ஆடுதுறை தென்குரங்காடுதுறை ஆபத்சகாயேஸ்வரர்
மூலவர் : ஆபத்சகாயேஸ்வரர்
அம்பாள் : பவளக்கொடிம்மை / பிரபாளவல்லி
ஸ்தல விருக்ஷம்:பவளமல்லிகை
தீர்த்தம் : சகாய தீ, சூரிய தீர்த்தம் கோவில் எதிரில்
புராண பெயர் : தென் குரங்காடு துறை
பாடல் : அப்பர் சம்பந்தர்,
சுயம்பு, தேவாரப் பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 31
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கருவறைச் சுற்றிலுள்ள அண்ணாமலையார் கண்களும் முருகப்பெருமான் கண்களும் நேருக்கு நேராகச் சந்திப்பது போன்ற அமைப்பு இத்தலத்தின் அரிய சிறப்பாகும்.
இங்குள்ள நவக்கிரக சந்நிதியில் அனைத்து கிரகங்களும் சூரிய பகவானை நோக்கியவாறு தனித்துவமாக அமைந்துள்ளன.
தந்தையும் மகனுமான சூரியனும் சனியும் இங்கு இணைந்துள்ளதால், இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு தந்தை-மகன் உறவு மேம்படும் என்பது நம்பிக்கை.
தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடிய தலம் என்பதால், நடனக் கலைஞர்கள் வழிபட வேண்டிய முக்கியத் தலமாக இது விளங்குகிறது.
அகஸ்திய முனிவரால் இத்தலத்தில் சொர்ண பைரவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். தொழில் மற்றும் பொருளாதாரத் தடைகள் நீங்கி வளம் பெற இவரை வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது
ஆண்டுதோறும் சித்திரை மாதம் 5, 6, 7 ஆகிய தேதிகளில் மிகவும் விசேஷமான சூரிய பூஜை நடைபெறுகிறது. பெரும்பாலான சிவாலயங்களில் சூரிய கதிர்கள் நேரடியாக மூலவர் லிங்கத்தின் மீது விழும். இத்தலத்தில் சூரிய கதிர்கள் முதலில் கோவிலுக்கு எதிரே உள்ள சூரிய தீர்த்த குளத்தின் நீரில் பட்டு பிரதிபலித்து, அதன் பின் கருவறையில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் லிங்கத் திருமேனியைத் தழுவி ஆராதிக்கும் வண்ணம் மிக விந்தையான கட்டடக்கலை அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது.
இந்த அரிய நிகழ்வு நடக்கும் சித்திரை மாதத்து மூன்று நாட்களிலும் இறைவனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சூரிய பகவானுக்குத் தனி வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.
இக்கோவிலின் கருவறை நான்கு பக்கங்களிலும் அகழி போன்ற அகன்ற பள்ள அமைப்பால் சூழப்பட்டுள்ளது.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பைரவரும் அகஸ்தியரம் வழிபட்ட ஸ்தலம். இறைவன் தில்லையில் ஆனந்த நடனம் ஆடியருளினார். இதைக் கண்டு களிக்க முடியாத அகஸ்தியரும் ஏனைய முனிவர்களும் வேண்டிக் கொண்டதற்கு இணங்க குரங்காடுதுறை குலகனார் ஆனந்த நடனம் ஆடி அருளினார். தெற்கு பிரகாரத்தில் அகஸ்தியர் நடராஜர் புடைப்பு சிற்பங்கள் சிறப்பு.
அகஸ்தியர் இங்கு ஸ்வர்ண பைரவர் திருவுருவத்தை பிரதிஷ்டை செய்து பல வரங்களை பெற்று மகிழ்ந்தார். சொர்ண பைரவரை சிறப்போடு பூஜை செய்து, அன்போடு வழிபட்டால் நினைத்த காரியம் எளிதில் கூடும். தீராத நோய்கள் தீரும். தனம் தானியம் பெருகும். புகழ் உண்டாகும்.
ஹனுமார் : முன்னொரு சமயம் திருக்கயிலை மலையில் கல்லும் கரைந்து உருகும்படி இசை பாடிக் கொண்டிருந்தார் அனுமார். அவ்வழியே வந்த நாரதர் இந்த இசையை கேட்டு மெய் மறந்து அங்கே அமர்ந்திருந்தார். பிறகு அவர் புறப்படும் போது கீழே வைத்திருந்த மகதி என்னும் வீணை மீது பனி மூடியதால் எடுக்க இயலாமல் புதைந்திருந்தது. அது கண்ட நாரதர் வெகுண்டு அனுமனை நோக்கி, உன் இசையை நீ மறப்பாயாக என்று சபித்தார். பின்னர் மனம் வருந்திய அனுமன் தன்னுடைய மன்னவன் சுக்ரீவன் வழிபட்ட இங்கு வந்து ஆபத்தசகாயேஸ்வரரை வணங்கி மனம் உருகி வழிபட்டு மறந்து போன இசைஞானத்தை மீண்டும் பெற்று களிப்படைந்தார்.
ஹரதத்தர் : கஞ்சனூர் வைஷ்ணவர் சிவ பக்தர். கஞ்சனூர் தக்ஷிணாமூர்த்தி மூலம் சிவஞானம் பெற்றவர். பழுக்க காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமரவைக்கப்பட்டு
சிவப் பரத்துவத்தை ஸ்தாபித்தார்.
தினமும் கஞ்சனூர் திருக்கோடிக்கா திருவாலங்காடு திருவாவடுதுறை ஆடுதுறை திருமங்கலக்குடி திருமாந்துறை – 7 சிவதலம் தரிசித்த பின்னரே உணவு – ஒரு நாள் அடைமழை – இருட்டு. வயது மூப்பினால் இவருக்கு கண்
தெரியவில்லை, இருட்டில் நடக்க முடியவில்லை. அப்போது ஆபத்சகாயேஸ்வரரே வயோதிக அந்தண வடிவம் கொண்டு கோல் தாங்கிய கையினராய் வழித் துணையாக வந்து அவர் இல்லத்தில் விட்டார். அர்ச்சகர் கையில் இருந்த பிரசாதத்தை அவருக்கு கொடுத்துச் சென்றார். இவ்வளவு தூரம் துணைக்கு வந்தாரே என்று அவருக்கும் இவர் ஒரு கை கொடுக்க, மறுநாள் மூலவரின் வாயில் பிரசாத பருக்கை ஒட்டி கொண்டிருந்தது.
திருமங்கலக்குடி : வைணவப் பெண் சிவ பக்தர் நிறைமாத கர்ப்பிணி, ஆடுதுறை தரிசனம்
காவிரியில் வெள்ளம், பிரசவ வலி
ஆலயம் மீண்டு அரனை வேண்ட
தாயாகத் தோன்றி சுகப்பிரசவம். அவரே திருமங்கலக்குடி சென்று சுகப்பிரசவ செய்தியை சொல்லி அழைத்து வர சென்றார்
தாங்கள் எந்த ஊரினர் என்று வினவ
“மருத்துவக்குடி “
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுக்ரீவன் இங்கு சிவபெருமானை வழிபட்டு வரும் நாளில் பகைமை காரணமாக சுக்ரீவனை தேடிக்கொண்டு வாலி வந்தான். மிகவும் வல்லமை படைத்த அந்த வாலிக்கு அஞ்சிய சுக்ரீவன் ஆடுதுறை அரணை அடைக்கலம் புகுந்து வேண்டினான். அப்போது சிவபெருமான் சுக்ரீவனை அன்னப்பறவை ஆகவும் அவன் தேவியை பாரிஜாத மலராகவும் (பவளமல்லி) வேற்றுரு கொள்ளச் செய்து காப்பாற்றியருளினார்.
சுக்ரீவனுக்கு வந்த ஆபத்தை போக்கியருளி அவனுக்கு சகாயம் செய்தமையால் இறைவன் ஆபத்சகாயேஸ்வரர். அம்மையின் திருநாமம் பிரபாளவல்லி என்றும் பவளக்கொடி என்றும் வழங்கப்படுகின்றது.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கோயில் இரண்டாம் வாயிலுக்கு முன்னே பவளக்கொடி & மூத்த பிள்ளையார். உள்ளே சென்றால் எதிரில் மேல்மாட பகுதியில் சுக்ரீவன் இறைவனை வணங்கும் காட்சியும் சுக்ரீவனை இறைவன் அன்னப்பறவையாக வும் அவன் தேவியை பாரிஜாத மரமாகவும் உருமாற்றிய வரலாற்றுக் காட்சி சுதை வேலைப்பாட்டில்.
3ம் வாயில்
பலிபீடம் நந்தி, புடைப்புச் சிற்பமாக துவார பாலகர்கள் விநாயகர். மூலஸ்தானத்தில் ஆபத்சகாயேஸ்வரர். தெற்குப் பக்கத்தில் பாதுகாப்பாக பஞ்சலோக நடராஜர். அழகான உபசன்னதிகள். வடக்கில் அஷ்டபுஜ துர்கை அருகில் கங்கா விசரத்தன மூர்த்தியும் பைரவ மூர்த்தியும் அருமையான புடை சிற்பம்.
3 நிலைகளுடன் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி உள்ளது. முன் மண்டபத்தில் தல பதிக கல்வெட்டு உள்ளது. இங்கு 15 கல்வெட்டு
13 சோழ 2 பாண்டியர். கண்டராதித்தர் மனைவி செம்பியன் மாதேவியார் இக்கோயில் கற்கோயிலாக ஆக்கினார்.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆபத்துகள் நீங்க
குடும்ப உறவு மேம்பட
செல்வ வளம் பெருக
நினைத்த காரியம் கைகூட
சத்ரு பயம் நீங்க
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பங்குனி உத்திரத் திருவிழா
குருபெயர்ச்சி பெருவிழா
துர்க்கையம்மன் திருவிழா
மற்றும் பிரதோஷம் பௌர்ணமி சிறப்பு
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பைரவர் அகத்தியர் தேவர்கள்
சுக்கிரீவன், அநுமான், வாலி. ஹராதத்தர், அப்பர், சம்பந்தர், சேக்கிழார் முதலியோர்.
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் அனைத்துப் பேருந்துகளும் ஆடுதுறை வழியாகவே செல்கின்றன. ஆடுதுறை பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
திருவிடைமருதூர் 4KM
திருவாவடுதுறை 6KM
கும்பகோணம் 13KM
7.30AM – 12NOON, 5.30PM-8.30PM
___
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பரவக் கெடும், வல்வினை பாரிடம் சூழ,
இரவில் புறங்காட்டுஇடை நின்று எரிஆடி;
அரவச் சடை அந்தணன்; மேய, அழகு ஆர்
குரவப்பொழில் சூழ், குரங்காடுதுறையே.
ஞானசம்பந்தர்


Leave a Reply