திருச்சோபுரம் சோபுரநாதர் மங்களபுரீஸ்வரர்
மூலவர் : மங்களபுரீஸ்வரர் சோபுரநாதர்
அம்பாள் : தியாகவல்லியம்மை சத்யாயதாட்சி வேல்நெடுங்கண்ணி
ஸ்தல விருக்ஷம் : கொன்றை
தீர்த்தம் : கிணற்று தீ,
புராண பெயர் : திருச்சோபுரம் தியாகவல்லி
பாடல் : சம்பந்தர், சுயம்பு
38வது தேவார பாடல் பெற்ற சிவாலயம், நடுநாட்டு ஸ்தலம் 6
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
லிங்கத்தை அகஸ்தியர் அமைத்த போது ஏற்பட்ட கைத்தடமும் உள்ளது.
தக்ஷிணாமூர்த்தி சிலையை தட்டிபார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது. இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல் வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது மற்றும் ஒரு சிறப்பு.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஞ்சள் குங்கும வழிபாடு : இத்தலத்தில் சோபுரநாதர் சதுர வடிவ பீடத்தின் மீது, மணல் லிங்கமாக காட்சி தருகிறார். லிங்கத்தின் மேல் பகுதியில் உள்ள சிறிய உருண்டை போன்ற அமைப்பை, கங்காதேவியின் வடிவம் என்கிறார்கள். லிங்கத்தை அகஸ்தியர் அமைத்த பொழுது ஏற்பட்ட கைத்தடமும் இருக்கிறது.
மஞ்சளும் குங்குமமும் அம்பாள் வழிபாட்டிற்கு உரியது. ஆனால் திருமணத்தடை உள்ளவர்களும், நோயால் அவதிப்படுபவர்களும் சுவாமிக்கு குளியல் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து வழிபடுகின்றனர்.
அகஸ்தியர் அமைத்த லிங்கத்திலேயே அம்பாள் ஐக்கியமாகி விட்டதாகவும் அதன் காரணமாக சிவலிங்கத்திற்கு மஞ்சள் குங்கும வழிபாடு நடப்பதாகவும் ஐதீகம். எனவே மங்களபுரீஸ்வரர். பிற்காலத்தில் அம்பாளுக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். இவளை சத்யாயதாட்சி என்கின்றனர்.
தக்ஷிணாமூர்த்தி சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சில தலங்களில் கையில் வீணை ஏந்தியபடி இசைக்கு அதிபதியாக காற்று தரும் தக்ஷிணாமூர்த்தி இத்தலத்தில் இசையின் வடிவமாகவே அருளுகிறார். இவரது சிலையை தட்டிப் பார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது. வழக்கமாக வலது கையில் நாகமும் இடது கையில் அக்னியும் ஏந்தி இருக்கும் தக்ஷிணாமூர்த்தி இத்தலத்தில் இடது கையில் நாகமும் வலது கையில் அக்னியும் என மாற்றி வைத்துள்ளார்.
இசை பயிற்சி மாணவர்கள் இங்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இவர் ஞானம் அமைதி மற்றும் இசைக்கு அதிபதியாக இருப்பதாலும், மூலவர் சோபுரநாதர் மங்களம் தருபவராக இருப்பதாலும் இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல், வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது மற்றொரு சிறப்பு.
புதைந்த கோவில்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வங்கக் கடலின் கரையில் அமைந்த கோவில் இது. கடலே இத்தலத்தின் தீர்த்தம் ஆகும். மூலஸ்தானத்தில் ஸ்வாமி மேற்கு நோக்கி காட்சி தருகிறார். ஞானசம்பந்தர் சுவாமியை வணங்கி பதிகம்.
கோஷ்டத்தின் பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு இருபுறமும் மஹாவிஷ்ணு & பிரம்மா, இவரை வணங்கிய கோலத்தில் இருக்கின்றனர். மும்மூர்த்திகளின் தரிசனம் விசேஷமானது. பிரகாரத்தில் கண்ணப்ப நாயனார் காட்சியளிக்கிறார்.
இக்கோயில் பல்லாண்டுகளுக்கு முன்பு கடல் சீற்றத்தால் மணலால் மூடப்பட்டு விட்டது. பிற்காலத்தில் இக்கோயில் பற்றி அறிந்த, ‘ மதுரை ராமலிங்க சிவயோகி ‘ என்ற சிவ பக்தர் மணல்மேட்டில் தேடி, மனதில் புதைந்திருந்த கோவிலின் விமான கலசம் மட்டுமே மேலே தெரிய, மக்களின் ஆதரவோடு, மணல்மேட்டை தோண்டி, கோவிலை கண்டுபிடித்து கட்டுவித்தார். இன்றும் அம்பாள் கோவில் தெற்குப் பகுதியில் மண்மேடிட்டு புதைந்துள்ளதாவும் சொல்கின்றனர். இதனால் கோவிலுக்கு “தம்புரான் கண்ட கோவில்” என்ற பெயரும் வழக்கில் உள்ளது..
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கைலாயத்தில் பார்வதி பரமேஸ்வரன் திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த தென் திசை வந்தார் அகஸ்தியர். அவர் வரும் வழியில் பல இடங்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
வங்க கடற்கரை வழியாக சென்ற பொழுது அகஸ்தியருக்கு வயிற்று வலி, சிவனிடம் தன் வலி தீர்க்க முறையிட விரும்பி, கடல் மணலால் லிங்கம் அமைத்தார். ஆனால் எவ்வளவு முயன்றும் லிங்கத்தை சரியாக அமைக்க முடியவில்லை.
சிவன் தன்னை சோதிப்பதை உணர்ந்த அகஸ்தியர், அருகில் இருந்த மூலிகை செடிகளை பறித்து, அதன் சாறை மணலில் சேர்த்தார். அக்கலவையால் லிங்கம் அமைத்து வணங்கினார். வலி நீங்கியது. இந்த லிங்கம் இருந்த இடத்தில் தான் பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரகாரத்தில் சுப்ரமணியன், கஜலக்ஷ்மி, வீரட்டேஸ்வர லிங்கம், கண்ணப்பர், திரிபுவன சக்கரவர்த்தி, அவர் மனைவி வழிபட்ட லிங்கம், பைரவர், சூரியன், நவகிரகங்கள் முதலிய சன்னதிகள்.
5 கல்வெட்டுகள் உள்ளன. சோழர் பாண்டிய கல்வெட்டுகள் கோவிலுக்கு நிலம் விட்ட செய்தியையும், தொண்டைமா நல்லூரை கோவிலுக்கு தானமாக அளித்த செய்தியையும் தெரிவிக்கின்றன.
கடலுக்கு மேற்கில், தொண்டைமா நத்தத்திற்கு கிழக்கில், பெண்ணை ஆற்றுக்கு தெற்கில், வெள்ளாற்றுக்கு வடக்கில் உள்ள நிலங்கள் கோயிலுக்குரிய பட்டா நிலக்கலாக இருந்தனவென்றும், அவைகளை அரசு எடுத்துக்கொண்டு அதற்குரியதாக ஆண்டுதோறும் கோவிலுக்கு ரூ.600/- மட்டும் தருவதாக தெரிகிறது.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இசை பயிற்சி மாணவர்கள் விசேஷ பூஜை செய்து வேண்டுதல்
வயிற்று வலி நீங்க & வேறு நோயால் அவதிப்படுபவர்களும்
வேண்டுதல்
திருமணத்தடை நீங்க சுவாமிக்கு குளியல் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து வேண்டுதல்.
கல்வி மற்றும் கலை சிறக்க வேண்டுதல்
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சித்திரை வசந்த உற்சவம்
பங்குனி உத்திர பெருவிழா சிறப்பு & சிவராத்திரி திருக்கார்த்திகை ஆருத்ரா தரிசனம் அன்னாபிஷேகம்..
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஹாவிஷ்ணு, பிரம்மா, அகத்தியர், காகபுஜண்டரிஷி, திரிபுவன சக்கரவர்த்தி மற்றும் தியாகவல்லி (அரசி), இராமலிங்க சிவயோகி தம்பிரான் சுவாமிகள், சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார் ஆகியோர்
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கடலூர் சிதம்பரம் சாலையில் 13 KM, ஆலப்பாக்கம் கேட், உப்பங்கழி மேல்பாலம் தாண்டி சவுக்கு தோப்பு அருகே. பேருந்து வசதி உண்டு.
7AM – 11AM 5PM – 8PM
93452 52769 யோகேஸ்வரன் குருக்கள்
97905 24054 சோபுரநாதர் குருக்கள்
கிராமத்து கோவில் என்பதால் குருக்களை அழைத்துவிட்டு சொல்வது சிறப்பு.
கோயில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வெங்கண் ஆனை யீருரிவை
போர்த்துவிளங் குமொழி1
மங்கைபாகம் வைத்துகந்த
மாண்பதுவென் னைகொலாம்
கங்கையோடு திங்கள்சூடிக்
கடிகமழுங் கொன்றைத்
தொங்கலானே தூயநீற்றாய்
சோபுரமே யவனே.
ஞானசம்பந்தர்


Leave a Reply