(தென்) திருமுல்லைவாயில் முல்லைவனநாதர்
மூலவர் : முல்லைவனநாதர் மாசிலாமணீஸ்வரர், யூதிகா பரமேஸ்வரர்
அம்பாள் : அணிகொண்ட கோதையம்மை, ஸ்ரீ சத்யானந்த சௌந்தரி
ஸ்தல விருக்ஷம் : முல்லை
தீர்த்தம் : விஷ்ணு, சந்திர, பிரம்ம, கங்கை தீர்த்தங்கள்
பாடல் : சம்பந்தர் சுயம்பு
61 வது தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு & காவிரி வடகரை ஸ்தலம் 7
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இங்கு சிவன் மூன்றரை அடி உயரத்தில் சுயம்புவாக அருள் பாலிக்கிறார். இங்குள்ள லிங்கத்தில் வாளால் வெட்டப்பட்டுள்ள காய தழும்பை இன்றும் காணலாம். சோழர்களால் கட்டப்பட்ட கோவில்.
தற்போது சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ள இத்தலத்தின் வெக அருகில் கடற்கரை உள்ளது.
1300 வருடங்கள் பழமையான இக்கோவில் கிள்ளிவளவ சோழனால் கட்டப்பட்டது.
இது தென் திருமுல்லைவாயில், சென்னை அருகே இருப்பது வட திருமுல்லைவாயில். இரண்டும் மல்லிகை புதரில் இருந்து சிவபெருமான் தோன்றியதால் இப்பெயர். இக்கோயில் தருமபுரம் ஆதீனம் நிர்வாகத்தில் உள்ளது.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“பஞ்சாக்ஷர மந்திரம் ” “நமசிவாய” மற்றும் அதன் அர்த்தத்தை சிவபெருமானிடம் இருந்து அறிய பார்வதி தேவி இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. அவரது வழிபாட்டால் மகிழ்ந்த சிவபெருமான் உபதேசம் வழங்கினார்.
எனவே இங்குள்ள இறைவன் குருவாகவும், இறைவி சிஷ்யன் ஆகவும் கருதப்படுகிறார். இதன் காரணமாக “பள்ளி அறை” மற்றும் அதனுடன் தொடர்புடைய பூஜைகள் இல்லை.
இந்திரன் யுதிஷ்டிரன் மற்றும் கார்கோடகன் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. சந்திரன் சந்திர தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு தன்னுடைய நோயிலிருந்தும் சாபத்திலிருந்தும் விடுபட்டதாக நம்பப்படுகிறது.
முற்கால பாண்டிய நாட்டில் வாழ்ந்த அறிஞரும் வேத ஆசிரியருமான அசாவி பல யாகங்கள் செய்தார். அவர் மரணத்திற்குப் பிறகு, அவரது விருப்பப்படி, அவரது மூத்த மகன் வாமதேவன், பல சிவன் கோவில்களில் புனித நீரில் கரைப்பதற்காக ஒரு பாத்திரத்தில் எலும்புகளையும் சாம்பல்களையும் வைத்திருந்தார்.
இந்த இடத்தை அடைந்ததும் மார்கண்ட ரிஷியை அவருடைய ஆசிரமத்தில் சந்தித்தார். இந்த கோவிலின் விஷ்ணு தீர்த்தத்தில் அஸ்தியை கரைக்குமாறு அறிவுறுத்தினார். அவர் எலும்புகளை தண்ணீரில் போட்டபோது வைர கற்களாக மாறியது. பின்னர் அவர் தன் தந்தை முக்தி பெறுவதற்காக இங்கு அனைத்து இறுதி சடங்குகளையும் செய்தார்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கரிகால் வளவன் தாத்தாவான சோழ மன்னன் கிள்ளிவளவன் தோல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தான். அவரது மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவர் கடலிலும், கோயிலில் சந்திர தீர்த்தத்திலும் நீராடுவதற்காக இந்த இடத்திற்கு வந்தார். இந்த இடம் அவனது குதிரைகளின் கால்களில் சிக்கிய முல்லைச் செடிகளால் அடர்த்தியாக மூடப்பட்டிருந்தது. வழியை தெளிவுபடுத்துவதற்காக அரசர் தனது வாளால் செடிகளை வெட்ட தொடங்கினார்.
அங்கிருந்து ரத்தம் கசிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் புதர்களை அகற்றி, ரத்தம் தோய்ந்த, வெட்டுப்பட்ட சிவலிங்கத்தை கண்டு துக்கத்தில் துவண்டார். தன் தவறுக்காக ராஜா தனது தலையை துண்டிக்க முயன்றார்.
சிவபெருமானும் பார்வதியும் அவர் முன் தோன்றி தடுத்தனர்.
மன்னன் சிவலிங்கத்தை கண்டுபிடித்த இடத்தில் ஒரு கோவிலை கட்டி இறைவனுக்கு “முல்லைவன நாதர்” என பெயரிட்டான். இந்த லிங்கம் இன்றும் அரசனின் வாளால் வெட்டப்பட்ட தழும்புகளை தாங்கி நிற்கிறது.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இக்கோயிலின் கிணற்றில் புனித நதியான கங்கை ஊற்றெடுக்கிறது என நம்பிக்கை.
இது பஞ்சவனேஸ்வரம் கோவில்களில் ஒன்று. மற்ற 4
சிதம்பரம் சாயாவனம் திருவெண்காடு பல்லவநேச்சரம்
பெரிய தக்ஷிணாமூர்த்தி அழகு, கீழே சனகாதி முனிவர்களுடன்.
பிரகாரங்களில் ஸ்தல புராணத்தை சித்தரிக்கும் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
மூலவர் அம்பாள் சன்னதிகள் தவிர விநாயகர் சண்முகர் தக்ஷிணாமூர்த்தி மஹாலஷ்மி லிங்கங்கள் துர்க்கை நவகிரகம் சூரியன் சந்திரன் நால்வர் பைரவர் உள்ளனர்.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சரும நோய் நீங்குவதற்கும்,
பித்ரு சாந்தி செய்வதற்கும்
துன்பங்கள் அகலவும் பிரார்த்தனை.
மேலும் சந்திர சூரிய கிரஹணம், அமாவாசை காலங்களில் இங்கு வந்து பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது ஐதீகம்.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மாசி மகத்தன்று தீர்த்தவாரி சிறப்பு. மஹாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பிரதோஷம் பௌர்ணமி பூஜைகள் சிறப்பு.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பார்வதி தேவி, இந்திரன், யுதிஷ்டிரன், கார்கோடகன், சந்திரன், வாமதேவர், மார்க்கண்டேய மகரிஷி, கிள்ளிவளவன், சம்பந்தர், அப்பர், சேக்கிழார் முதலியோர்..
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சீர்காழிக்கு அருகே 13KM அமைந்துள்ளது, சீர்காழி மாயவரம் இருந்து நிறைய பேருந்துகள் உண்டு
7AM – 12NOON, 5PM – 8PM
98430 48780 ஆத்மநாத குருக்கள்
குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன்
நடமன்னு துன்னு சுடரோன்
ஒளிமண்டி யும்ப ருலகங் கடந்த
உமைபங்கன் எங்கள் அரனூர்
களிமண்டு சோலை கழனிக் கலந்த
கமலங்கள் தங்கு மதுவில்
தெளிமண்டி யுண்டு சிறைவண்டு பாடு
திருமுல்லை வாயி லிதுவே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply