திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர்

🪷மூலவர் : புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர்

அம்பாள் : சௌந்திர நாயகி, அழகாலமர்ந்த நாயகி

ஸ்தல விருக்ஷம் : வில்வம்

தீர்த்தம் : சூரிய தீ, காசிப தீ, கங்கை, காவிரி, அக்னி தீ

ஊர் : மேலை திருப்புபூந்துருத்தி பாடல் : அப்பர்

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 11.

🪷 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷சப்தஸ்தான ஸ்தலங்களில் ஒன்று.

🌷அப்பரும், சம்பந்தரும் உழவார தொண்டு செய்த தலம்.

🌷அப்பருக்கு இறைவன் காட்சி தந்த தலம்.

🌷இத்தலத்தில் நந்தி விலகியுள்ளது.

🌷கோஷ்ட மூர்த்தங்களில்

வீணா தக்ஷிணாமூர்த்தி திருமேனி மிகவும் சிறப்பானது. 🌷மகிஷனை அழித்த பாவத்தை போக்க ஒற்றை காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அமர்ந்த கோலத்தில் அப்பர் பெருமானும், பூந்துருத்தி காடவரம்பியின்

திருவுருவமும் தரிசிக்க சிறப்புடையன.

🌷பூந்துருத்தி காடவரம்பி அவதார தலம்.

🌷காசிப முனிவரின் கடும்

தவத்திற்கு மகிழ்ந்து இறைவன் இங்குள்ள கிணற்றில் 13 புண்ணிய நதிகளையும் பொங்கி எழ செய்து ஆடி அமாவாசையன்று காட்சி தந்த தலம்.

🌷இங்கு அமாவாசை கிரிவலம் சிறப்பு.

🌷இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

🪷 ஸ்தலப் பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷இந்திரன் மலர்வனம் அமைத்து வழிபாடு செய்து சாபம் நீங்க பெற்றான்.

🌷கழுகு உருவம் பெற்ற விஞ்ஞயர் இருவர் இத்தலத்தை அடைந்து மலர் வழிபாடு செய்து தம் உண்மை உருவம் பெற்றனர்

🌷ஆற்றிடை துறையிலுள்ள ஊர்கள் “துருத்தி” என்று பெயர் பெறும்.

🌷இத்தலம் காவிரிக்கும் குடமுருட்டிக்கும் இடையில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. (மயிலாடுதுறை பக்கத்தில் உள்ள குத்தாலமும் துருத்தி என வழங்கப்படுகிறது )

🌷அப்பர் உழவார தொண்டு செய்த தலமென்று எண்ணி, காலால் மிதிக்கவும் அஞ்சி வெளியில் நின்ற சம்பந்தருக்கு இறைவன் நந்தியை விலக செய்து காட்சி தந்ததாக தல புராணம் கூறுகிறது.

🌷சம்பந்தர் அப்பரை காண இத்தலத்திற்கு வந்தபோது அப்பர் ஒருவரும் காணாதபடி ஞானசம்பந்தரின் பல்லக்கை தன் தோளில் சுமந்த தலம். இவ்விடம் சம்பந்தர் மேடு என்று வழங்ககுகிறது.

🌷திருவாலம்பொழிலுக்கு பக்கத்தில் வெள்ளாம் பிரம்பூரையடுத்து இம்மேடு உள்ளது. அங்கு

இருவருக்கும் கோவில் கட்டப்பட்டு விழா நடைபெறுகிறது.

🌷அப்பர் அமைத்து திருப்பணிகள் செய்து வந்த “திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம்” என்று புகழப்படும் திருமடம் உள்ள தலம், கோயிலுக்கு எதிரில் சற்று தள்ளி உள்ளது.

🌷ஊர் பெரியது.மேலை, கீழை என 2 பிரிவுகள். மேலை பூந்துருத்தியில் தான் கோயில் உள்ளது.

🪷 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷முற்காலத்தில் அகத்தியர் கமண்டலத்தை காகம் கவிழ்க்க, அதிலிருந்து தோன்றிய காவிரி ஆறாக கிழக்கு நோக்கி ஓடி, செந்தலையிலிருந்து அந்திலி, வெள்ளாம்பிரம்புர், ஆற்காடு, கண்டியூர், திருச்சோற்றுத்துறை , திருப்பழனம், திருவையாறு, திருநெய்தானம், சாத்தனூர் வரை சூழ, இடைப்பட்ட இடங்களில் கடல் போல் தேங்கி நின்று விட்டது. இதற்கிடையில் உள்ள கோனேரிராஜபுரம், கருப்புர், நடுக்காவேரி, திருவாலம்பொழில், திருப்பூந்துருத்தி முதலிய ஊர்கள் எல்லாம் நீர் நிலையில் மூழ்கி இருந்தன .

🌷இந்திரன் ஐயாரப்பரை வழிபட்டு காவிரியை அவர் அருளால் கிழக்கு நோக்கி அழைத்து சென்று கழுமலப் பூங்காவை வளப்படுத்தினான்.

🌷அவ்வாறு காவரி கிழக்கு நோக்கி ஓடுகையில் முதலில் காணப்பட்ட நிலப்பகுதி கண்டியூர். பின்னர் ஆற்று வண்டலும் மணலும் படிந்ததால் தோன்றியது திருப்பூந்துருத்தி. அதற்கு மேற்கே ஆலமரம் இருந்ததாக காவிரி எக்கல் நிறைந்து மேடிட்ட பகுதி நிலம் மென்மையாக பூப்போல இருந்ததாலும் மலர் வாட்டத்தில் நிலம் அமைந்திருந்தாலும், இந்நிலப்பரப்பை பூந்துருத்தி என்று வழங்கி வந்தனர்.

இதனை பொருந நீர்வரு புந்துருத்தி என்று அப்பர் கூறுகிறார்.

🌷இந்திரன் கௌதமர் சாபத்தால் உடம்பெல்லாம் ஆயிரம் குறிகள் தோன்ற

பெற்ற சாபத்தை திருக்கண்ணார் கோயிலில் வழிபட்டு பிறருக்கு

கண்களாக தெரிய வரம் பெற்றான்.

🌷உடலெல்லாம் கண்களாக தோன்றிய அந்நோயும் தீர வேண்டி பல தலங்களையும் சுற்றி வழிபட்டு வரும்போது,

மலர்க்காட்டிடையே மஹாதேவன் உருவம் இத்தலத்தில் இருக்க கண்டு “பூ வின் நாயகனாய் விளங்கிய பரமனை மலர்கள் கொண்டு வழிபாடு செய்து நோய் நீங்கி, மலர் போல் துாய நல்லுடல் பெற்றான். ஆதலால் இப்பெயர் வந்தது.

🌷தேவர்கள் எல்லாரும் மலர் கொண்டு இறைவனை இத்தலத்தில் வழிபட்டதால்

இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர். இதனை அப்பர் பாடியுள்ளார்.

🌷திருமாலும் திருமகளும் இவ்வூர் இறைவனை வழிபட்டனர் என்பதை ராஜகோபுர சிற்பம்

காட்டுகிறது. பூமகள் வழிபட்டதால் “பூந்துருத்தி” என்றும் கூறுவர்.

🌷திருமழப்பாடி நந்திதேவர் திருமணத்திற்கு மலர்கள் தந்து உதவியதாகவும்

அதற்கு நந்திதேவர் வந்து நன்றி கூறுவதாகவும் அமைந்த விழாவே ‘ஏழுர்

வலம் வரும் விழா”/ சப்தஸ்தான விழா’ என்பர்.

🌷ஆதலால் மலரோடு இத்தலம் தொடர்புடையது, நன்கு பொருந்துவதை காணலாம்.

🌷சோழநாட்டில் சில இடங்கள் மலர் தோட்டங்களாக இருந்துள்ளன. அவ்விடங்கள் மலரி என்றும்

மலர்காடு என்றும் வழங்கி வந்துள்ளன.

🪷 ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷 கிழக்கு நோக்கி 5 நிலை ராஜகோபுரத்துடன் கோவில். நந்தியும் பலிபீடமும் சற்று விலகி காணப்படுகிறது.

🌷நாரதருக்கு நாதோபதேசம் செய்த தக்ஷிணாமூர்த்தி👉

சப்தஸ்தான தலங்களுள் ஒன்றான இத்தலத்தில் வீணை ஏந்திய தக்ஷிணாமூர்த்தியின் அபூர்வக் கோலத்தை நாம் தரிசிக்கலாம். இவர், வீணையேந்தியபடி யோக நெறியை மேற்கொண்டு, அந்த வீணை நாதத்தில் மனமொருமித்த நிலையில் அருள்கிறார். நாரத முனிவருக்கு நாதோபதேசம் செய்த அருட்கோலம் இது.

ஒரு சமயம், ஒலி எனும் நாதத்தின் உற்பத்தி ஸ்தானமான நாதப்பிரம்மம் எத்தகையது என கந்தர்வர்களும், தேவர்களும், நாரதரும் சிவபெருமானிடம் வினவ, சிவபெருமான் பூந்துருத்திக்கு வருக எனப் பணித்தார். அங்கே தானும் எழுந்தருளி, வீணையை ஏந்தி மீட்ட, நாதத்தின் மையத்தோடு யாவரும் கலந்தனர்.

🌷சரசுவதி சிவபெருமானுக்கு பரிசாக அளித்த வீணை 👉

ஒரு சமயம் கல்விக் கடவுளான சரசுவதிக்கும், சிவபெருமானுக்கும் விவாதப் போட்டி நடைப்பெற்றது. அதில் சிவபெருமான் வெற்றி பெற்றார். சிவபெருமானின் வாதத் திறமையைக் கேட்டு மனம் மகிழ்ந்த சரசுவதி தன் கையிலிருந்த வீணையை அவருக்கு பரிசாக அளித்து விட்டாள்.

🌷இசைக்கலைஞர்களுக்கு அருளும் வீணா தக்ஷிணாமூர்த்தி 👉

இசைக்கலைஞர்கள் தங்கள் இசைக் கருவிகளை இவர் முன் வைத்து தங்கள் கலையில் முன்னேற்றம் பெற இவரை வழிபடுகின்றனர்.இந்த தக்ஷிணாமூர்த்தியை வழிபட, அவர்களின் கலைத் திறன் மேன்மையடைகிறது.

🪷 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருமணத்தடை நீங்க

குழந்தை பாக்கியம்

கல்வி மற்றும் அறிவு

பித்ரு தோஷம் மற்றும் பாவங்கள் நீங்க

🪷 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருவையாறு சப்தஸ்தான விழா

மாசி மகம் / பாரிவேட்டை

மஹா சிவராத்திரி

ஆடி அமாவாசை

🪷 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருமால், இலக்குமி, இந்திரன், சூரியன், காசிபர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், பூந்துருத்திநம்பி காடநம்பி, சேக்கிழார் ஆகியோர்.

🪷அமைவிடம்,நேரம்,தொடர்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தஞ்சாவூர் – திருக்காட்டுப்பள்ளி சாலையில் கண்டியூர் வழியாக இத்தலத்தை அடையலாம்.திருவையாறு மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இருந்து நகரப் பேருந்து (Town Bus) வசதிகள் உள்ளன.

திருவையாறு 6 KM

திருஆலம்பொழில் 1.5 KM

10AM – 12NOON

97914 80824 சரவணன் குருக்கள்

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

🪷 கோவில் தேவாரப் பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மாலினை மாலுற நின்றான்

மலைமகள் தன்னுடைய

பாலனைப் பான்மதி சூடியைப்

பண்புண ரார்மதின்மேற்

போலனைப் போர்விடை யேறியைப்

பூந்துருத் திமகிழும்

ஆலனை ஆதிபு ராணனை

நானடி போற்றுவதே. 1

திருநாவுக்கரசர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *