திருவோத்தூர் செய்யாறு வேதபுரீஸ்வரர்
மூலவர் : வேதபுரீஸ்வரர் வேதநாதர்
அம்பாள் : இளமுலையம்பிகை, பால குஜாம்பிகை
ஸ்தல விருக்ஷம் : பனைமரம்,
தீர்த்தம் : மானச தீ, கல்யாண கோடி திருக்குளம்.
பாடல் : ஞானசம்பந்தர், சுயம்பு,
தேவார பாடல்பெற்ற சிவாலயம்
& தொண்டை நாட்டு ஸ்தலம் 8,
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மூலவர் மீது தினமும் சூரிய ஒளி படுவது விசேஷம். ரதசப்தமி அன்று சூரிய ஒளிக்கதிர் விழும்.
ஒரே இடத்தில் இருந்து தரிசிக்கலாம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வேறு எந்த தலத்திலும் காண இயலாத அரிய சிறப்பம்சம் இது
கோவிலின் மஹாமண்டபத்தில் நின்று ஸ்வாமி, அம்பாள், விநாயகர்,முருகன், நவகிரஹம், ஸ்தல விருக்ஷம் என இவை அனைத்தையும் காணலாம்.
சிவபக்தனான தொண்டமான் என்ற மன்னனுக்காக சிவனின் ஆணைப்படி நந்திதேவர் படைத்துணையாக சென்றுள் ளார். எனவே இங்கு நந்தி, எதிர் திசையில் திரும்பி உள்ளார்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இத்தலத்தில் 9 வாயில்களை கடந்து மூலவரை தரிசிக்க முடியும்.
ஸ்வாமி மீது தினமும் சூரிய ஒளி படுவது விசேஷம். ரதசப்தமி அன்று சூரிய ஒளிக்கதிர் விழும்.
பஞ்சபூத தலங்கள் அனைத்து க்கும் தனி தனி சந்நிதிகள் இருப்பதால் பஞ்சபூத தலங்கள் அனைத்தையும் இத்தலத்தில் ஒரு சேர தரிசிக்க முடியும்.
8 கோபுரங்களையும் ஒரே இடத்தில் இருந்து தரிசிக்க முடியும்.
நந்தி- மூலவரை நோக்காது வாயிலை பார்த்தபடி இருக்கிறார் ஈசன் தேவர்களுக் வேதபொருள் விளக்கி கொண் டிருந்தபோது இடையூறு வராமல் இருக்க வேறு யாரையும் உள்ளே விடாது பார்த்துக் கொள்ள நந்தி வெளிப்புறம் நோக்கியுள்ளார் என்று தலபுராணம் கூறுகிறது.
மேலும் ஒரு வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விசுவாவசு எனும் மன்னனின் வலிமைக்கு ஆற்றாது தோற்று ஓடி காட்டில் திரிந்த தொண்டைமான் வேதபுரீஸ்வரரை துதித்து வணங்கினான்.
இறைவன் காட்சி தந்து, அவனுக்கு அதிக பலத்தையும் சேனைகளையும் அருளி விசுவாவசுவுடன் போரிட்டு மீண்டும் தன் அரசை எய்துமாறு பணித்தார்.
கேட்ட மன்னன் எங்கனம் போரிடுவேன் என்று அஞ்சிய போது, ‘நந்தி உனக்கு படைத்துணையாக வருவார். நீ அதற்கு முன்பாக யாம் கொடுத்த சேனைகளோடு சென்று போரிடுவாயாக’ என்றார்.
மேலும், நாம் கூறியதில் உன் மனதிற்கு சந்தேகம் இருப்பின் சாட்சி காட்டுகிறேன், நீ போய் பார், “அந்த நந்தி தேவன் கீழ்திசை நோக்கி இருக்கின்றார் என்றார். அவ்வாறே தொண்டைமான் வந்து பார்க்க (அவனுக்கு படை துணையாகும் நிலையில்) மேற்கு நோக்கி இருந்த நந்தி தேவர், கீழ் திசையில் திரும்பி இருப்பதை கண்டு பயம் நீங்கினான்.
இறைவன் நந்தியை தளபதியாக்கி, சிவகணங்களை குதிரைகள், யானைகள், தேர்கள், சேனைகளாக செய்து தந்து, தொண்டைமானை போருக்கு அனுப்ப அவனும் அவ்வாறே சென்று விசுவாவசுவை வென்று நாட்டாட்சியை அடைந்தான்.
ஞான சம்பந்தரின் 11 தேவார பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த தலம். அருணகிரிநாதர் பாடல்.
அம்பாள் கையில் ருத்ராக்ஷ மாலையும், மற்றொரு கையில் தாமரை மொட்டும், அபய ஹஸ்தம், வரத ஹஸ்தம் ஆகியவற்றோடு காட்சி தருகிறார்.
பனைமரம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இத்தலம் சேயாற்றின் கரையில் உள்ளது. ஆற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு அதனால் கோவிலின் சுவர்கள் பாழானது. இதனால் வருத்தமான சிவனடியார் ஒருவர் ஆற்றின் கரையை உயர்த்தி, கரை கரைந்து போகாமல் இருக்க, பனங் கொட்டைகளை நட்டு பனைமரங்களை வளர்த்து வந்தார்.
பனை மரங்கள் அனைத்தும் ஆண் பனைகளாக இருந்தன. இதனால் நுங்கு முதலிய பயன்கள் கிடைக்கவில்லை. இதை கண்ட சிலர் சிவனடியார்களிடம், “எல்லாம் ஆண் பனையாக இருக்கிறது. ஒரு பெண்பனை கூட இல்லை. உமது சிவனின் அருள் இது தானோ..? என கேலி செய்தனர்.
இதனால் வருத்தம் அடைந்த சிவனடியார், ஞான சம்பந்தர் இங்கு வந்த போது கூற, உடனே ஞானசம்பந்தர் பதிகம் பாடினார் இறுதிப் பாடலில், “குரும்பை ஆண் பனை ஈன்குலை ஓத்தூர்” என முடித்தார்.
அப்போது ஆன்பனைகள் பெண் பனைகளாக மாறி குலை தள்ளின. இந்த அதிசயத்தை கண்ட கேலி செய்தவர்கள் சைவர்களாக மாறினார்.
தேவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஒரு சாபத்தினால் இத்தலத்தில் பனை மரங்களாக பிறந்து சாப விடுதலைக்காக காத்திருந்தனர். அப்போது சம்பந்தரின் இறையருளால் ஆண்பனையை பெண் பனையாக்கினார். இவை அனைத்தும் ஒரு கால கட்டத்தில் சிவபதம் பெற்றன. இதற்கு சான்றாக அம்மன் சந்நிதிக்கு முன் கருங்கல் பனைமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.
நாகநாதர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது செய்யாற்றை சுற்றியுள்ள சமணர்கள் ஒரு வேள்வி செய்து, அதிலிருந்து கொடிய பாம்பை சம்பந்தர் மீது ஏவினர். சம்பந்தர் சிவனை வேண்டினார். உடனே சிவன் பாம்பாட்டியாக வந்து பாம்பை பிடித்து மறைந்தார். இதனால் இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
11 தலையுள்ள இதை சனிக்கிழமை ராகு காலத்தில் வழிபட்டால் தோஷங்கள் விலகும்.
சுந்தரர் இந்த வழியாக வந்து கொண்டிருந்த பொழுது, நண்பகல் பசியில் களைப்படைய, சிவபெருமான் ஒரு முதியவர் வடிவில் சென்று பசியாற உணவு கொடுத்தார்.
அவரிடம் சுந்தரர் உணவு கொடுத்த நீங்கள் பருகுவதற்கு நீரும் தர வேண்டும் என கேட்க, நீர் கிடைக்கும் என்றும் முதியவர் நகர, அவ்விடத்திலிருந்து நீரூற்று துவங்கியது.
சுந்தரர் முதியவர் சென்ற திசையில் கால் தடம் பார்த்து (நந்தியின்) இத்தலத்தை வந்தடைந்து பதிகம் பாடினார். இந்த தீர்த்தம்
சுந்தரர் தீர்த்தம். மாசி மாத பிரம்மோற்சவத்தில் தீர்த்தத்தில் கட்டமுது படைக்கும் விழா நடக்கிறது.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தக்ஷன் யாகம்- ஈசனை அழைக்கவில்லை- பார்வதி தேவி, சிவனையும் மீறி யாகத்திற்கு சென்று அவமானம். இந்த பாவ செயல் தீர இத்தலத்தில் தங்கி தவம் செய்து இறைவனுடன் இணைந்தாள்.
ஸ்தல விருக்ஷமாகிய பனைகள், இன்றும் காய்த்து கனிந்து குலுங்கி எழிலோடு விளங்குகி ன்றன. அப்பனையின் இனிய கனிகளை உண்பார், குழந்தை பாக்யம் பெறுவர். பிணியுடையவர் பிணி நீங்க பெறுவர்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவபெருமான் இத்தலத்தில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேத பொருளை விளக்கி அருளிய காரணத்தால் இத்தலம் திருவோத்தூர் எனப்பட்டது. தற்போது திருவத்திபுரம் என அழைக்கப்படுகிறது.
ஓத்து என்றால் வேதம்.
ஓதப்படுவதால் வேதம் ஓத்து எனப்படுகிறது.
இத்தலத்தில் விநாயகர் முருகன் வைரவர் பிரம்மா மஹாவிஷ்ணு சூரியன் தொண்டைமான் வழிபாடு. இங்கு சிவன் வீர நடனம் புரிந்துள்ளார்.
சேயாறு
( சேய் = மகன், இலக்கியத்தில் சேயோன் = முருகன் )
முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டு இத்தலத்தின் தீர்த்தமாக உள்ளது. இப்போது இந்த ஊர் செய்யாறு என அழைக்கப்படுகிறது.
*இத்தல விநாயகர் = நர்த்தன விநாயகர், முருகன் = சண்முகர்.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நாக தோஷ நிவர்த்தி ராகு கேது பரிகாரம்,
திருமணத்தடை நீங்குதல்,
குழந்தை பாக்கியம்,
ஞானம் கல்வி வளர
பஞ்சபூத ஸ்தலங்களின் அருள் பெற
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தை மாத பிரம்மோற்சவம் 10 நாள்
ஆடி விசாகம்
மாசி மஹா சிவராத்திரி
பங்குனி உத்திரம் மற்றும் பௌர்ணமி பிரதோஷம் சிறப்பு
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விநாயகர் முருகன் மஹாவிஷ்ணு பிரம்மா, சூரியன், பைரவர், தொண்டைமான், தேவர்கள் முனிவர்கள், வாசுகி, சம்பந்தர், அப்பர், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் முதலியோர்
அமைவிடும்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
செய்யாறு பேருந்து நிலையத்திலிருந்து திருவத்திபுரம்1.5 KM,
7AM to 12 NOON, 4PM – 8PM
94433 45793 கந்தசுவாமி குருக்கள் & 04182 224387
8508507965 ஜெகதீஷ் ஆபீஸ்
குருக்களை தொடர்பு கொண்டு விட்டு செல்வது சிறப்பு
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி
ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்
ஓத்தூர் மேய வொளிமழு வாள்அங்கைக்
கூத்தீ ரும்ம குணங்களே.
ஞான சம்பந்தர்.


Leave a Reply