். அதற்கு சிவன் வடக்கு நோக்கி தவம் இருந்து என்னை வந்து சேர் என்கிறார். அதன்படி செய்து அம்மன் சிவனை திருமணம் செய்கிறார். சிவன் மூலஸ்தானத்தில் கல்யாண சுந்தரராக அருள் பாலிக்கிறார்.

இங்கு லிங்கத்தின் மீது பசுவின் குளம்பு, பந்து பட்ட அடையாளங்கள் உள்ளன.

இங்கு பார்வதிதேவி தவம் செய்த போது காளி தேவியும் ஐயனாரும் காவலாக நின்றதாக நம்பப்படுகிறது. அம்மன் சன்னதிக்கு வெளியே காளி ஐயனார் இரு சன்னதிகள் காணலாம். திருமணத்தை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததால் இங்கு உள்ள நவகிரகங்கள் நேர்கோட்டில் வைக்கப்பட்டுள்ளன.

🌼 ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கோவில் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்கள் உள்ளது. சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் வடக்கு நோக்கையும் தவக்கோலத்தில் உள்ளனர்.

கருவறை அகழி வடிவில் உள்ளது. நுழைவு வாயிலில் கோட்டை முனீஸ்வரர் காவல் தெய்வமாக அருள் பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் நவ லிங்கங்கள், விநாயகர்,முருகன், கஜலட்சுமி, அன்னபூரணி, சரஸ்வதி, சட்டைநாதர், 2சூரியன் 2 சந்திரன், தக்ஷிணாமூர்த்தி, நேர்க்கோட்டில் நவகிரகங்கள் உள்ளன. இங்கு விநாயகர் நிருத கணபதி என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார்.

சூரியன் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி 19,20,21 மூன்று நாட்களுக்கு லிங்கத்தின் மீது கதிர்களை வீசுவதால் சிவபெருமானை வழிபடுகிறார்.

இந்த லிங்கம் மணலால் செய்யப்பட்டிருப்பதால், இது எப்போதும் கவசம் சாத்தப்பட்டுள்ளது. அதன் மீதே அபிஷேகம்.

இங்கு சோழ மன்னர்கள் விஜயநகர வம்ச கல்வெட்டுகள் நிறைய உள்ளன.

கருவறையின் முதல் நுழைவாயில் திருநாவுக்கரசர் நுழைவாயில் என்றும், இரண்டாவது நுழைவாயில் திருஞானசம்பந்தர் நுழைவாயில் என்றும் அழைக்கப்படுகிறது.

🌼 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கண் பார்வை வரம்

திருமண தடை நீங்க

தோஷ நிவர்த்தி

மனநிலை பாதிப்பு

பயந்த சுபாவம்

கடனால் பாதிக்கப்பட்டவர்கள் பிரார்த்தனை

🌼 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மாசி மகம் & பங்குனி உத்திரம் சிறப்பு. சிவபெருமானுக்குரிய அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகிறது

🌼 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பார்வதி தேவி, மஹாவிஷ்ணு, பிரம்மா, காமதேனு, இந்திரன், சூரியன், கன்வ முனிவர், வாலி, அப்பர், சம்பந்தர், சேக்கிழார் முதலியோர்.

🌼அமைவிடம்,நேரம்,தொடர்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மாயவரம் திருப்பனந்தாள் வழித்தடத்தில் பந்தநல்லூர்.

குத்தாலம், கும்பகோணம் தொடங்கியும் வரலாம். நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.

குத்தாலம் 10KM

திருப்பனந்தாள் 10KM

7AM – 12AM, 5PM -8PM

98657 78045 சேகர் சிவாச்சாரியார்

96290 54173 சந்திரமௌலி சிவாச்சாரியார்

🌼 கோவில் தேவாரப் பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இடறினார் கூற்றைப் பொடிசெய்தார் மதிலை

யிவைசொல்லி யுலகெழுந் தேத்தக்

கடறினா ராவர் காற்றுளா ராவர்

காதலித் துறைதரு கோயில்

கொடிறனார் யாதுங் குறைவிலார் தாம்போய்க்

கோவணங் கொண்டுகூத் தாடும்

படிறனார் போலும் பந்தணை நல்லூர்

நின்றஎம் பசுபதி யாரே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *